களங்கள் - 15. ஓயாத அலைகள் மூன்று
கரும்புலிகள் அணியைச் சேர்ந்த ஆண் போராளிகள் அனைவரையும் புறப்படும்படி அறிவுறுத்தல் வந்திருந்தது. இரவோடு இரவாக அணிகள் ஒழுங்கமைக்கப்பட்டன. ஊடுருவல் நடவடிக்கையிருந்து திரும்பி சரியான முறையில் ஓய்வில்லாமலேயே அவர்கள் மீண்டும் புறப்பட்டார்கள். புலியணிகள் ஓமந்தைவரை முன்னேறியிருந்த நிலையில் சண்டை தற்காலிகமாக ஓய்ந்திருந்தது. அடுத்தகட்டம் உடனடியாகவே தொடங்கும்போல இருந்தது. ஏற்கனவே மணலாற்றின் மிகுதிப் பகுதிகளைக் கைப்பற்றும் திட்டம் பற்றி சொர்ணம் அண்ணன் விளங்கப்படுத்திய திட்டம் மனத்தில் நின்றது. தற்போது வவுனியா நகர்ப்பகுதியில் வாழும் மக்களைப் பாதுகாப்பாக இடங்களுக்கு நகரச் சொல்லி இயக்கம் அறிவித்துக் கொண்டிருப்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை வவுனியாப் பகுதியை மீட்பதாக அமையுமெனவும் ஊகமிருந்தது. எதுவென்றாலும் எதிரிக்கு நேர அவகாசம் கொடுக்காமல் தாக்கி முன்னேற வேண்டுமென்பது முக்கியமாக அனைவராலும் உணரப்பட்டது.
உள்நடவடிக்கையிலிருந்து வெளியேறிய அணியில் மயூரனின் நிலை சற்றுச் சிக்கலாக இருந்தது. முகமெல்லாம் அதைத்து, கை கால்கள் வீங்கியிருந்தன. முழு உடற்பலத்துடன் மயூரன் இருக்கவில்லை. நகர்வின்போது முட்கள் கீறி பாதங்கள் கிழிந்திருந்தன. ஆனாலும் முகம் அதைத்துள்ளதற்கான சரியான காரணம் தெரியவில்லை. முகாமில் நின்ற மருத்துவப் போராளியிடம் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு சமாளித்தான் மயூரன். அது சாதாரண பிரச்சனைதான் என்பதைப் போல் நடந்துகொண்டான். முள்ளியவளை மருத்துவமனைக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டபோதும், தான் அணியோடு சேர்ந்து போகிறேன், நிலைமை மோசமானால் மருத்துவமனை செல்கிறேன் என்று அடம்பிடித்து அணியினரோடு புறப்பட்டான். இப்போது கரும்புலிகள் போவது நேரடியான சண்டைக்களத்திற்கு அல்ல என்பதாலும், முகம் அதைத்திருந்ததைத் தவிர வேறு அறிகுறிகள் இல்லாத காரணத்தால் சிறிய பிரச்சனையாகத் தோன்றியதாலும் மயூரன் அணியினரோடு போக அனுமதிக்கப்பட்டான்.
உண்மையில் மயூரனின் உடல் கடுமையான சோதனையை ஏற்கனவே எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தது. அவனது சிறுநீரகங்கள் சரியாக இயங்காமல் பழுதடையத் தொடங்கியதற்கான அறிகுறியே அன்று தொடங்கியிருந்து. இரண்டு கிழமைகளின் பின்னர்தான் முழுமையான மருத்துவச் சோதனைக்கு மயூரன் உட்படுத்தப்பட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவனோ அந்த நாட்களில் தனது உபாதைகளை மற்றவர்களுக்கு வெளிக்காட்டாமல் ஓர்மத்தோடு உழைத்தான். சிறுநீரகப் பழுது கண்டுபிடிக்கப்பட்டநிலையில் கடற்கரும்புலிகள் அணிக்கு மாற்றலாகி திருகோணமலையில் கடற்படைக்கலம் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் மயூரனாக வீரச்சாவடைந்தான்.
இப்போது கரும்புலிகள் அணியின் ஆண் போராளிகள் சென்றது விடுதலைப் புலிகளின் ஆட்லறிப் படையணிக்கு. ஓயாத அலைகள் மூன்றின் அடுத்த கட்டம் நாம் எதிர்பார்த்ததைப் போல் மணலாற்றுப் பகுதியைக் கைப்பற்றவோ வவுனியாப் பகுதியைக் கைப்பற்றவோ நடக்கவில்லை. மாறாக ரணகோச மூலம் படையினர் கைப்பற்றியிருந்த பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையாக அமைந்திருந்தது. பள்ளமடு, பெரியமடு, தட்சனாமருதமடு, மடு, பண்டிவிரிச்சான் உட்பட பெருமளவு மன்னார் மாவட்ட நிலப்பகுதி மீட்கப்பட்டது. இந்தச் சண்டையின்போது கரும்புலிகள் எமது ஆட்லறிப் படையணியினரோடு இணைந்து பணியாற்றினார்கள்.
ஓயாத அலைகள் மூன்று தொடங்கியபோதே இயக்கத்தின் ஆட்லறிப் படையணியின் விரிவாக்கம் போராளிகளால் உணரப்பட்டது. அதுவரை இயக்கம் எதிரியிரிடமிருந்து கைப்பற்றிய ஆட்லறிகள் மூன்று மட்டுமே. அவற்றின் தூரவீச்சு ஏறக்குறைய 17 கிலோ மீற்றர்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் மூன்றின்போது கரும்புலிகள் திருத்தம் சொல்லிக் கொடுக்க நடத்தப்பட்ட தாக்குதலின்போதே இயக்கம் ஆட்லறிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தது உணரப்பட்டது. அத்தோடு தூரவீச்சுக் கூடிய ஆட்லறிகளும் பயன்பாட்டிலுள்ள என்பதையும் உணர முடிந்தது. இப்போது மன்னார்ப்பகுதிச் சண்டையின்போது கரும்புலியணிகளும் சில ஆட்லறிகளைப் பொறுப்பெடுத்துத் தாக்குதல் நடத்தியமை, இயக்கத்தின் ஆட்லறிப்பெருக்கத்தை எமக்குக் கோடிட்டுக் காட்டியது. வன்னியின் தென்பகுதிச் சண்டைகள் முடிந்து வடபகுதிநோக்கி ஓயாத அலைகள் வீசத் தொடங்கியபோது ஆட்லறிப்படையணி பெருமளவு போராளிகளைக் கொண்டு பாரிய கட்டமைப்பாக வளர்ந்திருந்தது.
மன்னார்ப்பகுதிச் சண்டைகள் ஓய்வுக்கு வந்து கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகள் பலப்படுத்தப்பட்டன. அணிகள் பழையபடி தளத்துக்குத் திரும்பியிருந்தன. வன்னியெங்கும் வெற்றி விழாக்கோலமாகவே இருந்தது. மன்னார்ப்பகுதி மீட்பின்போது மடுத்தேவாலயக் குண்டுவீச்சில் நாற்பத்திரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்ட சோகம் நடந்தேறியது. இந்தப் பகுதிகளில் நடந்த சண்டைகளிலும் எதிரி விரைவாகவே ஓட்டமெடுக்கத் தொடங்கியதால் மிகவிரைவாகவும் இலகுவாகவும் வெற்றிகள் கிடைத்தன. நவம்பர் மாதம் இறுதிப்பகுதியில் தள்ளாடி இராணுவ முகாமைச் சூழவுள்ள பகுதிகளில் நடந்த மோதல்களோடு சண்டை ஓய்வுக்கு வந்திருந்தது.
அடுத்தகட்டம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. எமது எதிர்பார்ப்பு மணலாற்றுப்பகுதியை மீட்பதாகவே அமையுமென்று இருந்தது. அதற்கேற்றாற்போல் மணலாற்றுப்பகுதியில் வேவுப்பணிகளும் நடந்துகொண்டிருந்தன. கரும்புலிகள் தொடர்ந்தும் பயிற்சியிலீடுபட்டார்கள். கடற்பயிற்சியை முடிக்காதவர்கள் மீளவும் கள்ளப்பாட்டில் கடற்பயிற்சியை முடித்தார்கள். வெளியே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமல் கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். மணலாற்றிலே தொடர்ந்தும் வேவு நடந்துகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம். மணலாற்றை மீட்பது பற்றியே எமது பேச்சும் சிந்தனையுமிருந்தது.
அவ்வாண்டுக்கான மாவீரர் நாளுக்கு முள்ளியவளை துயிலுமில்லம் சென்றோம். அம்மாவீரர்தினம் வழமையைவிட சிறப்பாக இருந்தது. ஏனென்றால் வன்னிப்பகுதியின் முழு மாவீரர் துயிலுமில்லங்களும் எம்மால் விடுவிக்கப்பட்டிருந்தன. மிகப்பெரும் வெற்றியின் மேல்நின்று அந்த மாவீரர்நாள் நினைவுகூரப்பட்டது. துயிலுமில்லம் வந்த ஏனைய படையணிப் போராளிகளோடு கலந்துரையாடி விடைபெற்றோம். எங்குமே பயிற்சிகள்தாம் நடந்துகொண்டிருந்தன. லெப்.மயூரன் பதுங்கிச் சுடும் அணியின் இரண்டாவது தொகுதிக்கான பயிற்சிகள் தொடங்கியிருந்தன. கவசப் படையணி, சிறப்பு ஆயுதப் படையணிகள் புத்துருவாக்கம் பெற்று மிளமைக்கப்பட்டன.
இயக்கத்தின் அடுத்தகட்டம் யாழ்ப்பாணமாகவே இருந்தது. சுண்டுக்குளம் கடற்கரை வழியாக வெற்றிலைக் கேணி, கட்டைக்காடு போன்ற தளங்கள் மீது தாக்குதலை நடத்தி வடபகுதி மீதான ஓயாத அலைகள் அடிக்கத் தொடங்கியது. சண்டை தொடங்கிய நாளிலிருந்தே கரும்புலிகளின் அணிகள் தொடர்ச்சியாக சண்டையில் பங்குபற்றியிருந்தன. மூன்று, நான்கு பேர் கொண்ட அணிகளாக ஊடுருவி எதிரியின் பின்தளங்களுக்கான ஆள்கூறுகளையும் ஆட்லறி எறிகணைகளுக்கான திருத்தங்களையும் சொல்லி அவற்றை நிர்மூலமாக்குவதே கரும்புலிகளின் பணியாகவிருந்தது. வன்னிப் பகுதியில் நடந்த சண்டைகள் போலன்றி இந்த நடவடிக்கையில் கரும்புலிகள் பலர் வீரச்சாவடைந்தனர்.
கட்டைக்காடு, வெற்றிக்லைக்கேணி, பரந்தன் போன்ற தளங்கள் வீழ்ச்சியடைந்தபின்னர் சண்டை சற்றுத் தேங்கியிருந்தது. ஆனையிறவின் பின்பக்கமாக ஊடுருவி ஆனையிறவுத் தளத்தைத் தனிமையாக்கும் இரு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் சிலகாலம் சண்டைக்களம் இருதரப்பினதும் தற்பாதுகாப்பான சமர்க்களமாக மாறியிருந்தது.
இந்நிலையில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கம் திட்டமிடப்பட்டது. அதேவேளையில் பளையிலிருந்த எதிரியின் ஆட்லறித்தளத்தைத் தாக்கியழிக்கவும் திட்டமிடப்பட்டது. ஆட்லறித் தளத்தைத் தாக்கியழிக்கும் பணி கரும்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
-தொடரும்
- இளந்தீரன் -
No Comment to " களங்கள் - 15. ஓயாத அலைகள் மூன்று "