களங்கள் -9. ஓயாத அலைகள் மூன்று.
02.11.1999.
வன்னியெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர். ஒட்டுசுட்டானும் நெடுங்கேணியும் வீழ்ந்தது மட்டும்தான் எமக்கும் மக்களும் தெரிந்திருந்தது. இதுவொரு தொடர் நடவடிக்கையென்பது தெரிந்திருக்கவில்லை. கைப்பற்றப்பட்ட இடங்களைப் பார்வையிடவென மக்கள் பெருமளவில் படையெடுத்தனர். இன்னமும் கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் அகற்றப்படாத நிலையில், மக்களைப் பார்வையிட தடைவிதிக்கப்பட்டது. இருந்தபோதும் தமக்குத் தெரிந்த காட்டுப்பாதைகளால் மக்கள் வந்து போய்கொண்டிருந்தனர்.
ஓயாத அலைகள் தொடங்கியபோது ஏற்கனவே உள்நுழைந்திருந்த கரும்புலியணிகள் என்ன செய்தன, இச்சண்டையின் அவர்களின் பங்கென்ன போன்ற விடயங்களை இத்தொடரில் பார்ப்பதாக சென்ற தொடரில் கூறப்பட்டது. நவம்பர் ஐந்தாம்நாள் எழிலையும் ஏழாம்நாள் பாதுகாப்பாகத் திரும்பிய கரும்புலி அணிகளையும் கண்டுகதைத்ததை வைத்து நடந்தவற்றை அறிந்துகொண்டேன். சண்டை தொடங்கியதிலிருந்து எழில் கரும்புலிகளையும் ஆட்லறிகளையும் ஒருங்கிணைக்கும் கட்டளைப்பீடத்தில் பணியாற்றியிருந்தான்.
எதிரியின் ஆட்லறித் தளங்களும் கட்டளைப் பீடங்களுமே கரும்புலி அணிகளுக்கான இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கரும்புலிகளில் நான்குபேர் கொண்ட ஐந்து அணிகளும் நவம் அண்ணன் தலைமையில் உணவுப்பொருட்களோடும் தளமொன்றை அமைக்கும் ஏற்பாட்டோடும் ஓரணியும் ஊடுருவியிருந்தன என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். இவற்றில் நான்கு அணிகளுக்கு இலக்குகள் வழங்கப்பட்டு அவர்கள் அதை நோக்கி நகரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஐந்தாவது கரும்புலியணி மற்ற நான்கு அணிகளுக்குமான வினியோகத்தை மேற்கொள்வதாகத் திட்டம். நைனாமடுக் காட்டுப்பகுதியில் நவம் அண்ணனின் அணி தளம் அமைத்துக்கொள்ளும். அங்கிருந்து மற்ற அணிகளுக்கான வினியோகம் நடைபெறும். மற்ற அணிகள் அத்தளத்துக்கு வந்து ஓரிருநாட்கள் ஓய்வெடுத்துச் செல்லலாம். கிட்டத்தட்ட ஒரு மாதமளவுக்கு இந்த அணிகள் அங்கே தங்கியிருந்து செயற்பட வேண்டுமென்ற வகையிலேயே திட்டமிடப்பட்டு அதற்குத் தேவையான பொருட்களுடன் அவர்கள் களமிறக்கப்பட்டார்கள். காயக்காரரைப் பராமரிக்கும் ஏற்பாடுகள் கூட செய்யப்பட்டிருந்தன.
மணலாற்றுக் காப்பரண்களால் ஊடுருவிய அணிகள் அங்கிருந்துதே தனித்தனியாகப் பிரிந்து தமது இலக்குகள் நோக்கி நகரத் தொடங்கினர். முதலாம் திகதி பகல் முழுவதும் நகர்ந்திருந்த கரும்புலியணிகள் அன்றிரவு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. இலக்குகளுக்கு விரைவாகப் போய்ச்சேரும்படி சொல்லப்பட்டதேயொழிய நாளோ நேரமோ குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. மணலாற்றில் ஊடுருவிய இடத்திலிருந்து போகவேண்டிய இலக்குகள் நீண்ட தூரமாகையாலும் எதிரியின் கண்களில் படாமல் நகரவேண்டிய காரணத்தாலும், காட்டு நகர்வாகையாலும் அணிகள் நகர்வதற்கு நீண்ட நேரமெடுத்தது. எந்த அணிகளும் குறிப்பிட்ட இலக்கை அடையவில்லை. மறுநாட்காலையில் மிகுதித் தூரத்தைக் கடந்து இலக்கை அண்மித்துவிட்டு, இரவு இலக்கை அடைவது என்பது அவர்களின் திட்டமாகவிருந்தது. அன்றிரவு அணிகள் படுத்திருந்தவேளைதான் ஓயாத அலைகள் மூன்று படைநடவடிக்கை தொடங்கப்பட்டது.
02/11/1999 அன்று அதிகாலை ஒட்டுசுட்டானுக்கும் அம்பகாமத்துக்குமிடையில் புலியணிகள் ஊடறுப்புத்தாக்குதலை மேற்கொண்டு சண்டையைத் தொடங்கின. உடைத்த அரண்வழியாக நகர்ந்து ஒட்டுசுட்டான் படைத்தளத்தையும் தாக்கிக் கைப்பற்றின. சண்டை தொடங்கியபோது உள்நுழைந்திருந்த கரும்புலி அணிகளுக்கு எதுவும் விளங்கவில்லை. தொடக்கத்தில் ஏதாவது சிறிய முட்டுப்பாடு என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு சிறிது நேரத்திலேயே நிலைமை வேறு என்பது புலப்பட்டது. கரும்புலி மேஜர் மறைச்செல்வனின் தலைமையில் நகர்ந்துகொண்டிருந்த அணி கனகராயன்குளம் இராணுவத்தளத்தை அடைய வேண்டும். ஆனால் அவ்வணி நகரவேண்டிய தூரம் இன்னும் அதிகமிருந்தது.
இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.
சண்டை தொடங்கி சிறிதுநேரத்திலேயே எமது கட்டளை மையத்திலிருந்து மறைச்செல்வனுக்குத் தொடர்பு எடுக்கப்பட்டது. “அண்ணை, என்ன நடக்குதெண்டு தெரியேல. அவன் பயங்கரமா முழங்கத் தொடங்கீட்டான். எங்கட மற்றக் கோஷ்டியள் முட்டுப்பட்டாங்களோ தெரியேல. இப்ப என்ன செய்யிறது?” என்று தனது குழப்பத்தைத் தெரிவித்தான். இயக்கம் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யப் போகிறதென்ற அனுமானம் உள்நுழைந்திருந்த கரும்புலிகளுக்கும் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. “அப்பிடியொண்டுமில்லை. நாங்கள்தான் சமா தொடங்கியிருக்கிறம். இனி உங்கட கையிலதான் எல்லாம் இருக்கு. உடன ராக்கெற்றுக்கு ஓடு. இண்டைக்கு விடியமுதலே உன்ர பக்கத்தைக் கிளியர் பண்ணித் தந்தால் நல்லது” என்று கட்டளைத்தளபதி சுருக்கமாக நிலைமையைக் கூறினார். ஆனால் மறைச்செல்வனால் அன்று விடியமுன்னமே இலக்கை அடைய முடியாது என்பது அவருக்குத் தெரியும். சண்டையும் தொடங்கிவிட்டதால் இனி சற்று அவதானமாகவே நகரவும் வேண்டும். ஆனாலும் அவ்வணியை உற்சாகப்படுத்தும் பொருட்டு அவ்வாறு சொன்னார். மறைச்செல்வன் தனது அணியை இழுத்துக்கொண்டு இருட்டிலேயே இலக்குநோக்கி விரைந்தான்.
மற்ற மூன்று அணிகளும்கூட தமக்கான இலக்கை அடையவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் மறைச்செல்வனின் இலக்கைவிட அவர்களுக்குரிய நகர்வுத்தூரம் குறைவுதான். கரும்புலி மேஜர் தனுசனின் அணியையும் கரும்புலி மேஜர் செழியனின் அணியையும் அன்று விடியுமுன்பே இலக்கை அடையும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஏனைய அணிகளும் இருட்டிலேயே தமது நகர்வை மேற்கொண்டார்கள். ஆனாலும் விடியுமுன்பு இலக்கை அடைய முடியவில்லை. பகல் வெளிச்சம் வந்தபின்னர் இலக்கை நெருங்கி நிலையெடுக்கும் நிலையிருக்கவில்லை. எறிகணைகளுக்கான திருத்தங்களைச் சொல்ல வேண்டுமானால் முன்னூறு மீற்றர்கள் வரையாவது கிட்ட நெருங்க வேண்டும். பகலில் அவ்வளவு தூரம் நெருங்கி நிலையெடுப்பது அப்போது சாத்தியமற்றிருந்தது. மேலும் தாக்குதல் தொடங்கிவிட்டமையால் எதிரி கண்டபாட்டுக்கு ஓடித்திரிந்துகொண்டிருந்தான். எனவே அன்றிரவு நகர்ந்து இலக்கை அடையும்படி அறிவுறுத்தப்பட்டது.
03/11/1999 அன்று அதிகாலை வேளையில் தனுசனின் அணி தனது இலக்கை அடைந்து நிலையெடுத்துக்கொண்டதுடன் ஆட்லறித்தளத்தின் ஆள்கூறுகளைத் தந்தது. அத்தளம் மீது எமது ஆட்லறிகள் தொடக்கச் சூடுகளை வழங்கின. தனுசன் எறிகணைகளின் விலத்தல்களைக் குறிப்பிட்டுத் திருத்தங்களை வழங்க, அவை சரிசெய்யப்பட்டு அத்தளம் மீது சரமாரியான எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவ்விலக்கின் முக்கியத்துவத்தையும் தாண்டி மேலதிகமாகவே எறிகணைகள் வீசப்பட்டன. அன்றைய அதிகாலை வேளைத்தாக்குதலில் அப்பின்னணித் தளம் ஓரளவு முடக்கப்பட்டது. எதிரிக்குக் கணிசமான உயிரிழப்பும் ஏற்பட்டது. எதிரியானவன் தாக்கப்பட்ட தளத்தைச் சூழ தேடுதல் நடத்தத் தொடங்கியபோது தனுசனின் அணியைப் பாதுகாப்பாகப் பின்னகர்ந்து நிலையெடுக்கும்படி பணிக்கப்பட்டது. 03/11/1999 அன்று மாலையளவில் செழினுக்கு வழங்கப்பட்ட இலக்கும் தாக்குதலுக்கு உள்ளானது. எதிரிக்குப் பாரிய சேதங்கள் ஏற்படாதபோதும் எமது அணிகள் மீது எதிரியின் ஆட்லறிகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த முடிந்தது. இயக்கத்தின் திட்டமும் அதுதான். ஓயாத அலைகள் மூன்றின் போது வன்னிக்களமுனையில் நடைபெற்ற சமரில் நம்பமுடியாதளவுக்கு மிகமிகக் குறைந்த உயிரிழப்பு ஏற்பட்டதற்கு இதுவே முக்கிய காரணம். எதிரியின் பின்னணி ஆட்லறித்தளங்கள் பெரும்பாலானவை செயற்படமுடியாதபடி கரும்புலிகளினதும் எமது ஆட்லறிப்படைப்பிரிவினதும் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் முடப்பட்டன. ஆயினும் எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்தியதும், மிகப்பெரும் ஆக்கிரமிப்புப் பகுதி கைப்பற்றப்படவும் காரணமாக அமைந்த ஆட்லறித்தாக்குதல் மறுநாள் அதிகாலை நிகழ்ந்தது.
ஏற்கனவே குறிப்பிட்டபடி மறைச்செல்வனின் அணி கனகராயன்குளத் தளத்தை நோக்கி நகர்ந்தது. ஆனாலும் 03/11/1999 அன்று காலையில்தான் இலக்கை அண்மிக்க முடிந்தது. எனவே அன்றிரவு இலக்கினுள் ஊடுருவி நிலையெடுப்பது என்றும் நள்ளிரவுக்குப்பின்னர் அத்தளம் மீது தாக்குதலை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. உண்மையில் அத்தளம் மீதான தாக்குதலுக்கு அவசரப்பட வேண்டிய தேவையும் இருக்கவில்லை. காரணம் சண்டைகள் சற்று ஓய்ந்திருந்தன. ஒட்டுசுட்டானையும் நெடுங்கேணியையும் அதைச் சூழ்ந்த இடங்களையும் கைப்பற்றிய கையோடு இயக்கம் தனது தொடர் முன்னேற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது. கரிப்பட்ட முறிப்பு நோக்கி நகர்ந்த அணிகள் அத்தளத்தை அண்மித்து நிலையெடுத்துக் கொண்டன. 03/11/99 அன்று பகல் கடுமையான சண்டைகளெதுவும் நடைபெறவில்லை. தாக்குதலுக்குத் தயார்படுத்தப்பட்டு சண்டையைச் செய்தது சிறியளவிலான அணியே. இப்போது கைப்பற்றப்பட்ட இடங்களைப் பாதுகாத்து நின்ற அணிகளையும் ஒருங்கிணைத்து தொடர் தாக்குதலுக்கான அணிகள் ஒழுங்கமைக்கப்பட்டன. அத்தோடு மோட்டர் நிலைகள் மாற்றப்பட்டு எறிகணை வினியோகங்கள் நடைபெற்று அடுத்தகட்டத் தாக்குதலுக்கு இயக்கம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டது.
அதேநேரம் கரிப்பட்டமுறிப்பில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தளம் மிகமிகப் பலம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. வன்னியில் நின்ற இராணுவத்தின் 55 ஆவது டிவிசனின் தலைமைப் படைத்தளமாகவும் இது இருந்தது. அம்முகாம் மீதான தாக்குதல் மிகக்கடுமையாகவும் நன்றாகத் திட்டமிட்டும் நடத்தப்படவேண்டுமென்பது இயக்கத்துக்கு விளங்கியிருந்தது. அதற்கான தயார்ப்படுத்தலுக்கு அந்த ஒருநாளை இயக்கம் எடுத்துக்கொண்டது. கரிப்பட்டமுறிப்பு மீது தாக்குதலைத் தொடுத்து, தமது தொடர் தாக்குதலின் அடுத்தகட்டத்தைத் தொடக்கும்போதே கனகராயன்குளம் மீதான தாக்குதலும் நடைபெறுவது பொருத்தமாக இருக்குமென்பதால் இயக்கம் அவசரப்படவில்லை. அன்றிரவு (03/11/99) கரிப்பட்டமுறிப்புத் தளம் மீது கடுமையான போர் தொடுக்கப்பட்டது. அத்தளம் வீழுமானால் வன்னியின் ஏனைய படைத்தளங்கள் அதிகம் தாக்குப்பிடிக்க மாட்டா என்பத அனைவரினதும் ஊகமாகவிருந்தது. எதிரியின் தலைமைப்பீடமும் அதை நன்கு உணர்ந்திருந்ததால் அத்தளத்தைப் பாதுகாக்க என்ன விலையும் கொடுக்கத் தயாராக இருந்தது. அந்த ஒருநாளில் மேலதிகப் படைவளங்களைக் கொண்டுவந்து குவித்து அத்தளத்தைப் பலப்படுத்தியிருந்தது.
எதிர்பார்த்தது போலவே அன்றிரவு மறைச்செல்வன் தனது அணியுடன் கனராயன்குளப் படைத்தளத்தை ஊடுருவி நிலையெடுத்துக் கொண்டான். அப்படைத்தளம் பெரும் எண்ணிக்கையில் – கிட்டத்தட்ட 13 ஆட்லறிகளைக் கொண்டிருந்த ஆட்லறித்தளத்தையும் பெரிய மருத்துவமனையையும் கொண்டிருந்ததோடு வன்னிப் படைநடவடிக்கையின் முக்கிய கட்டளையதிகாரியின் கட்டளைபீடமாகவும் தொழிற்பட்டது. உலங்குவானூர்தி இறங்கியேறும் வசதிகள் படைத்த பெரிய படைத்தளமாக பெரிய பரப்பளவில் கனகராயன்குள முகாம் அமைந்திருந்தது. இந்தத் தளம் மீதான தாக்குதல் மிகப்பெரியளவில் எதிரிக்கு உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தவேண்டுமென இயக்கம் திட்டமிட்டிருந்தது. அதுதான் அனைத்து நடவடிக்கைக்குமான கட்டளை மையமாக இருந்ததால் இத்தளத்தின் தோல்வி மிகப்பெரும் வீழ்ச்சியாக படைத்தரப்புக்கு அமையுமெனவும் இயக்கம் கணித்திருந்தது.
இயக்கம் எதிர்பார்த்ததைப்போலவே அத்தளம் மீதான தாக்குதல் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான சேதத்தை அத்தாக்குதல் எதிரிக்கு ஏற்படுத்தியது. அந்தப் படைத்தளத்தளமே நாசம் செய்யப்பட்டது என்றளவுக்கு மிகக் கடுமையான அழிவை அத்தளம் சந்தித்தது. மிக அருமையாக அந்தத் தாக்குதலை நெறிப்படுத்தினான் கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.
இதுபற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
- இளந்தீரன் -
No Comment to " களங்கள் -9. ஓயாத அலைகள் மூன்று. "