News Ticker

Menu

பால்நிலை சமத்துவம் – பாதுகாப்புச்செலவு – பௌத்தஞானம் - படைத்தளபதி (வெள்ளிவலம்)

அண்மையில் வெளியான புள்ளிவிபரம் ஒன்று உலகிலேயே பால்நிலை சமத்துவம் நிலவும் நாடுகளில் முக்கியமான இடத்தை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. இதன்படி உலகிலேயே ஆண்களுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்படும் நாடாக சிறிலங்காவை தெரிவுசெய்துள்ளது அந்த அறிக்கை.

எவ்வாறான குறிகாட்டிகளை வைத்து இவ்வாறான புள்ளிவிபரங்களை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்ற ஆதங்கம் இலங்கைத்தீவிலுள்ள கல்விமான்களுக்கே புரியவில்லை.



இதன் ஒரு கட்டமாக வெளிவந்துள்ள இன்னுமொரு புள்ளிவிபரம், இன்னும் அதிர்ச்சிகரமான செய்திகளை சொல்லியுள்ளன.

அப்புள்ளிவிபரத்தின்படி, இலங்கைத்தீவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக களனிப் பல்கலைக்கழகத்தில் 70 விழுக்காடு பெண்கள் கல்விகற்பது அறியவந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல பாடசாலை மட்டத்திலும் பெண்களின் விழுக்காடு அதிகரித்துள்ளமையை தமிழர் பிரதேசங்களில் காணலாம்.

இங்கு கல்விகற்கும் பெண்களின் விழுக்காட்டை மையமாக வைத்து பால்நிலை சமத்துவத்தை கண்டறியும் புள்ளிவிபரக்குழுக்கள், ஏன் இவ்வாறான அபரிமிதமான வித்தியாசம் இருக்கின்றது என்பதை ஆழமாக கண்டறியமுனையவில்லை.

மாறாக பால்நிலை சமத்துவம் மதிப்பிடப்பட்ட 136 நாடுகளில் 16வது இடத்தை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. கல்வி வேலைவாய்ப்பு அதிகாரம் போன்ற பலதுறைகளில் இம்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஆழமாக இவ்விடயத்தை கவனிக்கவில்லை என்றே கருததோன்றுகின்றது.

இனஅடக்குமுறையும், நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழலுமே பெரும்பாலான ஆண்களுக்கான கல்விக்கான புறநிலைகளை இல்லாதொழித்தது என்ற யதார்த்தை கண்டுகொள்ளாமல், அதனை பால்நிலை சமத்துவமாக கருதி, சிறிலங்காவுக்கு கௌரவம் அளிப்பதில் இந்நிறுவனங்கள் அக்கறை எடுத்துக்கொண்டமை எவ்வளவு முரண்பாடானது?

இதேவேளை சிறிலங்காவின் அடுத்தாண்டுக்கான பாதுகாப்புத்துறைக்கான செலவை 21 400 கோடி ரூபா என அந்நாட்டு அரசின் அறிவித்தல் வெளியாகவிருக்கின்றது.

இவ்வருட ஆரம்பத்தில் தேர்தலில் வெற்றியீ்ட்டிய மகிந்த ராஜபக்ச, அடுத்தமாதத்திலேயே தனது பதவிக்காலத்தை ஆரம்பிக்கவுள்ளார். சட்டத்தை எப்படியெல்லாம் ”உள்ளே புகுந்து விளையாடமுடியுமோ” அவ்வளவு தூரம் இறங்கி விளையாட மகிந்த குடும்பம் தயாராகிவிட்டது.

அந்தவகையில்தான் இப்போதும் இவ்வாண்டை விட 1, 300 கோடி ரூபா கூடுதலாக அடுத்தாண்டுக்கான பாதுகாப்பு செலவாக செலவழிக்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நிரந்தர படைக்குடியிருப்புக்களை அமைப்பதற்கான ஒதுக்கீடாகவே – போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டநிலையில் – இதனை நோக்கவேண்டும்.

இவ்வாரத்தின் இன்னொரு பதிவாக, புத்தபிரான் ஞானம் பெற்றதன் 2600 ஆண்டை நினைவுகூரும் முகமாக 2600 இளஞ்சிறார்களுக்கு ”ஞான உபதேசம்” வழங்கப்படவுள்ளதான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது புதிதாக 2600 பௌத்தபிக்குகளை உருவாக்கும் நிகழ்ச்சியே இதுவாகும்.

இதனை சிறிலங்காவின் பிரதமரான ஜயரத்ன பெரும் ஆடம்பரங்ளுடன் நடத்தமுற்பட்டுள்ள நிலையில் அதனை ஒரு சில உள்நாட்டு செயற்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.

தாய் தந்தையருடன் தமது இளம்பராயத்தை கழிக்கவேண்டிய சிறுவர்களுகட்கு, இவ்வாறான ”ஞான உபதேசம்” வழங்கவேண்டாம் என அவை கேட்டுள்ளன.

தமிழர்களை பொறுத்தவரை, பௌத்தபிக்குகளாலே இந்நாடு மோசமாக அழிந்துபோவதை கண்டுவந்திருக்கிறார்கள். உண்மையான பௌத்த அறநெறிகள் பௌத்தரோடு சேர்த்து புதைக்கப்பட்ட நிலையில், மற்றைய இனங்கள் மீதான மேலாதிக்கசிந்தனையாகவே பௌத்த நெறிமுறை சிறிலங்காவில் உருவாக்கப்பட்டுவருகின்றது.

இதேவேளை வெலிகடை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா தனது பாவங்களுக்கு பிராயசித்தம் தேடுவதாக செய்திகள் வருகின்றன.

படைத்தளபதிக்கும் பாதுகாப்புச்செயலாளருக்கும் ஏற்பட்ட முறுகல் நிலை இன்று வெலிக்கடை சிறைச்சாலை வரை அவரை சரத் பொன்சேகாவை கொண்டுவந்து விட்டுள்ளது. அவர் காற்சட்டையுடன் சிறையில் வேலை செய்யும் காட்சி, ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

சிங்கள இனவாத சிந்தனையில் பெரும்பாலான சிங்கள தேசத்து மக்கள் மூழ்கி இருப்பதன் காரணமாகவே, சரத் பொன்சேகாவின் சிறைவைத்தல் தொடர்பாக பெரியளவான மக்கள் எழுச்சியை சரத் பொன்சேகாவால் உருவாக்கமுடியவில்லை.

தோட்டத்தில் வேலையும் வழங்கப்பட்டு கடும் சிறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலைமையானது தமிழ் மக்களுக்கு சொல்கின்ற செய்தியைத்தான் தமிழர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்?

தற்போதைய நிலையில் தமிழர் தேசத்தை உடைத்து சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுவதே பெரும்பாலான சிங்கள தேசத்தில் உள்ளோரின் சிந்தனையாகும். அதற்காக நாளை யாரையும் சிறைவைப்பார்கள்?


-  சங்கிலியன் -








Share This:

No Comment to " பால்நிலை சமத்துவம் – பாதுகாப்புச்செலவு – பௌத்தஞானம் - படைத்தளபதி (வெள்ளிவலம்) "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM