News Ticker

Menu

என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!

தன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்கும் உயர்ந்த மலைகளுக்கும் பாயும் பெருநதிகளுக்கும் அப்பால் உள்ள லண்டன் மாநகரில் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தது! தேம்ஸ் நதியை வருடிப்பரவிய காற்றில் அவரின் உயிரும் கரைந்து போனது!

பலரின் வாழ்வு அவர்களின் சாவுடன் முற்றுப்புள்ளிக்குள் சிக்கி முடிந்து விடுவதுண்டு. மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு சாவையும் கடந்து நிலைபெற்று விடுவதுண்டு.



பாலா அண்ணனின் வாழ்வோ அவரின் சாவின் பின்னும் அவரின் ஆற்றலில், அவரின் தத்துவார்த்த அறிவில், அவரின் ராஜதந்திர அணுகுமுறைகளில் இன்றும், என்றும் ஒளிவீசி நிலை பெற்றுவிட்டது.

விடுதலைப் போர் தோல்விகளின் விளிம்புக்குள் தள்ளப்பட்ட போதெல்லாம் அவரின் ராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் தோள் கொடுத்து போரை வெற்றியின் பக்கம் திருப்பி விட்டன. சர்வதேச முகவர்களாலும், அந்நிய புலனாய்வுப் பிரிவுகளாலும் எமது போராட்டம் திசைதிருப்ப முற்பட்ட போதுகளிலும், படுகுழியில் வீழ்த்தப்பட முனைந்த போதுகளிலும் இரும்புச் சுவராக எழுந்து நின்று பாதுகாத்தவர் பாலா அண்ணன்.

சிறீலங்கா அரசுடனான ஆறு சுற்றுப் பேச்சுக்களையும் மெல்ல மெல்ல தனது சாதுரியத்தால் அவர் எமது இலக்கை நோக்கி நகர்த்தியமை அவரின் ஆற்றலின் மகத்துவம்.

சரியான பாதையில் பயணித்துச் செல்லும் சாரத்தியம் அவரிடம் உண்டு என்பது உண்மை தான்.

ஆனால் - காலம் அதுவரை காத்திருக்கவில்லை! காலனை அனுப்பி அவரைக் கவர்ந்து கொண்டது.

ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு பல பக்கங்கள் உண்டு. ஒன்று தந்திரோயப் பிரச்சினை மற்றையது யுத்த தந்திரப் பிரச்சினை. யுத்த தந்திரம் எவ்வளவு தான் ஆற்றல் வாய்ந்ததாகவும் வலிமை கொண்டதாகவும் இருந்தாலும் தந்திரோபாயம் பலவீனமடைந்தால் முழுப் போராட்டமும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளவேண்டிவரும்.

இது உலக வரலாறு கற்றுத்தரும் பாடம்.

எமது தந்திரோபாயங்களை வகுப்பதில் பாலா அண்ணரின் பங்கு ஒப்பற்றது. நாம் பல நெருக்கடிகளை நீந்திக்கடப்பதில்  எமக்குத் தலையைக் கொடுத்தார் என்றால் மிகையாகாது.

எமக்கும் எதிரிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைக் கையாள்வது. எமது பலவீனங்களையே பலமாக மாற்றுவது. சர்வதேச விவகாரங்கள் ஊடாக எமது போராட்டத்துக்கு ஊறுவிளைவிக்கப்படாமல் விடயங்களைக் கையாள்வது போன்ற விடயங்களில் அவரின் ஆற்றல் மிகுந்த வழி நடத்தல் எமது போராட்டத்தை வெற்றியை நோ்ககி முன்னகர்த்தியமையை எவரும் மறந்துவிட முடியாது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டைப் பயன்படுத்தி இந்திய இராணுவத்தை எமது மண்ணைவிட்டு வெளியேறும் ஒரு நிலையை உருவாக்கியது ஒரு பெரும் இராஜதந்திர வெற்றியாகும். இதில் பாலா அண்ணரின் பங்கும் அளப்பரியது.

எம்மைப் பயங்கரவாதிகளாகப் பிரகடனம் செய்த மேற்குலகம், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் சிங்கள இனவாத அதிகார பீடத்தின் வி்ட்டுக்கொடுக்காத ஒடுக்குமுறைப் போக்கை உணரும் வகையில் பாலா அண்ணன் மிக லாவகமாக அதைக் கையாண்டார்.

சிங்களம் பலவிமான சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும் எமது விடுதலைப் போராட்டத்தின் வீச்சுக் காரணமாகவும் படியிறங்கி வருவதற்கான ஒரு சூழல் தோன்றிய போது ஏற்பட்ட ஆட்சி மாற்றம் துரதிஷ்டவசமானதே. அத்துடன் சமாதான மேசையில் பாலா அண்ணின் பங்கும் இல்லாமல் போனது!

பேச்சுக்கள் முறிவடைந்தன! மீண்டும் போர் தொடங்கியது.

2009 மே 19இல் எமது ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டது.

ஆனால் எந்தவொரு விடுதலைப் போராட்டமும், அழிக்கப்பட்டதாக வரலாறு இல்லை! தோற்கடிக்கப்பட்டது வழிமுறைதான்! போராட்டம் அல்ல!

பாலா அண்ணன் இப்போ எம்மிடம் இல்லை என்பது உண்மை தான். ஆனால் அவரின் அற்புதமான வழிகாட்டல் விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நெறிப்படுத்தும்.

“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”




செண்பகப் பெருமாள்

Share This:

No Comment to " என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்! "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM