களங்கள் – 7. ஓயாத அலைகள் மூன்று
01/11/1999
ஏற்கனவே குறிப்பிட்டது போல் அன்றையநாள் அலுப்பாகவே இருந்தது. மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு மாமர நிழலிலிருந்து நானும் செல்வனும் கதைத்துக் கொண்டிருந்தோம். கரும்புலிகளின் வரலாற்றை ஆவணமாக்கும் கடமை வழங்கப்பட்டு செல்வன் அங்கு வந்திருந்தான். அன்று செல்வனும் ஓய்வாக இருந்ததால் அதிகம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. போராட்டத்துக்கு வெளியேயும் பல்வேறு விடயங்கள் பற்றி நாம் பேசிக்கொள்வது வழமை. அன்று இருவருமே ஓய்வாக இருந்த காரணத்தால் புலிகளின் குரல் நிறுவனத்தின் செயலகத்துக்குச் சென்று வர முடிவெடுத்தோம். செல்வனின் படைப்பொன்றை நேரிலே கொடுப்பதற்காக அன்று மாலை இருவரும் சென்றோம்.
நாம் தங்கியிருந்த கரைச்சிக் குடியிருப்பிலிருந்து சற்றுத் தூரத்தில் தான் முள்ளியவளையில் புலிகளின் குரல் செயலகம் அமைந்திருந்தது. மாலை நான்கு மணியளவில் நாம் அங்குச் சென்றிருந்தோம். அப்போது மக்களோடு கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மக்கள் நிரம்பவே குழம்பிப் போயிருந்தார்கள். முள்ளியவளை எந்நேரமும் இராணுவத்தினரின் வசம் வீழ்ந்துவிடுமென்ற நிலையே மக்களிடம் காணப்பட்டது. ஒட்டுசுட்டானிலிருந்தோ நெடுங்கேணியிலிருந்தோ அல்லது இரு இடங்களிலிருந்தும் சமநேரத்திலோ இராணுவம் முன்னேறினால் முள்ளியவளை வீழ்வதைத் தடுக்க முடியாது என்பது பொதுவாக எல்லோரினதும் கருத்தாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் பொதுமக்களும் சுழற்சி அடிப்படையில் எல்லைப்படையினராக முன்னணிக் காவலரண் வரிசையில் கடமையாற்றி வந்ததால், புலிகளின் காப்பரண் வரிசையின் பலம், பலவீனம் என்பன மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தன.
மேலும், நீர்சிந்து என்ற பெயரில் இரண்டு தொடர் நடவடிக்கைகளை எதிரி அடுத்தடுத்து நடத்தி புலிகளின் படையணிகளுக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தியிருந்தான் என்பதோடு எமது படையணிகளதும் மக்களினதும் மனவுறுதியை அசைத்திருந்தான் என்பதும் உண்மை. மிகவிரைவில் எதிரி புதுக்குடியிருப்பை அல்லது முள்ளியவளையை நோக்கிய படையெடுப்பைச் செய்வான் என்றும், அதை முறியடிக்கும் நிலையில் புலிகள் இல்லை என்றும் கருத்துப் பரவியிருந்தது. அன்றைய மாலைச் சந்திப்பில் மக்கள் ஒருவித கிலேசத்த்தின் மத்தியில் இருக்கிறார்கள் என்பதை எம்மால் விளங்கக் கூடியதாக இருந்தது.
ஆனால் முள்ளியவளையில் எமது இயக்கத்தின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமுமில்லை என்றளவில் மக்களுக்குக் கொஞ்சம் தெம்பாக இருந்தது. முள்ளியவளையை மையமாக வைத்தியங்கிய புலிகளின் குரல் நிறுவனமோ, நிதர்சனம் நிறுவனமோ, வேறு கலையகங்களோ, எமது மருத்துவமனைகளோ அங்கிருந்து அகற்றப்படும் எந்தத் தடயமும் இருக்கவில்லை. எல்லாமே இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன. அந்த ஒரு விடயம் மட்டுமே மக்களுக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.
ஆனாலும் நானும் செல்வனும் எம்மோடு கதைத்தவர்களைத் தேற்றினோம். அதேநேரம் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டிய நிலையுமிருந்தது. ஏற்கனவே எமது கரும்புலியணிகள் நடவடிக்கைக்காகக் களமிறங்கிவிட்ட நிலையில் அவைபற்றிய சிறிய தகவலும் எமது வாயிலிருந்து வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். தமிழன்பன் (ஜவான்) அண்ணன் கரும்புலி அணியின் நிர்வாகத்தோடு நெருக்கமான தொடர்பிலிருந்ததால் அவர் சில விடயங்களை ஊகித்து நம்பிக்கையோடு இருந்தார். ‘தலைவர் கைவிடமாட்டார். முள்ளியவளையையும் புதுக்குடியிருப்பையும் கைவிட்டுவிட்டு இயக்கம் எங்கு போவது? ஆகவே அதெல்லாம் நடக்காது. நம்பிக்கையாக இருங்கள்.’ என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார்.
அன்று பொழுதுபட நானும் செல்வனும் தளம் திரும்பும்போது மக்களின் மனநிலை பற்றியே எமது பேச்சு இருந்தது. ஒட்டுசுட்டான் பகுதியில் நிலைகொண்டிருந்த எமது இம்ரான்-பாண்டியன் படையணிப் போராளிகளோடு ஏற்கனவே கதைத்தளவில் அவர்களிடமும் ‘என்ன செய்யப் போகிறோம்?’ என்ற குழப்பமிருந்ததை அவதானித்திருந்தோம். இதை மாற்ற வேண்டுமானால் களத்தில் ஏதாவது பெரிதாக நடக்க வேண்டும். இப்போது களமிறங்கியிருக்கும் கரும்புலியணிகள் செய்யப்போவது முழுவெற்றியாக அமைய வேண்டுமென்று தான் அன்றிரவு முழுவதும் எமது கதையிருந்தது.
அன்றிரவு மணலாற்றிலிருந்து மற்றவர்களும் திரும்பியிருந்தார்கள். கரும்புலி அணிகளும் நவம் அண்ணனின் தலைமையிலான அணியும் வெற்றிகரமாக உள்நுழைந்து நகரத் தொடங்கவிட்டன. மறுநாள் காலை, இரண்டுபேர் மல்லாவிக்குச் செல்ல வேண்டுமென்று இரவு கதைக்கப்பட்டது. 29 ஆம் நாள் வீரச்சாவடைந்திருந்த கரும்புலி மேஜர் செங்கதிர்வாணனின் வித்துடலை இராணுவம் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கமூடாக ஒப்படைத்திருந்தது. நீர்சிந்து – 2 நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மகளிர் படையணியினரின் வித்துடல்களோடு சேர்த்து செங்கதிர்வாணனின் வித்துடலையும் இராணுவம் ஒப்படைத்திருந்தது. மறுநாட்காலை அவ்வித்துடலைப் பொறுப்பேற்று வருவதற்காகவே மல்லாவிக்கு இருவரை அனுப்பும் திட்டம் கதைக்கப்பட்டதோடு, செங்கதிர்வாணனின் வீரச்சாவு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் வேலையும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே முள்ளியவளையிலிருந்த செங்கதிர்வாணனின் வீட்டுக்காரருக்குச் செய்தி சொல்லப்பட்டுவிட்டதாயினும் அவ்வீரச்சாவு அதிகாரபூர்வமாக புலிகளின் குரலில் அறிவிக்கப்படவில்லை. மணலாற்றில் வீரச்சாவடைந்தது ஒரு கரும்புலி என்ற தகவல் வெளியிடப்பட்டால் எதிரி உஷாரடைந்துவிடுவான் என்பதால் அந்த அறிவித்தலை உடனடியாக வெளியிடவில்லை.
பொதுவாக கரும்புலியின் வித்துடலை வைத்து வீரச்சாவு நிகழ்வு செய்யும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. செங்கதிர்வாணனின் வீரச்சாவு நிகழ்வு அவரது வித்துடலை வைத்துத்தான் நிகழப்போகிறது. கைக்குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டாலும்கூட உடல் பெருமளவு சிதையாமல் முழுமையாகவே இருந்தது.
அன்று (01.11.1999) இரவு வேளைக்கே உணவை உட்கொண்டுவிட்டு நானும் சசிக்குமார் மாஸ்டரும் செல்வனும் மாமரத்தடியிலிருந்து கதைத்தோம். மக்களின், சண்டைக் களமுனையில் நிற்கும் போராளிகளின் மனநிலைகள் பற்றியே எமது கதையிருந்தது. எந்தெந்த அணிகள் எந்தெந்த பகுதிகளைக் கவனித்து வருகின்றன, யார்யார் எப்பகுதிகளுக்குப் பொறுப்பாக நிற்கிறார்கள், எந்தப் பகுதியில் எதிரியின் முன்னேற்றத்தை இயக்கம் எதிர்பார்க்கிறது போன்ற விடயங்களைக் கதைத்துக் கொண்டிருந்தோம். அடுத்தநாள் நிறையப் பணிகள் இருந்ததால் அன்றிரவு வேளைக்கே படுத்துவிட்டோம். அன்றிரவு ஏதாவது நடக்குமென்ற எதிர்பார்ப்பு எமக்கு இருக்கவில்லை என்பதுதான் உண்மை. இயக்கம் வலிந்த தாக்குதலொன்றை பெருமெடுப்பில் நடத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எமக்கு இருக்கவில்லை. வவுனியா ஜோசப் முகாம் மீதோ மன்னார் தள்ளாடி முகாம் மீதோ முன்பு இயக்கத்தால் நடத்தப்பட்ட ஆட்லறித் தாக்குதல்கள் போல் இப்போதும் ஓரிரு தளங்கள் மீது எறிகணைத்தாக்குதல் நடத்தப்படப் போகிறது என்றளவில் மட்டுமே எமது கணிப்பிருந்தது. அதைவிடவும் பெரிதாக ஏதும் நடக்காதா என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது.
தொடரும்...
- இளந்தீரன் -
No Comment to " களங்கள் – 7. ஓயாத அலைகள் மூன்று "