களங்கள் - 8. ஓயாத அலைகள் மூன்று
02.11.1999.
அதிகாலை மூன்று மணியிருக்கும். செல்வன் வந்து எழுப்பினான். மிகத் தூரத்தே மெலிதாக வெடிச்சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அப்போதுகூட இராணுவம் முன்னேற முயற்சித்துத்தான் சண்டை நடப்பதாக நினைத்துக்கொண்டேன். அங்கிருந்த பலரும் அப்படித்தான் நினைத்தார்கள் ஓரிருவரைத் தவிர.
என்ன நடக்கிறது? எப்பகுதியை நோக்கி முன்னேறுகிறான்? களநிலைமை என்ன? போன்ற கேள்விகள் மனதைக் குடைந்தன. இப்படியான நேரங்களில் வோக்கியை (தொலைத் தொடர்புக் கருவி) ஓடவிட்டுப் பார்த்து விடயங்களை ஓரளவு ஊகித்துக் கொள்வோம். நேற்றுத்தான் கட்டியிருந்த ‘குறோசை’ கழற்றி வைத்திருந்தோம். அந்த அதிகாலையில் நரேஸ் அண்ணா முற்றத்திலிருந்த அசோகா மரத்தில் ஏறி குறோசை உயர்த்திக் கட்டினார். எம்மால் வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்கக் கூடியதாக இருந்தது.
பிடிபட்ட அதிர்வெண்கள் மோட்டர் அணிகளுக்குரியனவாகவே இருந்தன. சண்டையணிகளின் தொடர்புகள் கிடைக்கவில்லை. கட்டளைப்பீடங்களின் தொடர்புகளும் கிடைக்கவில்லை. மோட்டர் அணிகளின் உரையாடல்களின்படி ஏராளமான எறிகணைகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை ஊகிக்க முடிந்தது. எறிகணைகளுக்கான திருத்தங்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன. அதேவேளை மோட்டர்களை இடம்மாற்றும் கட்டளைகளும், விரைவாக நகரும்படியான கட்டளைகளும் அதிகம் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. மோட்டர்கள் நிலைகள் நகவர்வதைக் கொண்டு, களமுனை மாற்றமடைகிறது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. ஆனாலும் இராணுவம் முன்னேறுகிறதா இயக்கம் முன்னேறுகிறதா என்பதை ஊகிக்க முடியவில்லை. சண்டை தொடங்கிய நேரத்தைப் பார்க்கும்போது இராணுவம் நடவடிக்கை தொடங்கியருக்கச் சந்தர்ப்பமில்லை என்றே கருதமுடிந்தது. எனினும் இயக்கம் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யும் நிலையில் இருக்கவில்லையென்றே எமது மனதில் ஆழமாகப் படிந்திருந்ததால் அதை நம்பவும் முடியவில்லை. அன்றைய அதிகாலை வோக்கியை ஒட்டுக்கேட்பதிலேயே கழிந்தது.
இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.
விடிந்ததும் கடற்கரையிலிருந்த ‘யாழ் செல்லும் படையணி’ப் போராளிகளைச் சந்திக்கச் சென்றேன். அவர்களும் எம்மைப் போலவே வோக்கியை ஓடவிட்டுக் கொண்டிருந்தனர். கடற்கரையில் அவர்களுக்கு அதிகம் தெளிவாக இருந்தது. அவர்களுக்கும் என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை. ஆனால் முதல்நாள் அங்கு வந்திருந்த வசந்தன் மாஸ்டர், எல்லோருக்கும் பதுங்குகுழி வெட்டும்படி பணித்துவிட்டுப் போயிருந்தார். முதல்நாள் பகல் முழுவதும் பதுங்குகுழி வெட்டி முடித்திருந்தார்கள். ஆகவே இதுவொரு திட்டமிட்ட வலிந்த தாக்குதலாகவே இருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டோம். மீண்டும் எமது முகாமுக்குத் திரும்பினேன். அன்று செங்கதிர்வாணன் அண்ணாவின் வித்துடலைப் பொறுப்பேற்கச் செல்ல வேண்டியவர்கள் சென்றுவிட்டார்கள்.
சசிக்குமார் மாஸ்டரும் இளம்புலி அண்ணாவும் கிணற்றடியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்கள். என்னையும் செல்வனையும் சேர்த்துக் கொண்டார்கள். அப்போதுதான் நிறைய விடயங்கள் அறியக்கூடியதாக இருந்தன. 29/10/1999 அன்று பராக்கிரமபுர முகாமுக்கான வேவுப்பணியை முடித்துக் கொண்டு திரும்பிவரும்போது நடந்த எதிர்பாராத மோதலில் கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரச்சாவடைய காயப்பட்ட கிரியையும் தூக்கிக்கொண்டு அன்றிரவுக்குள்ளேயே இராணுவக் காப்பரணைக் கடந்துவந்து சேர்ந்தவர் இளம்புலி அண்ணா. முப்பதாம் திகதி பகலும் இரவும் அவர் எம்முடன் இருக்வில்லை. 31 ஆம் நாள் கரும்புலிகள் அணியையும் நவம் அண்ணாவின் அணியையும் மணலாற்றுப் பகுதியிலுள்ள இராணுவக் காப்பரண் வரிசைக்குள்ளால் பாதுகாப்பாக அழைத்துச்சென்று வழியனுப்பிவைத்துவிட்டு வந்திருந்தார். இடைப்பட்ட அந்த 30 ஆம் நாள் அவர் என்ன செய்தார் என்பது இப்போதுதான் தெரிந்தது.
அன்றிரவு இளம்புலி அண்ணா இன்னோர் அணியை மணலாற்று இராணுவக் காப்பரண் வரிசைக்குள்ளால் நகர்த்தி உள்ளே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருந்தார். அது சிறுத்தைப் படையணியைச் சேர்ந்தவர்களில் நாற்பது பேரைக் கொண்ட பெரிய அணி. மேஜர் ஆஷா தலைமையிலான அவ்வணியை அழைத்துச் சென்று இராணுவக் காப்பரண்களை ஊடுருவி பாதுகாப்பான இடம்வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்திருந்தார். தொடர்ச்சியான அலைச்சல்களுக்குள்ளும் இடைவிடாத இரவு நகர்வுகளுக்குள்ளும் அந்த வேவுப்புலி செய்த பணிகள் வியப்பூட்டுபவை.
கரும்புலிகளின் அணிகளுக்கு முன்பே ஆஷா அண்ணாவின் அணி உள்நுழைந்த செய்தியானது, இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது திட்டமிடப்பட்ட ஒரு வலிந்த தாக்குதல் என்பதைத் தெளிவாக உணர்த்தியது. பின்னர் அறிந்து கொண்டதன்படி, ஒட்டுசுட்டான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது ஏற்கனவே ஊடுருவியிருந்த ஆஷா அண்ணாவின் அணி பின்பக்கத்தால் தாக்குதல் நடத்தி அம்முகாமின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
காலை 11.00 மணியளவிலேயே செய்திகள் வந்துவிட்டன. ஒட்டுசுட்டான் முகாம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு நெடுங்கேணியில் சண்டை நடந்துகொண்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. அப்போதும் இதுவோர் தொடர் சண்டை என்று நாம் நினைக்கவில்லை. வழமைபோலவே ஒரு முகாம் கைப்பற்றல் என்றே கருதியிருந்தோம். அதுவரையான எமது போராட்ட வரலாற்றில் அப்படியான தொடர் நிலப்பரப்பு மீட்டல் என்பது நடைபெறவில்லை என்பதும் முக்கிய காரணம்.
காலையில்தான் - ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் முழுமையாகக் கைப்பற்றபின்னரே - அந்த முகாமலிருந்து இராணுவத்தை முன்னேறவிடாமல் மறித்திருந்த போராளிகளுக்கு அம்முகாம் மீதான தாக்குதல் செய்தியும் அது கைப்பற்றப்பட்டுவிட்டது என்ற வெற்றிச் செய்தியும் தெரியவந்தது. அந்தளவுக்கு மிக இரகசியமாகத் திட்டமிடப்பட்டு மிகக்குறைந்தளவு அணியினரைக்கொண்டு அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. வரலாற்றுப் பெருமைமிகு ஓயாத அலைகள் மூன்று தொடர்த் தாக்குதல் இப்படியாகவே தொடங்கியது. முதுநிலைத் தளபதிகளில்கூட மிகச்சிலருக்கு மட்டுமே இத்திட்டம் தெரிந்திருந்தது.
அன்று மதியமே, செங்கதிர்வாணன் அண்ணாவின் வித்துடல் எடுத்துவரப்பட்டிருந்தது. முள்ளியவளையில் அவரது வீட்டில் அன்று மாலைவரை வைக்கப்பட்டு இரவு ஏழு மணியளவில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்படுமென்று திட்டமிடப்பட்டிருந்தது. அன்று மதியத்திலிருந்தே புலிகளின் குரல் வானொலி சிறப்பு ஒலிபரப்புக்களைத் தொடங்கிவிட்டது. இடங்கள் கைப்பற்றப்படும் செய்திகள் வரத்தொடங்கின. அன்று மாலையிலிருந்தே மக்கள் பேரெழுச்சியோடு செயற்படத் தொடங்கினார்கள். களமுனைப் போராளிகளுக்கான உணவுகளைச் சேகரித்தல், கைப்பற்றப்பட்ட இடங்களில் பொருட்கள், ஆயுத தளபாடங்கள் சேகரித்தல், இராணுவத்தினரின் உடல்களைச் சேகரித்தல் போன்ற பணிகளுக்கென மக்கள் மும்முரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். அதேவேளை எல்லைப்படையாகவும் மக்கள் களமுனைக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
அன்று இரவு முள்ளியவளை துயிலுமில்லத்தில் கரும்புலி மேஜர் செங்கதிர் வாணனின் வித்துடல் விதைக்கப்பட்டது. ஒட்டுசுட்டான் களமுனையில் நின்றிருந்த இம்ரான்-பாண்டியன் படையணியிலிருந்த போராளிகள் சிலர் அன்று முள்ளியவளை மருத்துவமனைக்கு வந்திருந்தனர். செய்தி கேள்விப்பட்டு துயிலுமில்லத்துக்கு வந்தனர். வித்துடல் விதைப்பு முடிந்ததும் அவர்களோடு கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று அதிகாலை களமுனையில் நடந்த கூத்தை சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள்.
ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்புப் பாதையையும் அதிலிருந்து அம்பகாமம் பக்கமாக கணிசமான நீளத்துக்கு இம்ரான்-பாண்டியன் படையணியே காப்பரண்கள் அமைத்து களமுனையைப் பாதுகாத்து வந்தது. 02/11/1999 அன்று அதிகாலை ஒட்டுசுட்டானுக்கும் அம்பகாமத்துக்கும் இடைப்பட்ட துண்டில்தான் லெப்.கேணல் ராகவன் தலைமையிலான அணியொன்றும் வேறு ஓர் அணியும் இருவேறு இடங்களில் ஊடறுப்புத் தாக்குதலைத் தொடங்கியிருந்தன. ராகவன் அண்ணா சண்டை தொடங்கும்போதே வீரச்சாவடைய, தொடர்ந்தும் அவ்வணி கடுமையாகப் போரிட்டு இராணுவக் காப்பரணைக் கைப்பற்றியது. ஓர்அணி ஒட்டுசுட்டான் பக்கமாக இராணுவக் காப்பரண்களைக் கைப்பற்றி முன்னேற மறுஅணி கரிப்பட்ட முறிப்பு முகாம் பக்கமாக காப்பரண்களைக் கைப்பற்றி முன்னேறியது.
இந்தச் சண்டைபற்றி எந்தவிதத் தகவலும் – சிறு சந்தேகம் வரக்கூடியளவுக்கான சமிக்கைகள்கூட அப்பகுதிக் களமுனையைக் கவனித்துக் கொண்டிருந்த அணிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. நள்ளிரவில் சண்டை தொடங்கியதும் களமுனையில் நின்றவர்கள் உஷாரானார்கள். வழமையாக நடக்கும் பதுங்கித் தாக்குதல் என்று நினைத்தவர்களுக்கு போகப்போக குழப்பமாகவே இருந்தது. சத்தங்கள் கேட்பது எதிரியின் காப்பரண் வரிசையில். அத்தோடு, களமுனைப் பொறுப்பாளர் எல்லாக் காப்பரண்களோடும் வோக்கியில் தொடர்பு கொண்டளவில் ஒரு காப்பரணுக்குமே அடிவிழவில்லை என்பது உறுதியானது. அப்படியானால் என்னதான் நடக்கிறது? களமுனையில் நின்ற ஒருவருக்குமே ஒன்றும் விளங்கவில்லை. உள்நுழைந்த அணிகள் வேவு அணிகள் ஏதாவது திரும்பிவரும்போது முட்டுப்பட்டு விட்டார்களா? அப்படியானால் இப்படியான கடும்சண்டை நடக்க வாய்ப்பில்லையே? எமது பக்கமிருந்து எந்த அணிகளும் எம்மைத் தாண்டிப் போகவில்லையே? எதிரி தங்களுக்குள் சண்டை பிடிக்கிறானா? மிகவும் விசித்திரமான ஓர் உணர்வுதான் போராளிகளுக்கு இருந்தது.
கட்டளைப் பீடங்களிலிருந்த களமுனைப் பொறுப்பாளர்கள் வோக்கியை ஓடவிட்டுப் பிடித்ததில் ஓரளவு ஊகித்துக் கொண்டனர். ஆனால் காப்பரண்களில் நின்ற போராளிகளுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அன்றிரவு முழுவதும் ஆமி வருவான், ஆமி வருவான் என்று அதிதீவிர விழிப்புடன் இருந்தனர். காலையில்தான் - ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் முழுமையாகக் கைப்பற்றபின்னரே - அந்த முகாமலிருந்து இராணுவத்தை முன்னேறவிடாமல் மறித்திருந்த போராளிகளுக்கு அம்முகாம் மீதான தாக்குதல் செய்தியும் அது கைப்பற்றப்பட்டுவிட்டது என்ற வெற்றிச் செய்தியும் தெரியவந்தது. அந்தளவுக்கு மிக இரகசியமாகத் திட்டமிடப்பட்டு மிகக்குறைந்தளவு அணியினரைக்கொண்டு அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. வரலாற்றுப் பெருமைமிகு ஓயாத அலைகள் மூன்று தொடர்த் தாக்குதல் இப்படியாகவே தொடங்கியது. முதுநிலைத் தளபதிகளில்கூட மிகச்சிலருக்கு மட்டுமே இத்திட்டம் தெரிந்திருந்தது.
ஓயாத அலைகள் மூன்றின் முதற்கட்டத்தில் ஏற்கனவே உள்நுழைந்திருந்த கரும்புலி அணிகளின் பங்கென்ன? தாக்குதல் தொடங்கியபோது அவர்களின் நிலையென்ன? என்னென்ன நடந்தன? போன்றவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தொடரும்...
- இளந்தீரன் -
No Comment to " களங்கள் - 8. ஓயாத அலைகள் மூன்று "