News Ticker

Menu

நாடுகடந்த தமிழீழ அரசு – பங்களாதேசு – கன்னியாய் – தங்கப்பதக்கம் (வெள்ளிவலம்)

ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான வேட்கை என்பது தனியே முப்பது வருட ஆயுத விடுதலைக்கான போராட்டத்துடன் உருவானதல்ல. மாறாக தமிழர்களுக்கான அரசு இலங்கைத்தீவில் நிலைபெற்று இருந்தது என்பது என்பதாலும், தமிழர்கள் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதாலும், இழந்துபோன சுதந்திரத்தை அடைவதற்கான வேட்கை ஈழத்தமிழன் ஒவ்வொருவனிடத்திலும் ஏதோவிதத்தில் உள்ளக்கிடக்கையாகவே இருந்துவந்திருந்தது.

அதனாலேதான் ஆயுதவிடுதலைப் போராட்டமானது மௌனிக்கப்பட்டபோதும் சுதந்திர தமிழீழத்திற்கான குரல் இன்னும் அடங்கவில்லை.

இந்தவேளையில் தான், ஈழத்தமிழினத்தின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழும் நாடுகளில் அமைக்கப்பட்டுவரும் மக்கள் கட்டமைப்புக்கள் முக்கியமானதாகின்றன.

குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கம் என்பது தமிழ் மக்களின் அரசியல் வலுவுடமையை உறுதியாக்கக்கூடிய மிகப்பெரிய அரணாக அமையகூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் தெரிவில் குறிப்பிடத்தக்களவான பிரதிநிதிகள் திருப்தியடையவில்லை எனினும், சனநாயக ரீதியான அடித்தளத்தளத்தில் எழுப்பப்படும் இக்கட்டமைப்பின் சனநாயக ரீதியான பண்பியல்பாகவே இதனை பார்க்கவேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை வலுப்படுத்துவதற்கான, திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவுரைகளாகவே அவை இருக்கும்.

இதற்கு அப்பால், நாடு கடந்த தமிழீழ அரசின் முதன்மைப்பிரதிநிதிகள் தெரிவுகள் நிறைவுபெற்றபோதும், நாடு கடந்த தமிழீழ அரசின் வலுவுடமை என்பது தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுவதற்கு அப்பால் சர்வதேச நாடுகளின் அணுகுமுறை எப்படி அமையப்போகின்றன என்பதிலேயே பிரதானமாக தங்கியுள்ளது.

இதேவேளை சர்வதேச ரீதியாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறிலங்கா அரசுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகை நீக்கம் குறிப்பிடத்தக்க நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்ததன் அண்மைய குறிகாட்டியாக பங்களாதேசு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை பார்க்கலாம்.

தற்போது சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள் பங்களாதேசுக்கு வந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

குறைந்த வேதனத்துடன் கூடிய வேலையாட்களை பெற்றுக்கொள்வதில் சீனாவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக – சிறிலங்காவின் முன்னைய ஏற்றுமதியாளர்கள் – பங்களாதேசை நோக்கிய திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை கொடுப்பதைவிட தனது பொருளாதாரம் பாழானாலும் பரவாயில்லை என்றவகையிலான சிறிலங்கா அரசின் செயற்பாடுகளை சர்வதேசம் நிச்சயம் புரிந்துகொள்வதற்கான குறிகாட்டியாக நிச்சயம் இவ்விடயம் இருக்கும் என நம்பலாம்.

அண்மையில் திருமலை மாவட்ட அரசாங்க அதிபர், தமிழ் மக்களின் தொன்மைமிக்கதாக பேணப்படும் கன்னியாய் வெந்நீரூற்று பகுதியை சிறிலங்காவின் தொல்லியல் திணைக்களத்திடம் கையளிக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

இதுவரைகாலமும் தமிழ் மக்களால் பராமரிக்கப்பட்டுவந்த அப்பகுதியை தற்போது சிகல உறுமய எனப்படும் சிங்கள பிக்குளின் கட்சியால் நிர்வகிகப்படும் தொல்லியல் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கூறப்பட்டுள்ள மர்மம் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவை இவ்வாறிருக்க, இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டுத்திடலில் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

இப்போட்டிகளில் முன்னனியில் உள்ள அவுஸ்திரேலிய வீரர்களுடன், ஈழத்தைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் என்பவர், இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்று அவுஸ்திரேலிய நாட்டுக்கும் தனது தாய்நாடாம் தமிழீழத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஆனால் இதுவரை எந்தவித தங்கப்பதக்கத்தையும் பெறமுடியாமல் தவிக்கும் சிறிலங்காவுக்கு செல்லத்துரை பிரசாந்தின் சாதனை நிச்சயம் சில செய்திகளை சொல்லவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை இனப்படுகொலைக்கான காலப்பகுதியில் இலங்கைத்தீவை விட்டு வெளியேறி, அவுஸ்திரேலியாவை அடைந்த குடும்பங்களில் ஒன்றாகவே செல்லத்துரை பிரசாந்தின் குடும்பமும் ஒன்று.

அவுஸ்திரேலியாவை அடைந்த அந்தக்குடும்பத்தின் இளையவரான பிரசாந்த, சாதாரண எடைக்குறைப்பு பயிற்சிக்காகவே குறித்த விளையாட்டில் ஈடுப்பட்டதாகவும், நாளடைவில் அதுவே தனது விருப்பத்துக்குரிய கலையாக வளர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எத்தனையோ திறமைசாலிகள் இலங்கையை விட்டுவெளியேறியுள்ளார்கள். அதேவேளை தாயகத்தில் வாழும் எத்தனையோ வீரர்கள் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இப்போதும் வாழ்ந்துவருகின்றார்கள்.

தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்கி கௌரவத்துடன் வாழ அனுமதித்திருந்தால், இவரைப் போன்ற எத்தனை வீரர்கள் அந்நாட்டுக்கு பெருமை சேர்த்திருப்பார்கள். அதனை சிங்கள தேசம் புரிந்திருந்தால் ஏன் இந்த அழிவுகள்? ஏன் இவ்வளவு இடப்பெயர்வுகள்?

-    சங்கிலியன்

Share This:

No Comment to " நாடுகடந்த தமிழீழ அரசு – பங்களாதேசு – கன்னியாய் – தங்கப்பதக்கம் (வெள்ளிவலம்) "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM