களங்கள் - 11. ஓயாத அலைகள் மூன்று
03/11/1999
இப்போது நாம் கரைச்சிக் குடியிருப்பில்தான் இருந்தோம். அன்று பகல் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்குச் சென்று வந்திருந்தேன். மக்களெல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள். களமுனைப் போராளிகளுக்கு உணவுப்பொதிகள் திரட்டுவது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, எல்லைப்படையினராக, உதவியாளராக மக்கள் களமுனைப்பணிகளுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். எல்லாமே ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் நிகழ்ந்துகொண்டிருந்தன. அப்போது புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பு நேரத்தை அதிகரித்திருந்தது. களமுனைத் தகவல்களை இயன்றளவுக்கு உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டிருந்தது. இனிமேல் என்ன செய்வது, எல்லாமே முடிந்துவிடும் போலுள்ளதே என்று இரு நாட்களுக்கு முன்புவரை அங்கலாய்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு இது எதிர்பாராத பெருமகிழ்ச்சி.
நாமும் களமுனையில் என்ன நடக்கிறதென்று அறிய பலவழிகளின் முயன்றோம். ஆனால் சரியான தொடர்புகள் தெரிந்த பொறுப்பாளர்கள், தளபதிகளைத் தொடர்பெடுத்தாலும் எவரும் எமது தொடர்புக்கு வரவில்லை. ஒட்டுசுட்டான் களமுனையிலிருந்த இம்ரான்-பாண்டியன் படையணியினரையும் சமரில் ஈடுபடுத்தியதால் அவர்களின் தொடர்புமில்லை. வோக்கியில் ஓடவிட்டு ஒட்டுக் கேட்கும் தூரவீச்சையும் தாண்டி களமுனை நகர்ந்துவிட்டதால் அதுவும் சாத்தியப்படவில்லை. நாமும் மக்களைப் போலவே புலிகளின்குரல் வழியாக மட்டுமே களநிலைமைகளை அறியக்கூடியதாகவிருந்தது.
அன்றிரவு எமக்கு அறிவித்தல் வந்து சேர்ந்தது. ஏற்கனவே பராக்கிரமபுர இராணுவத் தளத்திலிருந்த ஆட்லறிகளைத் தகர்க்கவென தயாராகியிருந்த கரும்புலிகள் அணியைக் கொண்டு அதே தளத்தின்மீது தாக்குதல் நடத்துவதாக அத்திட்டம் இருந்தது. அருளன் தலைமையிலான அந்த அணி அடுத்தநாள் புறப்படுவதாகத் திட்டம். மீளவும் திட்டம் நினைவுபடுத்தப்பட்டு அன்றிரவு சிறிய பயிற்சியொன்றும் நடைபெற்றது. இப்போது அந்த அணியில் மேலதிகமாகவும் ஆட்கள் இணைக்கப்பட்டனர். மூன்றாம் தொகுதியைச் சேர்ந்த பெண் கரும்புலிகள் சிலர் இந்த அணியோடு இணைக்கப்பட்டு தாக்குதலணி சற்றுப் பெருப்பிக்கப்பட்டது. ஏற்கனவே சண்டை தொடங்கிவிட்டதால், கைவிடப்பட்ட இடங்களிலிருந்து ஓடிய இராணுவத்தினர் பராக்கிரமபுர இராணுவத்தளத்தை அடைந்திருப்பர். ஆகவே அதிக ஆட்பலத்தோடு அம்முகாம் இருக்கும். அதைவிட ஓயாத அலைகள் மூன்று தொடர்வதால் எதிரி எச்சரிக்கையாகவே இருப்பான். அதைவிட நகர்வுப்பாதையிலேயே எதிரியோடு மோதவேண்டிய சூழலும் தற்போது உருவாகியுள்ளது. எனவேதான் அதிகபலத்தோடு அணியை அனுப்ப வேண்டிய தேவையிருந்தது.
04/11/1999
அன்று பகல் முழுவதும் அணிகள் நகர்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்தன. புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கான திட்ட விளக்கம் கொடுக்கப்பட்டு அவர்கள் தயார்ப்படுத்தப்பட்டார்கள். கரும்புலிகளின் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்த சசி GPS கருவியோடு வழிகாட்டியாக இணைக்கப்பட்டார். ஏற்கனவே வேவு பார்க்கப்பட்ட வழியாக இம்முறை நகர்வு இருக்கப்போவதில்லை. களநிலைமைகளும், களமுனைகளும் மாறிவிட்டன. இம்முறை நைனாமடுவழியாக நகர்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கைப்பற்றப்பட்ட நெடுங்கேணி வரை வாகனத்திலேயே சென்று அதன்பின்னர் காட்டுக்குள்ளால் நகர்வதாகத் திட்டம் சொல்லப்பட்டது.
தாக்குதலுக்கான கரும்புலி அணியைத் தவிர மற்றவர்களும் சேர்ந்து புறப்படுவதாகத் திட்டம். கரும்புலி அணிகள் எல்லாமே களத்தில் இறங்குவதால் நிர்வாகத் தளத்தை முன்னகர்த்த வேண்டிய தேவையிருந்தது. எனவே நெடுங்கேணிப்பகுதியில் நிர்வாகத் தளத்தை தற்காலிகமாக நிறுவுவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தளத்திலிருந்த அனைவருமே தேவையான பொருட்களுடன் நகர்வதுதான் திட்டம்.
அன்று மாலையே எல்லோரும் தயாராகிவிட்டனர். ஆனாலும் இருட்டும்வரை இருந்துவிட்டு பின்னர் புறப்பட்டோம். ஓர் உழவு இயந்திரத்திலும் ஒரு பிக்கப் வாகனத்திலும் எமது பயணம் தொடங்கியது. முள்ளியவளை வந்து பின்னர் ஒட்டுசுட்டான் வழியாக நெடுங்கேணி போவதே திட்டம். முள்ளியவளை – நெடுங்கேணி பாதையைப் பயன்படுத்தலாமென திட்டம் முன்வைக்கப்பட்டாலும். அது பாதுகாப்பில்லையென்ற காரணத்தால் கைவிடப்பட்டது. முள்ளியவளை – ஒட்டுசுட்டான் பாதையில் குறிப்பிட்ட தூரத்துக்கப்பால் எல்லாமே வெறிச்சோடியிருந்தது. இருட்டிலே எமது உழவியந்திரமும் பிக்கப் வாகனமும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. இரண்டு மூன்றிடத்தில் நின்று நின்றே பயணித்தோம். நாம் சென்ற பாதையில் இராணுவக் காப்பரண் இருந்த இடத்தையடைந்தபோது விடியத் தொடங்கியிருந்தது. எதிரியின் வாகனக் கண்ணிவெடியில் சிக்கிய பாரவூர்தியொன்று பாதைக்கரையில் சிதைந்திருந்ததைத் தூரத்திலேயே பார்த்தோம். முதல்நாள் மதியம் அவ்வழியால் வினியோகத்தில் ஈடுபட்டிருந்த பாரவூர்தியே அது.
05/11/1999
நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாக எமக்குச் சொல்லப்பட்டிருந்தது. எனினும் எச்சரிக்கையாக அனைவரும் இறங்கி நடந்தே அவ்விடத்தைக் கடந்தோம். ஓட்டுநர்கள் மட்டுமே வாகனத்தைச் செலுத்தி அவ்விடத்தைக் கடந்தார்கள். பிறகு மீளவும் ஏறி நெடுங்கேணி நோக்கி எமது பயணம் தொடர்ந்தது.
இடையில் ஒட்டுசுட்டான் சிவன் கோவிலடியில் நின்றோம். அவ்விடத்திலே பொதுமக்கள் சிலர் போய்வரும் போராளிகளுக்கு தேனீர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலைக் குளிரில் சுடச்சுட அவர்கள் தந்த தேனீர் அருமையாக இருந்தது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள். களநிலைவரம் பற்றி எங்களிடம் விடுத்து விடுத்துக் கேட்டார்கள். ‘எங்களுக்கென்ன தெரியும்? நாங்களும் உங்களைப் போலத்தான். புலிகளின் குரலைக் கேட்டு அறியிறம்’ என்று சொன்னால் அவர்கள் நம்பத் தயாரில்லை. எமது வீரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் – குறிப்பாக LAW (கவச எதிர்ப்பு ஆயுதம்) போன்றவை, நாம் சிறப்பு அணியென்பதை அவர்களுக்கு உணர்த்தியது.
பதினொரு மாதங்களின்பின்னர் ஒட்டுசுட்டான் எங்கள்வசம் வந்திருந்தது. புதிதாகக் கைப்பற்றப்பட்ட அந்த மண் பெரியளவில் மாறியிருக்கவில்லை. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் விடுப்புப் பார்க்கப் புறப்பட்டவர்களை கலைத்துக் கலைத்து வாகனத்தடிக்கு இழுத்து வந்தார் சசிக்குமார் மாஸ்டர். சண்டை நடந்த இடங்களைப் பார்ப்பதும், நாம் வெற்றிவாகை சூடிய சமர்க்களத்தில் உலாவுவதும் எல்லோருக்கும் விருப்பமானதுதான். ஆனால் நாம் புறப்பட வேண்டியிருந்தது.
மக்களிடமிருந்து விடைபெற்று நெடுங்கேணி நோக்கி எமது பயணம் தொடர்ந்தது. ஒட்டுசுட்டான் – நெடுங்கேணிப் பாதையில் இடையிடையே அமைக்கப்பட்டிருந்த மினிமுகாம்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது அவற்றிலிருந்து பொருட்களும் ஆயுதங்களும் அள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. இறந்த இராணுவ வீரர்களின் உடல்களைப் பொறுக்கி வாகனத்தில் ஏற்றிச் செல்லும் பணியிலும், ஆயுத தளபாடங்களை ஏற்றிச் செல்லும் பணியிலும் போராளிகளுக்கு பொதுமக்கள் உதவிக் கொண்டிருந்தனர். ஒட்டுசுட்டானைத் தாண்டியபின் வந்த மினிமுகாம்களில் பெரிய சண்டைகள் நடந்த அடையாளங்கள் காணப்படவில்லை.
நெடுங்கேணியை அடைந்துவிட்டோம். அங்கே ஏற்கனவே பெரிய கட்டளைமையமொன்று செயற்பட்டுக் கொண்டிருந்தது. தளபதி சொர்ணம், தளபதி ஜெயம் உட்பட வேறு தளபதிகளும் பொறுப்பாளர்களும் அங்கே இருந்தனர். அவர்களுக்குச் சற்று எட்டவாக நாம் நின்றோம். அங்கிருந்து கரும்புலி அணிகள் தமது நகர்வைத் தொடங்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடி பராக்கிரமபுர இராணுவத்தளத்தின் மீது இவ்வணி தாக்குதலை நடத்தவேண்டும். சிலவேளை எமது ஆட்லறிகளால் அத்தளம் தாக்கப்படுவதும் அதற்குரிய முன்னணி அவதானிப்பாளர்களாக கரும்புலி அணியினர் இலக்கின் அருகிலிருந்து செயற்பட வேண்டி வரலமென்பதும் ஓர் உபதிட்டமாக இருந்தது. பராக்கிரபுர இராணுவத்தளத்தை எமது ஆட்லறி எறிகணைகள் எட்டும் தூரத்துள் எமது ஆட்லறிகள் நகர்த்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்டால் இரண்டாவது திட்டமே நடைமுறைப்படுத்தப்படும். எதைச் செய்யவேண்டுமென்று அணிகளுக்கு இறுதிநேரத்தில் சொல்லப்படும். ஆனால் ஏற்கனவே திட்டமிட்டதுபோல் ஒரு முழு அளவிலான அதிரடித் தாக்குலுக்கு ஏற்றாற்போலவே அணிகள் நகரத் தொடங்கின.
அன்று மதியம்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எமது இரு கரும்புலிவீரர்களை நாம் இழந்ததோடு அந்தத் தாக்குதல் திட்டமும் முற்றாகக் கைவிடப்பட்டது. எதிரியின் தாக்குதலில் கரும்புலி மேஜர் அருளனும் கரும்புலி மேஜர் சசியும் வீரச்சாவடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அணிகள் பின்னோக்கி நகர்த்தப்பட்டன. நெடுங்கேணியிலிருந்தும் பின்வாங்கி கற்சிலைமடுவிலே தற்காலிகமாக அன்று முழுவதும் தங்கினோம். அருளனதும் சிசியினதும் இழப்பு எல்லோரையும் பாதித்திருந்தது. இருவருமே மிகமுக்கியமான ஆளுமைகள். அதைவிட குறிப்பிட்ட தாக்குதல் திட்டமும் கைவிடப்பட்டது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தாக்குதல் திட்டம் முழுவதும் அருளனது தலைமையிலேயே நடப்பதாக இருந்தது.
கற்சிலைமடுவில் அன்று மாலையும் இரவும் கழிந்தது. அப்போது மீண்டும் வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்கத் தொடங்கினோம். அதுவரை களநிலைவரம் பற்றி எமக்குப் பெரிதாக எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஒட்டுசுட்டானும் நெடுங்கேணியும் கைப்பற்றப்பட்டதோடு நிற்பதாகவே கருதியிருந்தோம். ஆனால் வோக்கியை ஓடவிட்டுக் கேட்டதில் நிலைமை தலைகீழாக இருந்தது. கடும் சண்டை நடப்பதற்கான சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. இடங்களும் இராணுவத் தளங்களும் எங்கள் வசம் வீழ்ந்துகொண்டிருப்பதாகவும் எதிரி ஓடிக்கொண்டிருப்பதாகவும் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதைவிட இடங்களின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லியே கதைக்கப்பட்டது. அம்பகாமம் விழுந்தது, மணவாளன்பட்டமுறிப்ப, கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு விழுந்தது. இன்னும் பல இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவைகள் விழுந்துவிட்டதாக வோக்கியில் கதைக்கப்பட்டது. எங்களில் யாருமே நம்பவில்லை. அன்று பொழுதுபட மாங்குளம் சந்தியும் விழுந்ததாகக் கதைத்தார்கள். அப்போது நாங்கள் பகிடி விடத் தொடங்கினோம்.
‘டேய் பைரவன், உது உங்க முத்தையன்கட்டு பாவலன் வெட்டைக்க ரீம் ட்ரெய்னிங் எடுக்குது. நீ அதைப்போய் சண்டைக்காரரின்ர ஸ்டேசன் எண்டு வேலை மினக்கெட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய்’ - இது நரேஸ் அண்ணா. பயிற்சிகளின்போது இவ்வாறு இடங்களின் பெயர்களை வைத்துப் பயிற்சி செய்வதுண்டு. உண்மையில் அவ்வாறு நினைக்கும்படியாகத்தான் நிலைமைகள் இருந்தன. இவ்வளவு இடங்களும் ஏதோ பேருந்து நடத்துனர் கூவி ஆட்களைக் கூப்பிடுவதைப் போல வீழ்ச்சியடைந்தது என்பது எவராலும் நம்ப முடியவில்லை. ஆனால் கேட்ட சில குரல்கள் ஏற்கனவே அறிமுகமான தளபதிகள் சிலரின் குரல்கள் என்பதிலும் ஐயமில்லை. உண்மையில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கம் புதிராகவே இருந்தது.
- இளந்தீரன் -
No Comment to " களங்கள் - 11. ஓயாத அலைகள் மூன்று "