களங்கள் -3. ஓயாத அலைகள் மூன்று.
மாதிரி இராணுவ முகாமை அமைத்துவிட்டு அவர்கள் மீளவும் கடற்பயிற்சியைத் தொடரவென கள்ளப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். கரைச்சிக் குடியிருப்பில் தங்கியிருந்த கரும்புலி அணி பராக்கிரமபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. இப்பயிற்சி பற்றி இத்தொடரின் முதலாவது அங்கத்தில் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம்.
இந்தத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தது கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதி. இதில் கரும்புலி மேஜர் செங்கதிர் வாணன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப்.கேணல் நரேஷ், கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் சிறிவாணி, கரும்புலி மேஜர் ஆந்திரா ஆகியோர் உட்பட வேறும் சிலர் இருந்தனர். இந்த நடவடிக்கைக்காக அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்றாவது தொகுதியிலிருந்தும் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக அச்சண்டைக்கென தெரிவு செய்யப்பட்டிருந்த இரண்டு பி.கே. எல்.எம்.ஜி இயக்குநர்களான கரும்புலி மேஜர் ஆதித்தன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் நித்தி ஆகியோர் மூன்றாம் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
மூன்று அணிகளாக உட்புகுந்து நடத்தும் இத்தாக்குதலை அருளன் நேரடியாகக் களத்தில் நின்று வழிநடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அம்முகாமிலிருந்து ஆறு ஆட்லறிகளும் தகர்க்கப்பட வேண்டுமென்பது தான் இலக்கு. இலக்கு நிறைவடைந்தால் மீதமுள்ளோர் பாதுகாப்பாகத் தளம் திரும்ப வேண்டுமென்பதும் திட்டமாக இருந்தது. வேவுத் தரவுகளின்படி முகாம் மாதிரி அமைக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதேவேளை கரும்புலிகள் அணியினரும் வேவு அணியினரும் இணைந்து தொடர்ந்தும் வேவுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டுமிருந்தனர்.
இந்நிலையில் அந்தப் பயிற்சித்திட்டத்தில் இணையும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. கள்ளப்பாட்டில் கடற்பயிற்சியில் இருந்த அணிகளிடமிருந்து விடைபெற்று கரைச்சிக் குடியிருப்புக்கு நகர்ந்தேன். அங்கிருந்தபடியே சசிக்குமார் மாஸ்டரோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். இரவு முழுவதும் பயிற்சி; அதிகாலையில் வீடுவந்து சேர்வோம்.
நீரொழுக்கு நடவடிக்கைகள்
அது 1999 ஆம் ஆண்டின் ஐப்பசி மாதம். அந்த நேரத்தில் போர்க்களம் சற்று அமைதியாக இருந்தது. வன்னியின் நீண்ட முன்னரங்கில் பலமுனைகளிலும் முயன்று இடங்களைக் கைப்பற்ற முடியாமல் சிறிலங்கா இராணுவம் முடங்கியிருந்தது. சிலமாதங்கள் அமைதிக்குப் பின்னர் எதிரி ‘நீரொழுக்கு’ (Water-shed) என்ற பெயரில் அடுத்தடுத்து இரண்டு முன்னேற்ற நடவடிக்கைகளைச் செய்தான். இப்போது எதிரி தனது மூலோபாயத்தை மாற்றியிருந்தான். அதாவது வழமையான முறைகளில் சண்டைபிடிக்காமல் கடுமையான தாக்குதலை நடத்தி புலிகளுக்கு இயன்றவரை உயிரிழப்பை ஏற்படுத்துவதும் பின்னர், பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிச் செல்வதும் என்பதே இந்தப் புதிய திட்டமாக இருந்தது. ‘வசந்த பெரேரா’ என்ற இராணுவத் தளபதியின் நேரடி வழிநடத்தலில் இந்த ‘நீரொழுக்கு -1, 2’ ஆகிய இரு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன.
எதிரி நினைத்தது போல் பெரிய வெற்றியாகவே இவை இரண்டும் அமைந்திருந்தன. மிகக்குறுகிய அகலத்தில் (அண்ணளவாக இரு கிலோமீற்றர்கள்) புலிகளின் காவலரண் வரிசைமீதும் பின்தளங்கள் மீதும் சரமாரியான ஆட்லறித் தாக்குதலை நடத்திவிட்டு முன்னேறிச்சென்று சடலங்களைக் கைப்பற்றிக் கொண்டு பின்வாங்கிச் செல்வதே இந்தத் திட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரம். அதுவரை எதிரி பயன்படுத்தியிராத அளவுக்கு ஆட்லறி எறிகணைகள் இந்நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான எறிகணைகள் இடைவெளியின்றி மிகக்குறுகிய இடத்தின் மீது ஏவப்பட்டன. ஒருமணி நேரம் நடத்தப்படும் இத்தாக்குதலின் பின்னர் எதிரியணிகள் முன்னேறிச் சென்று காவலரண்களைக் கைப்பற்றும். வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களையும் ஆயுத தளபாடங்களையும் தூக்கிக் கொண்டு, காவலரண்களையும் அழித்துவிட்டு எதிரியணிகள் தாமாகவே தளம் திரும்பிவிடும்.
இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.
இந்த இரு நடவடிக்கைகளிலும் மாலதி படையணியே தாக்குதலுக்கு உள்ளானது. இயக்கம் இதுவரை எதிர்கொள்ளாத அளவுக்கு ஆட்லறி மழை பொழியப்பட்டது. இரண்டு நடவடிக்கைகளிலும் ஐம்பது வரையான போராளிகளின் உடல்கள் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்டுச் செல்லப்பட்டன. வழமையாகவே போராளிகளின் உடல்கள் எதிரியால் கைப்பற்றப்படுவது ஈழப்போராட்டத்தில் சகிக்க முடியாத தோல்வியாகக் கருதப்பட்டு வந்தது. இந்தப் புது நடவடிக்கையால் போராளிகள் உண்மையில் குழம்பித்தான் போனார்கள். மீட்பு நடவடிக்கைக்கோ தாக்குதலுக்கோ மேலதிக அணிகள் நகர முடியாதளவுக்கு எறிகணை வீச்சு மட்டுமல்லாமல், மிக விரைவாகவே எதிரி தமது தளத்துக்குப் பின்வாங்கிச் செல்வதும் குழப்பமாக இருந்தது.
‘நீரொழுக்கு -1’ நடவடிக்கை 14/10/1999 அன்று நடத்தப்பட்டது. இதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர்; 32 வித்துடல்கள் எதிரியால் கைப்பற்றப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன. இந்த முதலாவது நடவடிக்கையில் இயக்கத்தின் ஆட்லறி நிலையும் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் ஆட்லறிக்குச் சேதமில்லை எனினும் எறிகணைக் களஞ்சியம் தீப்பற்றியதுடன் இரு போராளிகள் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ‘நீரொழுக்கு -2’ நடவடிக்கையிலும் நாற்பது வரையான பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர். 28/10/1999 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 28 வித்துடல்கள் எதிரியால் எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுசைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன.
இரண்டு கிழமைகளுக்குள் அடுத்தடுத்து அம்பகாமம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த இரு நடவடிக்கையாலும் ஒருவித அதிர்ச்சி பரவியிருந்தது. இதேபோன்று தொடர்ந்தும் பல தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்படப் போகின்றன என்பதும் தெளிவாகத் தெரிந்திருந்தது. எதிரி உச்சக்கட்ட உளவியற் போரைத் தொடுத்திருந்தான். வன்னியில் பெரும்பாலான மக்களும் – குறிப்பாக எதிரியின் முன்னணி நிலைகளுக்குக் கிட்டவாக வாழ்ந்த மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இரண்டொரு நாட்களில் தமது இடங்களை இராணுவம் கைப்பற்றிவிடுமென்று அவர்கள் நம்பினார்கள். களமுனையிலிருந்த போராளிகளுக்கும் குழப்பமாகவே இருந்தது. இந்தப் புது முயற்சியை எப்படி எதிர்கொள்வதென்பது பெரிய புதிராகவே இருந்தது. இன்னும் ஒரு கிழமைக்குள் அடுத்தகட்ட நடவடிக்கையையும் எதிரி முன்னெடுப்பான் என்பதை அனைவரும் விளங்கிவைத்திருந்தனர்.
கரும்புலிகளின் புதிய திட்டம்
இந்நிலையில், நீரொழுக்கு -1 நடவடிக்கையின் பின்னர் சிங்கபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சித் திட்டம் சூடு பிடித்தது. இந்தத் தாக்குதலுக்கான தேவை இப்போது அவசரமாகவும் அவசியமாகவுமிருந்தது. ஆகக் கடைசிக்கட்ட வேவுக்காக இளம்புலி அண்ணனோடு கரும்புலிப் போராளிகள் சிலர் பராக்கிரமபுர போயிருந்த நிலையில் மிகுதிப்பேரோடு இறுதிக்கட்டப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது.
இதேவேளை முல்லைத்தீவுச் சந்தியிலிருந்து கடற்கரை செல்லும் பாதையில் விடுதலைப் புலிகளின் இன்னோர் அணியும் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. லெப்.கேணல் தூயவன் (யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நீரில் மூழ்கிச் சாவடைந்தார்) தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் ஈடுபடும் அரசியற்றுறையைச் சேர்ந்த அணியே அது. வசந்தன் மாஸ்டர் தலைமையில் (எல்லாளன் படத்தில் பயிற்சி ஆசிரியராக வருபவர்; வன்னியில் நிகழ்ந்த இறுதிநேரப் போரில் முக்கிய பங்காற்றி வீரச்சாவடைந்தார்; இவரைப் பற்றித் தனியே எழுதப்பட வேண்டும்) அங்கே பயிற்சி நடந்துகொண்டிருந்தது. அந்தப் பயற்சித் திட்டத்திலும் இடையிடையே கலந்துகொள்ள வேண்டிய நிலை எனக்கிருந்தது.
இந்நிலையில் 27/10/1999 அன்று காலை எட்டு மணியிருக்கும். அன்று அதிகாலை முடித்த பயிற்சியின் அசதியில் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அன்றைய இரவுதான் இறுதியான மாதிரிச் சண்டைப்பயிற்சி என்பதால் அதற்கான ஆயத்தங்களில் நானும் சசிக்குமார் மாஸ்டரும் ஈடுபட்டிருந்தோம். திடீரென்று பார்த்தால் கள்ளப்பாட்டிலிருந்த அணிகளெல்லாம் இங்கே வந்துகொண்டிருந்தார்கள். இங்கு வருவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லையென்பதால் ஓடிச்சென்று மறித்து விசாரித்தால் அவர்களுக்கு அப்படித்தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது சைக்கிளில் எழில் வந்துகொண்டிருந்தார். எழில், இம்ரான்-பாண்டியன் படையணியில் வழிகாட்டிப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பாக இருந்தார்.
‘மாஸ்டர், கடாபி அண்ணையும் வந்துகொண்டிருக்கிறார். இவையளைப் பாத்து எங்கயாவது இருக்கவிடுவம். அவர் வந்து கதைப்பார்’ – இது எழில்.
கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளை முன்வீட்டில் இருத்தினோம். சற்று நேரத்தில் கடாபி அண்ணை வந்துவிட்டார். எழிலோடும் சசிக்குமார் மாஸ்டரோடும் தனியே கதைத்தபின் கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளோடு கதைத்தார்.
‘இன்றோடு உங்களுக்குரிய கரும்புலிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகள் முடிவடைந்து விட்டன. இப்போது நீங்கள் அனைவரும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மிக அவசரமாக நாங்கள் ஒரு தாக்குதலை சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராகச் செய்தாக வேண்டும். நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. போராட்டப் பாதையில் தடைக்கற்களை உடைக்கும் கடமை கரும்புலிகளுடையது. அவ்வகையில் இப்போது உங்களுக்கான நேரம். உங்கள் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும். இரண்டொரு நாட்களுள் நாங்கள் தாக்குதலுக்காகச் செல்ல வேண்டும். ஓய்வுக்கான நேரமின்றி பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்தையும் தாக்குப்பிடித்துத் தேறுங்கள், வெல்லுங்கள்’ என்பதே அவரின் சுருக்கப் பேச்சாக இருந்தது.
ஏற்கனவே பராக்கிரமபுர மீதான தாக்குதலுக்கெனப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த இரண்டாம் தொகுதிக் கரும்புலி அணியும் தற்போது கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த மூன்றாம் தொகுதி கரும்புலிகள் அணியும் எதிரெதிர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த போதும் இவர்கள் யாரும் மற்ற அணியினருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. கடாபி அண்ணன் வந்த கணத்திலிருந்து அனைத்தும் துரித கதியில் நடக்கத் தொடங்கின. அவர் நவீனவகை GPS கருவிகளைக் கொண்டுவந்திருந்தார். இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்திலிருந்தே GPS பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் இப்போது உலகில் சந்தைக்கு வந்திருக்கும் ஆகப்பிந்திய வடிவத்தையே கடாபி அண்ணன் கொண்டு வந்திருந்தார். ‘XL 2000’ என்ற பெயரில் வந்த அவ்வடிவம் அதுவரை இயக்கத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த வடிவங்களை விட மிகமிகத் துல்லியமானது; மேம்பட்ட பல வசதிகளைக் கொண்டிருந்தது.
அந்த GPS கருவி தொடர்பான விளக்கத்தையும் பயற்சியையும் வழங்குவதற்கு எழில் வந்திருந்தார். கரும்புலி அணியிலிருந்து ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு GPS பயிற்சி வழங்கப்பட்டது. ஏனைய அனைவருக்கும் ஆட்லறிப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆம்! அன்று அதிகாலையே நாங்கள் தங்கியிருந்த வீட்டின் பின்பக்கம் 85 mm ஆட்லறி (புளுக்குணாவ முகாமில் கைப்பற்றப்பட்டது) கொண்டுவரப்பட்டிருந்தது. யாருக்கும் முழுமையான திட்டம் சொல்லப்பட்டிருக்கவில்லை.
அன்று 27 ஆம் திகதி பகல் முழுவதும் ஆட்லறிப் பயிற்சியும் GPS பயிற்சியுமே நடந்து கொண்டிருந்தன. நீரொழுக்கு -1 நடவடிக்கையில் எமது ஆட்லறி நிலை தாக்கப்பட்டது பற்றியும் ஆட்லறிப் பயிற்சி வழங்க வந்திருந்தவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். மறுவளத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐவருக்கும் GPS பயிற்சியை எழில் கொடுத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு நடக்க இருந்த பராக்கிரமபுர மாதிரி முகாம் பயற்சியை நிறுத்தும்படியும், இதுவரையான பயிற்சியோடேயே முகாமைத் தாக்கலாமென்றும் காடபி அண்ணன் சொல்லியிருந்தார். ஆனால் தாக்குதலணியினர் அதை நம்பவில்லை. ஏற்கனவே சிலதடவைகள் இப்படி இடைநிறுத்தப்பட்டது போல்தான் இந்தமுறையில் இடைநிறுத்தப்படுகிறது என்று ஊகித்திருந்தனர். அத்தோடு மூன்றாம் தொகுதியினர் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு ஓய்வின்றி பயிற்சிகள் வழங்கப்படுவதிலிருந்து ஏதோ வித்தியாசமாக நடக்கிறதென்று அவர்கள் கருதியிருந்தனர்.
இயக்கத்தின் ஆட்லறியை எதிரி தாக்கியதற்குப் பழிவாங்கும் முகமாக எதிரியின் ஆட்லறிகள் சிலவற்றை உடனடியாகத் தாக்கியழிக்க இயக்கம் முடிவெடுத்துள்ளது என்ற கதை மூன்றாம் தொகுதியினரிடம் பரவியிருந்தது. ஏற்கனவே, ஆட்லறிகளைத் தகர்க்கத்தான் இரண்டாம் தொகுதியினர் மாதக்கணக்கில் முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற விடயம் அவர்களுக்குத் தெரியாது. இரண்டு அணியினரின் பயிற்சிகளையும் தெரிந்த எமக்கோ இன்னும் குழப்பம் தான். ஒரே நேரத்தில் பல ஆட்லறித் தளங்களை இயக்கம் தாக்கப் போகிறதா? இல்லாவிட்டால் இப்படிப் பெருந்தொகையானோர் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவையில்லையே? இப்படி அதிகம் யோசித்துக் கொண்டிருக்க உண்மையில் எமக்கு நேரமிருக்கவில்லை. அவ்வளவுக்கு வேலை தலைக்குமேல் நிறைந்திருந்தது.
27 ஆம் திகதி முழுமையாகவும் பயிற்சியோடே கழிந்த நிலையில் 28 ஆம் திகதி விடிந்தது. அன்று நகர்வுப் பயற்சியும், ஆட்லறிச் சூட்டுப் பயிற்சியும் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. மிக அலைச்சல் மிகுந்த நாளாக அன்றைய நாள் இருந்தது. மறுபக்கத்தில் அம்பகாமத்தில் நீரொழுக்கு -2 நடந்ததும் அன்றுதான். அன்றைய நடவடிக்கை வன்னியில் பெரிய கிலேசத்தை உண்டுபண்ணியது.
தொடரும்.
- இளந்தீரன் -
No Comment to " களங்கள் -3. ஓயாத அலைகள் மூன்று. "