News Ticker

Menu

சத்தியவேள்விக்கு சவால் விடும் "தமிழ்த் தேசியம்"

அண்மையில் தமிழ்த்தேசிய ஊடகங்கள் என தமிழ் மக்களால் கருதப்பட்ட ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்த அல்லது வெளிவரப்போகும் தகவல்கள் பற்றிய உண்மைத்தன்மையையும் அதன்பின்னணிச் செயற்பாடுகள் பற்றிய விளக்கத்தையும் முன்வைப்பது அவசியமானது என்றும் அவசரமானது என்றும் கருதுகின்றோம்.



தமிழ்நெற் இணையத்தில் வெளிவந்த செய்தியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சில தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தும்வகையில், அமெரிக்க அரசின் படைகள் முள்ளிவாய்க்காலுக்கு வருகைதந்து அவர்களை காப்பாற்றும் என சொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.




அமெரிக்காவிலிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவராலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்கு அந்த நம்பிக்கை கொடுக்கப்பட்டதாகவும் அதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை நம்பியதால்தான் முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏற்பட்டது என்ற மாயையை அச்செய்தி ஏற்படுத்த முனைந்தது.



இதேபோன்ற செய்தி இன்னொரு தமிழ்ச்செய்தித் தளத்தில் வெளியாகி - அந்த நம்பிக்கையைக் கொடுத்து அப்பேரவலத்திற்கு வித்திட்டவர்கள் தற்போதைய நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனும் தற்போது சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையால் இயக்கப்படும் கேபி அவர்களுமே என்று கூறுகின்றது.



தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் பற்றியோ அல்லது அதில் இணைந்து தம் வாழ்வை அர்ப்பணித்துப் போராடிய போராளிகளின் உண்மையான உணர்வுகள் பற்றியோ அறிந்துகொள்ளாதவர்களால் பரப்பப்படுகின்ற இச்செய்தி பற்றிய உண்மைத்தன்மையை பதிவுசெய்வது முக்கியமானது என்று கருதுகின்றோம்.





தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய வீரமிக்க போராளி. எந்த நெருக்கடி வந்தபோதும் வரித்துக்கொண்ட கொள்கைக்காக இறுதிவரை போராடுவேன் என்ற நம்பிக்கையுடன் உழைத்தவர் அவர்.



கழுத்தில் நஞ்சைக் கட்டிக் களமாடிய போராளிகளை வழிநடத்திய தலைமை - அமெரிக்க அரசோ அல்லது இந்திய அரசோ வந்து தன்னையோ அல்லது தனது தோழர்களையோ காப்பாற்றும் என எண்ணியிருக்குமா?



ஐந்நூறு வரையான தற்கொடையாளர்கள் என்ன நோக்கத்திற்காக, என்ன நம்பிக்கையுடன் தங்களது இன்னுயிரை அர்ப்பணித்தார்களோ – முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் எந்த இலட்சியத்துடன் தங்களது வாழ்வை விடுதலைக்கான விலையாகச் செலுத்தினார்களோ – அவை எல்லாவற்றையும் புறந்தள்ளி அல்லது அவற்றைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தங்களை வந்து அமெரிக்கா மீட்டெடுக்கும் என்று போராடிய தலைமை நம்பவைக்கப்பட்டது என்று சொல்வது எமது விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக இல்லையா?



தமிழீழ தேச விடுதலைக்கான போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் ஊடாக முன்னெடுத்த நாளிலிருந்து – போராட்டத்தின் படிநிலைகள் சார்ந்த முடிவினை தலைவர் பிரபாகரன் அவர்களே நேரடியாக முன்னெடுத்து வந்திருந்தார்.



இந்திய அரசின் அமைதிப்படைகளோடு போர் ஏற்பட்டபோதும் – அதன்பின்னர் பிரேமதாசா அரசோடு பேச்சுவார்த்தை முறிவடைந்து போர் ஏற்பட்ட போதும் – 1995 இல் சந்திரிகா அரசின் பொய்முகத்திரையை வெளிப்படுத்தி போரை ஆரம்பித்த போதும் – 2005 இல் போருக்கான அரங்கைத் திறந்தபோதும் தலைவர் பிரபாகரன் அவர்களே அம்முடிவை எடுத்தார்.



தலைவர் பிரபாகரன் அவர்களிடம் இயல்பாகவே இருந்த தலைமைத்துவப் பண்பும் வரலாற்றின் ஓட்டங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப போராட்டத்தைச் செலுத்தக்கூடிய தனிமனித ஆளுமையும் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான வேட்கையும் ஒருங்கே கொண்ட தலைவனால் எந்த முடிவினையும் எடுக்கக்கூடிய பலம் இருந்தது.



ஆனால் மூன்று சகாப்தகாலமாக புடம்போட்டு வளர்ந்த, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையும் அந்த அமைப்பின் போராளிகளும் - வெளிநாடு ஒன்று வந்து எங்களை காப்பாற்றும் என காத்திருந்தது என கதை சொல்வது எமது தலைமையையும் போராளிகளையும் மாவீரர்களையும் அவமானப்படுத்துவது போன்றது அல்லவா?



இதைவிடவும், இவ்வாறான செய்திப்பரப்புக்கு வேறு பின்னணிக் காரணங்கள் உள்ளனவென ஐயம் கொள்ளும் நிலைக்கு குறிப்பிட்ட ஊடகங்களின் செயற்பாடுகள் வழிவகுத்துள்ளன. தமிழ்நெற் செய்தியைத் தொடர்ந்து ‘சேரமான்’ என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை இந்த ஐயத்தை உறுதிப்படுத்துகின்றது. அதாவது அப்படி அமெரிக்காவிலிருந்து தவறான நம்பிக்கையளித்து எல்லாவற்றையும் நாசமாக்கியவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரனே என்று அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.



யார் அந்த மர்ம நபர் என்ற ஆய்வுகளை ஊடக ஆய்வாளர்களாகத் தம்மைத்தாமே முடிசூட்டிக் கொண்டிருக்கும் நபர்கள் எழுதி, எமது மக்களைக் குழப்பும் ஏது நிலையை இக்குறிப்பிட்ட தமிழ்நெற் செய்தி ஏற்படுத்தியுள்ளது. சிலவேளை அதுதான் நோக்கமாகவும் இருக்கக்கூடும். குழப்பத்தை ஏற்படுத்தும் மூலச் செய்தியும், அதைத் தொடர்ந்து அந்த மர்மநபர் உருத்திரகுமாரன் தான் என வெளிவரும் கட்டுரைகளும் ஒரே குழுமத்துள்ளிருந்து வெளிவருவதை அவதானிக்கும் எவருக்கும் இதன் பின்னணிகள் விளங்காமலிருக்க முடியாது.



முன்பொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுசரணையோடு செயற்பட்டதாலேயே தமிழ்த் தேசிய ஊடகங்களாக தமிழ்மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்ட இவை - இப்போது தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமை தாமே என நினைத்துக்கொண்டு செய்யும் குளறுபடிகளை எமது மக்கள் தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டுமென்று செயற்படும் இவர்களை எண்ணும்போது வேதனையாக இருக்கிறது. இங்கே இவர்களின் எதிரி யாரென்று அவதானித்தால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் பிரதமர் உருத்திரகுமாரனும்தான் என்பதை விளங்கிக்கொள்வீர்கள்.





உருத்திரகுமாரன் அவர்களையும் நாடுகடந்த தமிழீழ அரசையும் விமர்சிக்கவேண்டும் என்பதற்காகவும், அதன் கட்டமைப்பைச் சீர்குலைக்கவேண்டும் என்பதற்காகவும் நாடு கடந்த அரசை கேபி அவர்களோடு இணைத்தும் - உருத்திரகுமாரன் தான் அவ்வாறு பொய்யான நம்பிக்கைகளை அளித்து முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறியது என்று கதையளப்பது முற்றிலும் பொய்மைத்தன்மை கொண்டது.



முள்ளிவாய்க்கால் இறுதிநாட்களின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளுடனும் போராளிகளுடனும் கலந்துரையாடிய பலர் இன்னும் இருக்கின்றார்கள். அவர்களுடைய உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டும் உள்ளன. எந்த இலட்சியத்திற்காக போராட்டத்தில் இறங்கினார்களோ அந்த இலட்சியத்திற்காக இறுதிவரை போராடிய தளபதி சூசை அவர்களின் வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். எவ்வளவு உறுதியுடன் அவர் தனது கருத்தை பதிவுசெய்கின்றார்.



போராட்டம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும்போது பல விமர்சனங்கள் உருவாவதும், அதனை தாங்கி நின்றவர்களே அதனை விமர்சிப்பதும் எதிர்பார்க்கக்கூடியதே. இவற்றின் பின்னால் உண்மையான தேசப்பற்றும் ஆதங்கமும் கூட உள்ளது. இவற்றைத் தனிமனித உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் என்றே பார்க்கப்படவேண்டும்.



ஆனால் நிறுவனமயப்படுத்தப்பட்டு இயங்கும் குழுக்களும் ஊடகங்களும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்பதைப் போல், முன்னர் தமிழ்த்தேசிய ஊடகமாக கருதப்பட்ட காரணத்தாலேயே மக்களின் சிந்தனையைத் தாமே கட்டுப்படுத்துவோம் என்று செயற்படுவது நியாயமற்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்தின் தலைமையிடத்தையோ அரசியல் ஆலோசகர் இடத்தையோ குறிவைத்துச் செயற்படும் இச்சுயநலவாதிகளின் சுயரூபத்தை எமது மக்கள் உணர்ந்துகொண்டு தெளிவாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.



எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளும் தேவையும் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. அவற்றை எவரும் மறுத்துச்சொல்லமுடியாது. அந்த தேவைகளை அடைவதற்கான வழிகளும் அதனை முன்னின்று செய்கின்ற செயற்பாட்டாளர்களும் தாயகத்திலும் புலத்திலும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். சத்திய இலட்சியத்திற்காக சாவடைந்த மாவீரர்களையும் அவர்களோடு இணைந்துநின்றதற்காக கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களையும் மனதில் இருத்தி - குழப்பவாதிகளைத் தவிர்த்து - எமது இன விடுதலைக்காக அனைவரும் இணைந்து பயணிப்போம்.



- அரிச்சந்திரன் -

Share This:

No Comment to " சத்தியவேள்விக்கு சவால் விடும் "தமிழ்த் தேசியம்" "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM