தடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II
மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது. எத்தனைபேர் இரவு நித்திரை கொண்டிருப்பார்களென்று தெரியவில்லை. எந்நேரமும் ‘லைன்’ பண்ணக்கூடியவாறு அனைவரும் தயாராகவே இருந்தார்கள். நான்குமணிவரை புதிதாக வந்து சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி நடந்தபடிதான் இருந்தது.
எல்லோரையும் வரச்சொன்னார்கள். தேவராஜ் அண்ணைதான் கதைத்தார். எல்லோரையும் குளத்தடிக் கோவிலுக்குச் சென்று ஒதுக்குப்புறமாக நிற்கும்படி சொல்லப்பட்டது. நாங்கள் அணியணியாக நடந்தே சென்றோம். விசுவமடுக் குளத்தின் ஒரு தொங்கலில் காட்டுக்குள் சற்று உட்பக்கமாக ஒரு சைவக் கோவில் இருந்தது. மிகப்பெரிய ஆலமரமொன்றில் அடியில் ஒரு சிறுபீடமும் அதில் கடவுளின் சிலையொன்றும் இருந்தது. கடவுள் யாரெனச் சரியாகத் தெரியாது, அனேகமாய் காளியாகவோ வைரவராகவோ இருக்க வேண்டும். பெரிய சூலமும் வேறு சிலவும் அக்கடவுளுக்குரிய பொருட்களாய் அங்கிருந்தன. முன்பே அப்பகுதி எமக்குப் பழக்கமானதே. அது மக்கள் நடமாட்டத்துக்குரிய பகுதியன்று. ஆனாலும் வருடத்துக்கொரு முறை அக்கிராம மக்கள் அங்குவந்து பெருமெடுப்பில் ஒரு திருவிழாவைச் செய்துவிட்டுச் செல்வார்கள்.
நாங்கள் சென்ற அந்த அதிகாலை அவ்வருடத்துக்குரிய திருநாள். நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்றிருந்தார்கள். திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. ஒருபக்கத்தில் உருவந்து ஆடுபவர்கள், இன்னொரு பக்கம் கிராமிய நடனங்கள், இன்னொரு பக்கம் விருந்து சமைப்பவர்கள் என்று அமர்க்களமாக இருந்தது. ஒருவர் கத்திமேல் நின்று ஆடிக்கொண்டிருந்தார். நாங்கள் ஓர் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பகுதியை அண்டி ஏற்கனவே இயக்க முகாம்கள் இருந்ததால் அவர்கள்தான் திருவிழாவைப் பார்க்க வந்துநிற்கிறார்களென மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.
ஐந்து மணிக்கு தேவராஜ் அண்ணை வந்து எல்லோரையும் ஒதுக்குப்புறமாக அணிவகுக்கச் சொன்னார்.
‘இயக்கம் ஒரு வேலையா உங்களை எடுத்திருக்கு. கடுமையான பயிற்சியையும் முடிச்சிட்டியள். பயிற்சியில எடுத்ததைச் சண்டையில காட்டவேண்டிய நாள் வந்திட்டுது. இப்ப நாங்கள் நகரப்போறம். எங்கட நகர்வு வெளியில ஒருத்தருக்கும் தெரியக்கூடாது. அதால லொறிக்குள்ளதான் எல்லாரும் இருக்க வேணும். நீண்டநேரம் புழுதி குடிச்சுக் கொண்டு இருக்க வேணும். கஸ்டம்தான், சமாளிச்சுக் கொள்ளுங்கோ. நாங்கள் இரவே நகர்ந்திருக்க வேணும். ஆனால் பயிற்சி நேரம் காணாதபடியா கடைசிவரைக்கும் நிக்கவேண்டியதாப் போச்சு. போயிறங்கிய இடத்தில மிச்சத்தைக் கதைப்பம்.’
அவர் கதைத்து முடிக்கும்போதே திருவிழாக் காரர்களால் வடை, கெளபி என்பன எமக்கென்று தந்தனுப்பப்பட்டன. ‘உங்களுக்குக் காலமச் சாப்பாட்டை எப்பிடிக் குடுக்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருந்தம், எல்லாம் சரியாயிட்டுது. போயிறங்க பின்னேரமாயிடும். இனி அங்கதான் மத்தியானச்சாப்பாடு. ‘பம்’ பண்ணிறதுக்கு மட்டும் இடையில காட்டுக்குள்ள நிப்பாட்டுவம். அவ்வளவுதான்.’
கிடைத்தவற்றைப் பங்கிட்டு எடுத்துக்கொண்டு காட்டோரமாக நகர்ந்து அணைக்கட்டுப் பக்கமாக வந்தோம். இன்னும் சரியாக விடிந்துவிடவில்லை. எமக்காக இரண்டு லொறிகள் காத்திருந்தன. இரண்டிலும் ஈரடுக்குளில் ஆட்லறி எறிகணைப் பெட்டிகள் ஏற்றப்பட்டிருந்தன. இரண்டு லொறிகளிலும் ஆட்களைப் பங்கிட்டு ஏற்றிக் கொண்டுப் புறப்பட்டோம். இதுவரை எமக்கு நேரடியாக எதுவும் சொல்லப்படவில்லை. எங்கோ தாக்குதல் நடக்கப் போகிறது. அங்கிருக்கும் ஆட்லறிகளைக் கைப்பற்றி அவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தப்போகிறோம் என்றளவில் நாம் ஊகித்திருந்தோம். ஏற்கனவே ஆனையிறவில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் நினைவிலிருந்தது.
போகுமிடம் யாருக்கும் தெரியவில்லை. வாகன ஓட்டுநருக்குச் சொல்லப்பட்டிருந்தது முல்லைத்தீவுக்குப் போகவேண்டுமென. அவரும் முல்லைத்தீவு போவதற்குப் போதுமான டீசலோடு வந்திருந்தார். இடையில் பாதைமாறியபோதுதான் விடயத்தைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார். லொறிக்குள் முற்றாக அடைக்கப்பட்ட நிலையில் நாம். வன்னியில் தார்ச் சாலைகள் இல்லை. கிறவற் புழுதியைக் குடித்தபடி லொறிக்குள் நாம் அடைபட்டிருந்தோம். பின்கதவு நீக்கல் வழியாக எங்கால் பக்கம் போய்க்கொண்டிருக்கிறோமென்று பார்த்துச் சொல்வதற்கு இருவர் நின்றிருந்தனர். மிகுதி அனைவரும் ‘பாட்டுக்குப் பாட்டு’ போட்டி நடத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தோம்.
புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் பக்கமாக லொறி திரும்பியதை அறிந்தோம். பிறகு மன்னாகண்டலடியில் காட்டுக்குள் கொண்டுசென்று சிறிது ஓய்வுக்காக நிறுத்தப்பட்டோம். பிறகு மீண்டும் பயணம்.
மாங்குளம் சந்தியில் சிறிது சலசலப்பு. அதற்கு முதல்நாள்தான் மாங்குளப் பகுதியில் விமானக் குண்டுவீச்சு, எறிகணை வீச்சு என்று அமர்க்களம் நடந்திருந்தது. அதுவரை மாங்குளத்தில் தங்கியிருந்தவர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். லொறியைப் பாதையோரம் நிறுத்திவிட்டு எங்காவது பாண் வாங்கலாமென்று தேவராஜ் அண்ணை திரிந்து பார்த்தார். எல்லாக் கடைகளும் பூட்டு. மாங்குளம் நகரம் வெறிச்சோடத் தொடங்கியிருந்தது. உள்ளிருந்த நாம் ஓட்டுநர் பக்கத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டிருந்தோம்.
முதல் அரைமணி நேரத்தில் குறைந்தது ஐநூறு எறிகணைகளாவது எம்மால் ஏவப்பட்டிருக்க வேண்டுமென்பது எமக்குரிய கட்டளையாகச் சொல்லப்பட்டது. பயிற்சியில் செய்ததைப் போன்றே மூச்சைப்பிடித்து நெருப்பாக நின்றால்தான் இது சாத்தியம்.
மீண்டும் பயணம் தொடங்கியது. ஜெயசிக்குறு முனையில்தான் எங்கோ சண்டை நடக்கப்போகிறதென்று விளங்கிவிட்டது. அதற்குள் உள்ளிருந்த இரண்டொருவர் சத்தி எடுக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களை தொடர்ந்தும் உள்ளே வைத்திருக்க முடியாது. உடுப்பை மாற்றி வெறும்மேலோடு சரத்தைக் கட்டியபடி மேலே ஏற்றிவிட்டோம். பார்த்தால் பொதுமக்கள் போன்றுதான் தோன்றும். அவர்களுள் ஒருவன் கொஞ்ச நேரத்திலேயே மீளவும் கிழே வந்துவிட்டான். ‘மேல இருந்து கொப்புகளிட்ட அடிவாங்கிறதைவிட கீழயே இருக்கலாம்’ என்றான்.
இப்போது எங்களில் பலர் நித்திரை கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். வேறு வழியில்லை. பயணம் எப்போது முடியுமென்று தெரியாது. பசிக்கத் தொடங்கிவிட்டது. தண்ணியை அதிகம் குடித்தால் அடிக்கடி இறங்க வேண்டி வருமென்பதால் அதிலும் கட்டுப்பாடுதான்.
அந்த நெடிய பயணம் மாலை மூன்றுமணியளவில் முடிவடைந்தது. ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டார்கள். இடம்தெரிந்த சிலர் சொன்னார்கள் அது ஈச்சங்குளமென்று. நாம் நின்ற இடம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் அருகிலுள்ள காட்டுப்பகுதி. எமக்குச் சற்றுத்தள்ளிப் பார்த்தால் வேறும் பல அணிகள் நின்றிருந்தன. அவர்கள் இரவோடு இரவாகவே நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். காட்டுக்கரையோரம் ஒடிய வாய்க்காலொன்றில் முகங்கழுவி கொஞ்சம் செந்தளிப்பானோம். கறிபணிஸ் தரப்பட்டது. உண்மையில் அது தாக்குதலணிகளுக்கு வந்த மாலைச் சிற்றுண்டி. எமக்கான மதிய உணவு கிடைக்கவில்லை. தாக்குதலணியாக நாம் நகராததால் எமக்கான உணவு வழங்கல்களில் சிக்கல்கள் இருந்தன. நாம் எந்தப்படையணி, யாருடைய ஆட்கள் என்ற விபரங்களைச் சொல்ல முடியாத நிலையும் இருந்தது.
மாலை ஐந்து மணிக்கு ராயு அண்ணை வந்து சேர்ந்தார். அப்போதுதான் அன்றிரவு நடக்கப்போகும் தாக்குதல் பற்றியும் எமது பணிகள் பற்றியும் விரிவாக விளங்கப்படுத்தப்பட்டது.
ஜெயசிக்குறு இராணுவம் மீதுதான் தாக்குதல். ஓமந்தை வரை முன்னேறி வந்திருக்கும் இராணுவத்தின் பின்பகுதியில் – குறிப்பாக தாண்டிக்குளம் பகுதியில் ஊடறுப்புத் தாக்குதலொன்று நடைபெறப்போகிறது. தாண்டிக்குளம் மைய முகாமில் பத்து வரையான ஆட்லறிகள் இருக்கின்றன. தாக்குதலணிகள் அந்த முகாமைக் கைப்பற்றும். ஆட்லறிகளைக் கைப்பற்றியதும் நாம் அவற்றைக் கொண்டு இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும். வேவுத் தகவல்களின்படி இரண்டு 130 மி.மீ ஆட்லறிகளும் இருக்கின்றன. அவற்றை முடிந்தளவுக்கு எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவர முயற்சிப்போம். ஏனையவற்றைக் கொண்டுவரப்போவதில்லை. அங்கிருந்தே தாக்குதல் நடத்துவதுதான் எமது கடமை.
எமது தாக்குதல்கள் அனைத்தும் தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை நோக்கியே அமைய வேண்டும். எக்காரணம் கொண்டும் வவுனியாப் பக்கம் தாக்குதல் நடத்தக்கூடாது. வவுனியா மீதான தாக்குதல் அங்கிருந்து நேரடியாக வழிநடத்தும் முன்னணி அவதானிப்பாளரின் உதவியோடே செய்யப்பட வேண்டும். ஏனென்றால் அது பொதுமக்கள் வாழும் பகுதி. அவ்வேலையை இயக்கத்தின் ஆட்லறிப்பிரிவு செய்து கொள்ளும். எமக்கு இலக்கின் ஆள்கூறுகள் எவையும் கட்டளையாக வழங்கப்படா. ஏற்கனவே வரைபடத்தின்படி தூரம், கோணம் என்பவற்றைக் கணித்து வைத்திருந்தோம். ஓமந்தையில் பரந்திருக்கும் இராணுவத்தின் பகுதிமீது சரமாரியாகக் குண்டுகள் பொழிய வேண்டும். குறிப்பிட்ட ஓமந்தை வட்டத்துக்குள் எங்கு எறிகணை விழுந்தாலும் சரிதான். தாண்டிக்குளம் ஊடறுப்பு நடந்தபின்னர் ஓடந்தையில் நிற்கும் அவ்வளவு இராணுவத்தினரும் தொடர்பற்று சுற்றிவளைக்கப்பட்ட நிலையில்தான் இருப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் அரைமணி நேரத்தில் குறைந்தது ஐநூறு எறிகணைகளாவது எம்மால் ஏவப்பட்டிருக்க வேண்டுமென்பது எமக்குரிய கட்டளையாகச் சொல்லப்பட்டது. பயிற்சியில் செய்ததைப் போன்றே மூச்சைப்பிடித்து நெருப்பாக நின்றால்தான் இது சாத்தியம். அதன்பிறகு கட்டளைப்படி சுழற்சிமுறையில் தாக்குதல் நடத்த வேண்டும். இதற்கிடையில் பீரங்கிகளைத் துப்பரவாக்கும் பணி, களஞ்சியத்திலிருந்து எறிகணைகளை பீரங்கிக்கருகில் கொண்டுவருதல் என்று பணிகள் இருந்தன. காயக்காரரை அப்புறப்படுத்தும் வழியோ நேரடி வழங்கலோ இன்றி நிற்கும் ஓமந்தை இராணுவத்தை (கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர்) முற்றாகத் துடைத்தழிப்பது இயக்கத்தின் இரண்டாம் கட்டத் திட்டமாக இருந்திருக்க வேண்டும்.
நாம் எதிர்கொள்ளப்போகும் அச்சுறுத்தல் மிக அதிகளவில் இருக்குமென்பதும் தெளிவாகச் சொல்லப்பட்டது. ஒருகட்டத்தில் எதிரியின் முழுக்கவனமும் எம்மீதுதான் திரும்பும். வான்வழித் தாக்குதல்கள், எதிரியின் ஆட்லறித் தாக்குதல்கள் என அனைத்தும் எம்மை நோக்கியே நிகழ்த்தப்படும். அதற்குள் நின்றுதான் சமாளிக்க வேண்டும். எமது சூட்டுவலுவை நம்பியே ஏனைய தாக்குதலணிகள் களமிறங்குகின்றன. விடிவதற்குள் எவ்வளவு விரைவாக வெற்றிகளைக் குவிக்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது அறிவுறுத்தப்பட்டது. [எமக்குத் தெரியாமலேயே எமக்கான வான்பாதுகாப்புக்காக இரண்டு கனரக ஆயுதங்களைக் கொண்ட கடற்புலிப் போராளிகளின் அணிகள் சரா அண்ணன் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்தன என்பது மறுநாட் காலைதான் தெரிந்தது.]
மிகத் தெளிவாக அனைத்தும் விளங்கப்படுத்தப்பட்டு விட்டன. கேள்வி நேரத்தில் எவருக்கும் கேள்வியிருக்கவில்லை. பல உணர்வுகளின் கலவையாக அப்பொழுது அமைந்திருந்தது. இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலாக – இதுவரை இல்லாத மிகப்பெரும் தாக்குதலாக இது அமையப்போகிறது. அதில் அதிமுக்கியமான பணி எமக்குத் தரப்பட்டிருக்கிறது. திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் எதிரியின் மிகப்பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முளையிலேயே கிள்ளியெறியப்படுமென்பதோடு கிடைக்கப்போகும் ஆட்லறிகள் இனிவருங் காலத்தில் தேடித்தரப்போகும் வெற்றிகள் அளப்பெரியவை. இதுவரை இரண்டு ஆட்லறிகளை வைத்தே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த இயக்கம் (புளுக்குணாவ ஆட்லறி அதுவரை சமர்க்களங்களில் பயன்படுத்தப்படவில்லை) இனி என்னவெல்லாம் செய்யும்? இந்தத் தாக்குதல் முடிவில் இப்போது எம்மோடு நிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கப் போவதில்லை என்பதும் எமக்குத் தெளிவாக விளங்கியிருந்தது. ‘எல்லாத்தாலயும் போட்டு நொருக்குவான்’ என்பது எமக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எமது ஆட்லறிச் சூடுகளைக் கட்டுப்படுத்தாமல் இயக்கத்தின் தாக்குதலை முறியடிக்க முடியாதென்பதுதான் நிலைமையாக இருக்கப் போகிறது.
ஒவ்வோர் அணியாக ராயு அண்ணை கதைத்தார். எல்லாம் சரியாக நடக்க வேண்டுமென்ற தவிப்பு அவரிடமிருந்தது. ‘ஆட்லறி கிடைச்ச உடன களைப்பைப் பாக்காதைங்கோ. பல்லைக் கடிச்சுக்கொண்டு கொஞ்சநேரம் அடியுங்கோ. நாங்கள் ஒவ்வொண்டா அடிச்சுக் கொண்டிருந்தால் அது திகைப்பா இருக்காது. முதல் அரைமணி நேரத்தில நீங்கள் அடிக்கிற அடியில ஓமந்தை ஆமி இனி சண்டைபிடிக்கிற நினைப்பையே விட்டுப் போடவேணும். அப்பதான் கொஞ்ச இழப்புக்களோட சண்டை ரீமுகள் வெல்லலாம். தொடக்கத்தை வைச்சுத்தான் எங்கட நடவடிக்கையின்ர நீட்சி தீர்மானிக்கப்படும்’.
அணிகளுக்கான வரைபடங்கள், ரோச் லைட்கள், தொலைத் தொடர்புக் கருவிகள், பற்றறிகள், அலைவரிசை எண்கள், சங்கேதச் சொல்லட்டை மற்றும் ஏனைய பொருட்கள் வழங்கப்பட்டன. திட்டப்படி நாங்கள் முன்னகர்ந்து ஓரிடத்தில் காத்திருக்க வேண்டும். அது தாண்டிக்குளம் ஆட்லறி முகாமிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்தது. முகாம் கைப்பற்றப்பட்டதும் நாம் அங்கு ஓடிச்செல்ல வேண்டும். உள்நுழையும் எமக்கு தேவராஜ் அண்ணை தான் பொறுப்பாக வருகிறார். ஓர் ஆட்லறியுடன் தான் இயக்கம் இச்சண்டையைத் தொடங்குகிறது என்பது விளங்கியது. நாம் பயிற்சியெடுத்த ஆட்லறி இச்சண்டையில் பங்குபற்றவில்லை.
இருட்டத் தொடங்கியது. ஏற்கனவே அக்கம்பக்கத்திலிருந்த சண்டையணிகள் நகர்ந்துவிட்டிருந்தன. நாங்கள் அணியணியாக இடைவெளிவிட்டு நகரத் தொடங்கினோம். போகும் வழியில் நான் தேவராஜ் அண்ணனுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர் மேலதிக விவரங்கள் சிலவற்றைச் சொன்னார். தாக்குதலணிகள் இன்றிரவு ஊடறுப்பைச் செய்யப் போகின்றன. ஆனால் ஆட்லறி முகாமைக் கைப்பற்றும் அணிகள் முன்பே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உட்புகுந்துவிட்டன. லெப்.கேணல் ஜீவன் தலைமையில் ஜெயந்தன் படையணியின் ஓரணியும் அவர்களோடு கரும்புலிகளின் ஓரணியும் முன்பே உள்நகர்ந்துவிட்டன. வெளிக்காப்பரண்களைக் கைப்பற்றி பிறகு மைய முகாம் வரை செல்வது சிலவேளை பலன்தராது என்பதால் இத்தெரிவு. சமநேரத்திலேயே வெளிக்காப்பரண் வரிசையும் ஆட்லறிகள் நிறுத்தப்பட்டிருந்த மைய முகாமும் தாக்குதலுக்குள்ளாகும். இன்று (09/06/1997) அதிகாலைவரை இருந்த வேவுப்புலிகள் பத்து ஆட்லறிகளும் அம்முகாமில்தான் இருப்பதாக உறுதிப்படுத்திவிட்டுப் பின்வாங்கியிருந்தனர்.
இரவு பதினொரு மணியளவில் எமக்கான நிலைகளையடைந்து விட்டோம். தாக்குதல் தொடங்குவதற்கும், அதன்பின் ஆட்லறிகள் கைப்பற்றப்பட்ட செய்தி வருவதற்கும்காத்திருந்தோம். எமக்கு எதிரியுடனான நேரடிச் சண்டை வர வாய்ப்பில்லை. அப்படியான சந்தர்ப்பத்தைத் தவிர்க்கும்படி மிகக்கடுமையாக அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.
தாக்குதல் நடந்த அன்றைய இரவு முழுவதும் ஓமந்தையிலிருந்த ஆட்லறிகளைக் கொண்டு இராணுவம் ஓர் எறிகணையைக் கூட ஏவவில்லை. ஆட்லறிகள் ஓமந்தையிலிருப்பதைக் காட்டிக் கொள்ளக்கூடாதென்பதற்காக இராணுவம் அடக்கி வாசித்தது.
குறுகுறுப்பாக இருந்தது. ஆட்லறி தொடர்பான செய்முறைகளை மீளவும் நினைவுபடுத்திக் கொண்டோம். போனவுடன் யார்யார் என்னென்ன செய்ய வேண்டுமென அணிக்குள் மீளவும் குசுகுசுத்துக் கொண்டோம்.
அந்த நேரம் வந்தது. 10/06/1997 அதிகாலை தாக்குதல் தொடங்கியது. டோபிட்டோக்கள் வெடிக்கும் சத்தங்கள், மோட்டர் எறிகணைகளின் சத்தங்களோடு இயக்கத்தின் சண்டை தொடங்கியது.
நாம் செய்திக்காகக் காத்திருந்தோம். திட்டத்தின்படி அரைமணி நேரத்துக்குள் ஆட்லறிகள் கைப்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சண்டை தொடங்கி சில நிமிடங்களில் எதிரியின் MI-24 தாக்குதல் வானூர்தி ஒன்று வந்துவிட்டது. எங்கு தாக்குவதென்று சரியான தெரிவில்லாமல் சகட்டு மேனிக்கு அவ்வானூர்தி தாக்குதலை நடத்தியது.
‘கோதாரி இப்பவே வந்திட்டான். அப்ப விடிய விடிய எங்களுக்கு நல்ல சமா தான்’ என்று சொல்லிக் கொண்டோம்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. எமக்கான செய்தி வந்து சேரவில்லை. ஏதோ பிசகு நடந்துவிட்டதென்று தெரிந்தது. ஆனால் தாக்குதல் வெற்றியாகச் செல்கிறது என்பது விளங்கியது. சண்டை தொடங்கிய இடத்திலிருந்து சத்தங்கள் இன்னுமின்னும் எதிரியின் பகுதிக்குள் முன்னேறிக்கொண்டிருந்தன. இயக்கம் ஏவிய மோட்டர் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் இடமும் இன்னுமின்னும் முன்னேறிக்கொண்டிருந்தது. ஆனால் எமக்கான செய்தி மட்டும் இன்னும் வரவில்லை. எதிரி சகட்டு மேனிக்குத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். நாமிருந்த பகுதிகளைச் சுற்றியும் எறிகணைகள் வீழ்ந்தன.
தாக்குதல் தொடங்கி இரண்டு மணிநேரமாகிவிட்டது. இன்னும் நாங்கள் அப்படியேதான் இருந்தோம். எல்லோருக்கும் சலித்துவிட்டது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடும் ஆயத்தத்தோடும் இருந்த எமக்குச் சலிப்பு ஏற்பட்டது. மெதுமெதுவாக அந்தத் தகவல் பரவத் தொடங்கியது.
‘காம்ப் உடனயே பிடிச்சாச்சாம். ஆனா ஆட்லறியள்தான் அங்க இல்லயாம்.’
ஆம்! திட்டமிட்டபடியே ஆட்லறிகள் இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அம்முகாம் கைப்பற்றப்பட்டது. ஆனால் தேடிப்போன ஆட்லறிகள் அங்கே இருக்கவில்லை. அந்த முகாம் தாக்குதலில் கரும்புலிகளான மேஜர் நிவேதன், மேஜர் யாழினி, கப்டன் சாதுரியன் ஆகியோர் வீரச்சாவடைந்திருந்தனர்.
தாக்குதலணிகள் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருந்தன. தாண்டிக்குளம் முகாமுட்பட பல முகாம்களடங்கிய நிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது. எதிரியின் ஆயுதக் களஞ்சியமொன்று எரிந்தழிந்தது. தாக்குதல் உலங்கு வானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்டது. விடியும்வரை தாக்குதலணிகள் முன்னேறிச் சென்றன. ஓமந்தையில் நின்ற இராணுவம் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. வவுனியாவுக்கும் ஓமந்தைக்குமிடையிலான கண்டிவீதியும் அதைச் சுற்றி இராணுவம் கைப்பற்றி வைத்திருந்த பகுதிகளும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
தாண்டிக்குளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்லறிகளுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. சற்றுத் தள்ளி நிறுத்தியிருக்கலாம், வேறேதாவது முகாமுக்கு மாற்றியிருக்கலாம் என்று கருதி விடியும்வரை சண்டை தொடர்ந்தது. விடியும்போது வவுனியா நகர்ப்பகுதித் தொடக்கம் மறுபக்கத்தில் ஓமந்தை இராணுவத்தினர் வரையும் புலிகள் கைப்பற்றி நிலைகொண்டிருந்தனர். அந்தப் பகுதிக்குள் ஆட்லறிகள் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியபின் அணிகளைப் பின்வாங்கும்படி கட்டளையிடப்பட்டது. அதுவரை நிலையெடுத்திருந்த இடத்திலேயே நாம் இருந்தோம். எம்மையும் பின்வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. வெளிச்சம் பரவத் தொடங்கிவிட்டதால் எதிரியின் வான்தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. எல்லாவற்றுக்குள்ளாலும் தப்பி நாம் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தோம்.
எல்லோரும் எரிச்சலில் இருந்தார்கள். பலர் இப்படியொரு ஏமாற்றத்தைச் சந்தித்திருக்க மாட்டார்கள். என்ன நடந்திருக்கும்? நேற்று அதிகாலைவரை ஆட்லறிகள் அங்கிருந்தனவென்றால் பகலில்தான் எங்கோ நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். தாக்குதல் நடத்தப்படப் போகிறது என்பது முன்னமே தெரிந்துவிட்டதோ? அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சண்டை நன்றாகத்தான் நடந்துள்ளது. எதிரி கடும் இழப்புக்களைச் சந்தித்திருந்தான் என்பதோடு எமது தரப்பில் உயிரிழப்புக்கள் குறைவாகவே இருந்தன. தாக்குதல் பற்றி முன்னமே தெரிந்திருந்தால் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும்.
இயக்கத்துக்கு அதிஸ்டம் கைகூடவில்லையென்றுதான் சொல்லவேண்டும். ஆட்லறிகளை அள்ளிவரும் சந்தர்ப்பம் இரண்டாவது தடவையாகவும் இயக்கத்துக்கு இல்லாமற் போனது.
பிறகு என்ன நடந்ததென்று இயக்கம் உறுதிப்படுத்திக் கொண்டது. நாம் தாக்குதல் நடத்திய அன்றுபகல் ஐந்து ஆட்லறிகளை ஓமந்தைப் பகுதிக்கும் ஏனையவற்றை வவுனியாப் பகுதிக்கும் எதிரி இடம் மாற்றியிருந்தான். ஓமந்தையிலிருந்து புளியங்குளம் நோக்கி இரண்டொரு நாட்களில் மிகப்பெருமெடுப்பில் ஓர் இராணுவ நடவடிக்கையைச் செய்வதற்கு எதிரி திட்டமிட்டிருந்தான். அதன் ஒருகட்டமாகவே இந்த ஆட்லறிகளை நகர்த்தியிருந்தான். தாண்டிக்குளப் பகுதி மீதான தாக்குதலால் கிடைத்த பலன்களிலொன்று புளியங்குளம் மீதான எதிரியின் தாக்குதல் பிற்போடப்பட்டது. புளியங்குளத்தில் மறிப்புச்சமர் செய்வதற்குரிய போதிய ஆயத்தத்துக்கான கால அவகாசத்தை இத்தாக்குதல் இயக்கத்துக்கு வழங்கியது.
தாக்குதல் நடந்த அன்றைய இரவு முழுவதும் ஓமந்தையிலிருந்த ஆட்லறிகளைக் கொண்டு இராணுவம் ஓர் எறிகணையைக் கூட ஏவவில்லை. மோட்டர் தாக்குதலை மட்டுமே நடத்தியது. ஆட்லறிகள் ஓமந்தையிலிருப்பதைக் காட்டிக் கொள்ளக்கூடாதென்பதற்காக இராணுவம் அடக்கி வாசித்தது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை நோக்கி முன்னேறிய புலிகளின் அணிகள் இராணுவத்திடமிருந்து கடும் எதிர்ப்பையும் எதிர்கொண்டன.
தாண்டிக்குளச் சண்டையைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஒரு நடவடிக்கையை இயக்கம் பெரிதாகத் திட்டமிட்டிருந்தது. இவ்வூடறுப்புத் தாக்குதல் நடத்தப்பட முன்பு வவுனியா நகர்ப்பகுதிகளுக்குள் சில சிறப்புப் பதுங்கித் தாக்குதலணிகள் நகர்த்தப்பட்டிருந்தன என்பதைப் பின்னர் அறிந்தோம். ஆட்லறிகளைக் கைப்பற்றவெனச் சென்ற அணிகள் தவிர்த்து ஏனைய தாக்குதலணிகளுக்கு இத்தாக்குதலின் பின்னாலிருந்த ‘ஆட்லறி கைப்பற்றும்’ விடயம் முதலில் தெரிந்திருக்கவில்லை. வழமை போன்ற ஓர் ஊடறுப்புத் தாக்குதலும் ஆயுதங்களை அள்ளலுமாகவே அவர்கள் நினைத்திருந்தனர்.
இயக்கத்துக்கு அதிஸ்டம் கைகூடவில்லையென்றுதான் சொல்லவேண்டும். ஆட்லறிகளை அள்ளிவரும் சந்தர்ப்பம் இரண்டாவது தடவையாகவும் இயக்கத்துக்கு இல்லாமற் போனது.
அப்படியானால் முதலாவது சந்தர்ப்பம்?
அதுபற்றிப் பிறகு பார்ப்போம்.
- அன்பரசன் -
No Comment to " தடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II "