News Ticker

Menu

கூர்வாளின் நிழல் - அரிச்சந்திரன்

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டமும் அதன் பின்னரான தமிழர்களின் அரசியல் இருப்பு என்னவென்பதும், ஆயுதபோராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான அரசியல் நிலை உண்மையில் தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியா என்பதிலும் பல வாதங்கள் உண்டு.

எனினும் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நெறியானது, போராட்டத்திற்காக அர்ப்பணித்த மாவீரர்களினதும் பொதுமக்களினதும் தியாகத்தின் மீதுதான் நிலைப்படுத்தப்படமுடியும் என்பதும், அதன் ஊடாகவே தமிழர்கள் தமது அரசியல் பலத்தை பெறுவார்கள் என்பதும் ஒரு பொதுவான அபிப்பிராயமாக இருக்கின்றது.





அதனை மறுத்து போராட்டத்தின் தோல்விகளை ஏற்றுக்கொண்டு, போராட்டவழிமுறையே தோல்வி என ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்திற்குள் நகருவதே தமிழர்களுக்கு மோட்சத்தை தரும் என்ற வகையில், பயணப்படவேண்டும் என்ற வாதத்துடன் சில கருத்துக்கள் எம்மவர் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் இதே கருத்தைத்தான் சிங்கள பெருந்தேசியவாதமும் முன்வைக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டால், அதன் வழிமூலம் எதுவென்பதை புரிந்துகொள்ளமுடியும்.

எமது போராட்டத்தினை தோல்வியடைந்த போராட்டமாக காட்டுவதற்காகவென பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்காக இறுதியாக பயன்படுத்தப்பட்ட உத்திகளில் ஒன்றுதான், தமிழினியின் கூர்வாளா என ஐயப்படவைக்கிறது அதன் உள்ளடக்கம்.

ஒரு விடுதலைப்போராளியின் புத்தகத்தை தங்களது நீண்டகால திட்டங்களுக்கு ஏற்றவாறு இடைச்செருகல்களை செய்து வெளியிட்டுள்ளார்கள் என்ற இயல்பான ஐயத்தை தோற்றுவிக்கின்றது அதன் தொடக்கமும் முடிவும்.

இப்போது ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை அடக்குவதற்கு நேரடியான உத்திகளை பயன்படுத்தாமல், தந்திரமான உத்திகளையே சிங்கள தேசிய அரச இயந்திரம் பயன்படுத்திவருகின்றது.

அந்தவகையிலேயே சரணடைந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளை இராணுவ உடுப்புகளுடன் விட்டிருந்தார்கள். அல்லது அவர்களது இணக்கத்துடன் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதுபோன்று காட்ட விரும்பினார்கள். அவ்வாறு "சுதந்திரமாக" விடப்பட்டவர்கள் ஊடாக போராட்டதவறுகளை விளம்பரப்படுத்தினார்கள்.



பின்னர் அப்படியான உயர்மட்ட தலைவர்கள் ஊடான ஒரு அரசியலை மக்கள் மத்தியில் விதைக்க முயன்றார்கள்.

முன்னர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் சிங்கள புலனாய்வுத்துறை தளபதிகள், இராணுவதளபதிகளாக நியமிக்கப்பட்டு மக்களை கவர்ந்திழுக்கும் செயற்பாடுகளை செய்தார்கள். அவர்கள் வாகனங்களில் செல்லும்போது சிறுவர்கள் விளையாடுவதை கண்டால் அந்த இடத்தில் இறங்கி விளையாடுவார்கள். அதனை பார்க்கும் அயலவர்கள் "அந்த ஆமிக்காரன் நல்லவன்” என்பார்கள். இப்படித்தான் வடமராட்சியில் ஒரு இராணுவதளபதிக்கு பாராட்டுவிழா வைக்கப்படும் அளவுக்கு அவரது "திறமை" உயர்ந்திருந்தது.

இதன்மூலம் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த இனப்படுகொலைகளின் இறுகிய வடிவம் தந்திரமாக மறைக்கப்பட்டது. இப்படியான செயற்பாடுகளில் சிறிலங்கா புலனாய்வுத்துறை ஒரு படி மேலோங்கியிருந்தது என்றே சொல்லவேண்டும்.

அந்தவகையில் அரசஇயந்திரத்தின் நயவஞ்சக உத்திகளில் ஒன்றான இன்னொரு பக்கத்தை இப்புத்தகம் ஊடாக முன்வைக்கவிரும்புகின்றது இப்பத்தி.

பின்வரும் ஆதாரங்களை முன்வைத்து அதனை நிறுவ முயல்கின்றோம்.
  1. புத்தகத்தின் முகப்பும் அதன் அட்டையும்
  2. புத்தகத்தின் உள்ளடக்க தொடக்கமும் அதன் முடிவும்
  3. புத்தக வெளியீட்டின் பின்னணியும் அதன் அரசியலும்
இதனை சற்று விரிவாக பார்ப்போம்.

முகப்பு அட்டையில் தெறிக்கும் ‘ஒரு கூர்வாளின் நிழல்’ என்ற அதன் தலைப்பு சிங்கத்தின் கூர்வாளை குறிப்பதாக அண்மையில் ஒரு காட்டூன் வெளியாகியிருந்தது. உண்மையில் கூர்வாளின் நிழலில் என்பது சிங்கத்தின் நிழலில் இது எழுதப்பட்டது எனவே அதனை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழினி சொல்கிறாரா?

அது போலவே புத்தகத்தின் பின்அட்டையில் “புலிகளின் வீர வரலாறு புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையே தான் போராட்டத்தின் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் இல்லங்களில் துயிலும் மாவீர்ர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப் படுத்திவிட முடியாது” இப்படி வருகின்றது வசனங்கள்.

புலிகளின் அணுகுமுறைகளில் சரிகள் பிழைகள் இருக்கமுடியும். ஆனால் வீரத்தையும் துரோகத்தையும் ஒப்பிடமுடியுமா? அதுபோன்று மாவீரர்கள் அனைவரையும் துரோகிகள் என சொல்லமுடியாது என சொல்வதும் எந்தவகையான ஒப்பீடு. இங்கு ஒரு இலக்கிய அறிவுமிக்க தமிழினியை காணமுடியுமா?



இந்த சொல்லாடல் ஒரு வகையான அன்னியப்பட்ட சொல்லாடல் இல்லையா?
இது முகப்புக்கும் முடிவுக்குமான ஒரு பார்வை.
இனி அடுத்த விடயத்திற்கு வருவோம்.

புத்தகத்தின் தொடக்கத்தில் “தலைவர்” என்றும் “இயக்கம்” என்றும் சொல்லப்படும் விடயங்கள் 69 வது பக்கத்திலிருந்து “புலிகளின் தலைவர்” என்றும் “புலிகளின் இயக்கம்” என்றும் மாறுபட்டு செல்வதை அவதானிக்கமுடியும்.

எமது போராட்டத்தை நியாயப்படுத்தும்போது தலைவர் என்றும் இயக்கம் என்றும் சொல்லப்படும் விடயங்கள் விமர்சிக்கும்போது புலிகளின் தலைவர் என்றும் புலிகளின் இயக்கம் என்றும் வருவது இயல்பானதா?
இடைச்செருகல்கள் செய்யபபட்டன என்பதற்கு வலுவான ஆதாரத்தை இது கொடுக்கின்றது.

இன்று தமிழீழ தாயகத்திற்கு வெளியே வாழ்பவர்களே தலைவர் என்றும் இயக்கம் என்றும் இயல்பாக சொல்லுகின்ற சொற்கள். அது மக்களுக்கும் இயக்கத்திற்கும் இடையே இருந்த நெருக்கத்தின் அடையாளம். அந்த அடையாளம் எப்படி தொலையும்?

அதனை தமிழினியால் தொலைக்கமுடியுமா? சாதாரண மக்களே இயக்கம் என்றும் தலைவர் என்றும் இயல்பாகச் சொல்லுகின்ற சொற்கள் அன்னியமானதேன்?

தமிழினினியின் தொடக்ககால இராணுவப்பயிற்சிகளை பற்றி பக்கம் 65 – 66 களில் வருகின்றது. அது “எமது பயிற்சி ஆசிரியர்கள் மைதானங்களில் மிகக் கடுமையானவர்களாக நடந்துகொண்டபோதிலும் ஒவ்வொரு போராளிகளினது தனிப்பட்ட விடயங்களிலும் மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்தார்கள்” என வருகின்றது.

ஆனால் அவரது நண்பியின் பயிற்சி பற்றி பக்கம் 70 இல் இப்படி வருகின்றது. “குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான உதாரணங்களாக இருந்தனர்” என வருகின்றது.
இதன்மூலம் சொல்லமுனைவது என்ன?

இதேபோன்று மாத்தையா கருணா விடயம் ஒப்பிடப்படுகின்றது.
இந்தியாவில் சிறையிலிருந்த கிருபன் என்பவர் இந்திய காவல்துறை வண்டி ஒன்றிலிருந்து அங்கிருந்த பொலிசார் இருவரை சுட்டுவிட்டு தப்பியோடுகின்றார்.

அவர் உண்மையிலேயே அவ்வாறு தப்பிவந்ததாகவே விடுதலைப்புலிகள் நம்புகின்றார்கள். தப்பிவந்த கிருபனை சாதனைவீரனாக கணித்து அவருக்கு தலைவருக்கான பாதுகாப்பு பணி கொடுக்கப்படுகின்றது. பொலிஸ்காரனை சுட்டுவிட்டு தப்பியோடும் திட்டத்தை வடிவமைத்து நிறைவேற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இதுபற்றி இச்சதியில் பங்குபற்றிய அனைவருமே ஏனைய போராளிகளுக்கு முன் சாட்சி வழங்கினர். அதனைத்தொடர்ந்து சிறைவைக்கப்பட்டிருந்த மாத்தையாவை சிறையில் சந்தித்த தலைவருக்கு தனது நம்பிக்கைக்குரிய ஒரு தளபதி அத்தகைய துரோகத்தை ஏன் செய்தார் என நம்பமுடியவில்லை. அதனால் சிறைக்கு நேரடியாகச்சென்று “நீ ஏன் அப்படி செய்தாய்” என கவலையுடன் கேட்டார் என்றும் அதற்கு மௌனமாக மாத்தையா இருந்ததாக பதிவு உண்டு.

மாத்தையாவின் துரோகத்தை அவரது மனைவியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வரலாறு காட்டிய வழி. அது தெளிவாகவே தமிழினிக்கும் தெரிந்திருந்தது.

அதேபோன்ற நிலையே கருணாவுக்கும் ஏற்பட்டது. இதனை விளங்காமல் தமிழினி இருந்திருப்பாரா?

அடுத்ததாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை பொறுத்தவரை ஒரு அடிப்படையான வரையறையை எப்போதும் பேணிவந்தது. அது அதன் தலைமைத்துவத்தால் நெறிப்படுத்தப்படவில்லை. மாறாக அடிமட்ட போராளிகளாலேயே வழிப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது ஒருவரது நிலைப்பாடுகள் மாறலாம் ஆனால் செயற்பாடுகள் மாறக்கூடாது என்பதே அது.

போராட்டப்பாதையில் ஏற்படும் கடினங்களை கண்டு விலகுவது சாதாரணமானது. அதற்கான நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியும். ஆனால் அவர்கள் இயக்கத்தின் தியாகத்தையோ அதன் கொள்கைகளையோ கேள்விக்குட்படுத்தும் விதத்தில் செயற்படமுடியாது.
விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து கருணா வெளியேறியபோது கருணா ஒரு துரோகி அவரைப்பற்றி கதைக்கதேவையில்லை என தமிழினி சொன்ன பதிவுகள் இப்போதும் உண்டு. எனவே அதற்கு முரணாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பாரா?

இப்புத்தகத்தில் ஏனைய போராளிகளின் பெயர்கள் அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என தமிழினி சொன்னதாக அவரது கணவர் சொல்கிறார்.

அப்படியானால் அப்படியான நெருக்கடி இருந்தது இருக்கின்றது என்பது ஏன் சொல்லப்படவில்லை? தமிழினிக்கு எந்தவித சித்திரவதைகளும் செய்யப்படவில்லை என்றும் சட்டரீதியாகவே அவருக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழினியை சந்தித்த முதலாவது இராணுவத்தினன் சொல்வதாக இப்புத்தகம் சொல்வது ஏன்?
இப்போது இந்தப்புத்தகம் ஏன் அவசரம் அவசரமாக வெளியிடப்படுகின்றது? இதன் பின்னாலுள்ள பின்னனிகள் என்ன? இப்போது சிங்களத்திலும் இப்புத்தகம் வெளிவரவுள்ளது.

ஒரு புத்தகத்தை வெளியீடு செய்வது எவ்வளவு கடினமானது. ஆனால் புத்தகத்தை பிரசுரித்து கிளிநொச்சியில் வெளியீடு செய்வதும் அதன் சிங்கள பதிப்பு இப்போதே தொடங்கிவிட்டதன் பின்னனி என்ன?
தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றியோ அதன் விளைவாக போராட்டம் ஆரம்பித்தது என்றோ போராளிகளின் தியாகங்கள் பற்றியோ சொல்லாத ஒரு புத்தகத்தை சிங்களத்தில் வெளியிடப்போவது எதற்காக?
சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்றவர்களே இதன் வெளியீட்டுக்கும் பின்னணியில் நிற்கும் ‘நல்நோக்கம்’ என்ன?

உண்மையாகவே தமிழினி போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளையே எடுத்திருந்தார் என வைத்துக்கொள்வோம். அப்படியானால் அவரது மருத்துவதேவைக்காக கூட அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்காதது ஏன்?

அனைத்துக்கும் மூலம் ஒன்றுதான்.

30 ஆண்டுகள் தொடர்ந்த ஒரு ஆயுதப்போராட்டமானது சரிகளுக்கு நிகராக தவறுகளை கொண்டுள்ளது. உங்களை அடக்குமுறை செய்த சிங்கள அரச இயந்திரத்திற்கு நிகராக உங்கள் விடுதலைப்போராட்டமும் அழிவை தந்துள்ளது. எனவே இரண்டு பக்கஅழிவுகளை மறந்து மீண்டும் உங்களுக்கான தீர்வுகளை 1948 இலிருந்து தொடங்குவோம் என்பதே அது.
அதற்கான சிறுக சிறுக போடப்படும் திட்டங்களின் ஒரு பகுதியே இத்தகைய படைப்பிலக்கிய முயற்சிகளாகும்.

எமது வரலாற்றை புனைந்து தமிழ்த்தேசியத்தை அரிக்கும் ஒரு கூர்வாளே இது.

- அரிச்சந்திரன் -


  பின்னிணைப்பு
1.தமிழினி அக்காவின் சுயசரிதை அவரது இறப்பின் பின் திரிவுபடுத்தப்பட்டு/சில விடயங்கள் உட்புகுத்தப்பட்டு தான் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என 100% என்னால் அடித்துக்கூற முடியும்.
அதற்கான ஆதாரங்களில் ஒன்று தமிழகத்தில் காலச்சுவடு வெளியிட்டுள்ள அப்புத்தகத்தின் பின் அட்டையிலுள்ள வரிகள்.
தமிழினி அக்கா சிறையில் இருந்த போது தமிழகத்தை சேர்ந்த பிரேமா ரேவதி என்பவர் "நலமா தமிழினி" என கேட்டு தமிழினி அக்காவையும் புலிகளையும் விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார். அதை வாசிக்க : http://www.kalachuvad...u.com/issue-116/page63.asp
அதில் வரும் ஒரு பந்தியே இப்புத்தகத்தின் பின் அட்டையில் சேர்க்கப்பட்டு அதன் மேலே தமிழினி அக்காவின் படத்தையும் கீழே தமிழினி எனவும் போட்டு அதை தமிழினி அக்காவின் வரிகள் போல் காட்டியுள்ளார்கள். பிரேமா ரேவதி என்பவரின் வரிகள் இங்கே தமிழினி அக்காவின் வரிகளாக திரிவுபடுத்தி காட்டப்பட்டது ஏன் என தமிழினி அக்காவின் கணவர் ஜெயன் தேவா(ஜெயக்குமரன்) அவர்கள் விளக்குவீர்களா?
புத்தகத்தின் அட்டையிலேயே திரிவுபடுத்தல் இடம்பெற்றுள்ள போது உள்ளேயும் பல திரிவுபடுத்தல்கள், திட்டமிட்ட உட்புகுத்தல்கள் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
2. சயந்தன் கதிர் என்ற எழுத்தாளர் இடைச்செருகல்கள் இல்லையென்றும் இதற்கான ஆதாரமாக தான் தமிழினியோடு உரையாடிய தகவல்களை ஸ்கிறீன்சொட் எடுத்து போட்டிருந்தார்.
ஆனால் தமிழனியின் பேஸ்புக் ஐடியானது அவர் இறந்தபின்னும் இன்னொருவரால் இயக்கப்பட்டதே என சுட்டிக்காட்டியபோது குறித்த பதிவு அகற்றப்பட்டது.
3. பாதுகாப்பு செயலாளரின் விசேட அனுமதியுடன் வெளியிடப்பட்ட புத்தகம்
4. தமிழினி 'ஒரு கூர் வாளின் நிழலில்' எழுதவில்லை” – எழுத்தாளர் திருக்குமரன்
     

Share This:

No Comment to " கூர்வாளின் நிழல் - அரிச்சந்திரன் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM