News Ticker

Menu

புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன?

இழப்புக்களையும் வலிகளையும் சுமந்த ஆண்டான 2009 கடந்து இன்று புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த விடுதலை போராட்டம் வல்லாதிக்க சக்திகளின் உதவியுடனும் போராட்ட பயணத்தில் உறுதியோடு பயணித்து தடம்மாறி காட்டிக்கொடுப்போராக மாறிய எம்மவர்களின் துரோகங்களுடனும் எமது தமிழ் இராச்சியம் மீளவும் வீழ்த்தப்பட்ட ஆண்டாக 2009 ஆம் ஆண்டு கடந்துசெல்கின்றது. புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன?

1833 ஆம் ஆண்டில் இறுதியாக வீழ்ந்த தமிழ் இராச்சியம் மீண்டும் எழுச்சிகொண்டு வளர்ச்சி கண்டபோது மீளவும் 2009 ஆம் ஆண்டு வீழ்த்தப்பட்டுள்ளது. வரலாற்றையே வழிகாட்டியாக கொண்ட தலைமைத்துவத்தின் வழிப்படுத்தலில் ஓரணியாக திரண்ட தமிழர்கள் சக்தி, வல்லாதிக்க வல்லூறுகளின் கூட்டணியில் எரியுண்டுபோய்விட்டது.



பிறந்திருக்கும் புதிய ஆண்டு தமிழர்களுக்கு மிகவும் சவாலாக பிறந்திருக்கிறது. புதிய ஆண்டில் எவ்வாறு தமிழர்களது இருப்பை உறுதி செய்துகொள்ளப்போகின்றோம். எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் வன்னித்தமிழ் மக்களுக்கு என்ன செய்யப்போகின்றோம்? தமது சொந்தமண்ணில் எத்தனையோ ஆண்டுகளாக வாழமுடியாமல் தவிக்கும் ஈழத்தமிழர்களின் புனர்வாழ்வுக்கு என்ன செய்யப்போகின்றோம்?

எதிர்வரவுள்ள அரச தலைவர் தேர்தலும் அதனை தொடர்ந்து வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலும் ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரும் சாவாலாக இருக்கப்போகின்றது. ஈழத்தமிழர்களின் இழந்துபோன வாழ்க்கைக்கு துணைபோனவர்களே இன்று மீட்பர்களாக வலம்வரும் வேளையில் கறுப்பு வெள்ளையாகவும் வெள்ளை கறுப்பாகவும் தோற்றமளிக்கும் குழப்பமான வேளையிது.

மௌனமே வாழ்க்கையாக தமது அபிலாசைகளை வெளியே சொல்லமுடியாமல் வாடும் எம் தமிழ் உறவுகளுக்கு நிம்மதியான வாழ்வை கௌரவமான வாழ்வை ஏற்படுத்த வழியென்ன? ஈழத்தமிழர்களின் பலம் அங்கு வீச்சோடு நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதலை போராட்டத்தின் மூலமே பேணப்பட்டது. இன்று அந்த விடுதலை போர் வீழ்ச்சி கண்ட நிலையில் எமது பணிகள் என்னவாக இருக்கபோகின்றது?

தற்போதைய மாறிய களநிலைமையில் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் பாதையை சரியான முறையில் செப்பனிட்டு கொள்ளவேண்டிய ஆண்டாக 2010 அமையபோகின்றது.

அரசியல் ரீதியாக சரியான வியூகங்களை வகுப்பதன் மூலமே இலங்கை அரசியல் உலகில் தமிழர் தரப்பு தனது நிலையை தக்கவைக்கமுடியும். அவ்வாறில்லாவிட்டால் பிழையானவர்களின் தலைமையில் ஈழத்தமிழினம் இழுபட்டு செல்லப்படக்கூடிய அபாயம் இந்த புதிய ஆண்டில் எதிர்கொண்டிருக்கிறது.

இப்புதிய ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில்  தமிழர்களின் வாக்குகளே அரச தலைவர் தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் வாக்குகளாக இருக்கின்றது. சிங்கள தேசத்தை பொறுத்தவரை இரண்டு பிரதான வேட்பாளர்களும் சம அளவான வாக்கு வங்கியே கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு பிரதான வேட்பாளர்களும் அதனை சார்ந்து இருக்கின்ற சிலரும் தமிழர்களை பொறுத்தவரை பிழையானவர்களே. ஆனால் எத்தனை பிழையானவர்களை இத்தேர்தலின் ஊடாக அகற்ற போகின்றோம் என தீர்மானித்து அதற்கேற்ப அவர்களை அகற்றக் கூடியதாக தமது அரசியல் தீர்மானத்தை எடுக்கவேண்டும்.




தமிழர்களுக்கான முழுமையான அரசியல் உரிமைக்கான பேச்சுக்களை செய்யக்கூடிய சூழல் இப்போது இல்லை. அழிக்கப்பட்ட வாழ்வை முதலில் ஏற்படுத்தகூடிய இடைவெளியை ஏற்படுத்துவோம். அதன் மூலம் சிறைப்படுத்தப்பட்டுள்ள உறவுகளை வெளியில் கொண்டுவருவோம். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி இயல்புவாழ்வை ஏற்படுத்துவோம். தமிழினத்தை காட்டிக்கொடுத்து இன்று அமைச்சர்களாக உலாவரும் "தமிழ் அமைச்சர்களை" வீட்டுக்கு அனுப்புவோம்.

விடுதலைக்கான ஆயுத போராட்டத்தின் வீழ்ச்சியுடன் தமிழர்கள் தமது அரசியல் பாதையை விரிவாக்கி வீச்சாக்கவேண்டிய தேவையுள்ளது. ஆயுத போராட்டத்தின் மூலம் உருவான தமிழ்த்தேசியத்தை பயன்படுத்தி அரசியல் வழியில் தமிழின விடுதலையை ஏற்படுத்தமுடியும். உதாரணமாக எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்கவேண்டுமா அல்லது பிரிந்திருக்கவேண்டுமா என வாக்கெடுப்பு வரலாம். அப்படியான அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்குரிய வகையில் தாயகத்தில் உள்ள மக்களின் இருப்பு உறுதிப்படுத்தவேண்டும்.

சிறைப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் உண்மையான தமிழ்ப்பிரதிநிதிகளை தாயகப்பகுதியின் ஆட்சியில் அமரவைப்பதை உறுதிப்படுத்துவதும் உடனடியாக செய்யவேண்டிய விடயங்களாக கொண்டு இப்புதிய ஆண்டில் அவற்றையே செய்யவேண்டிய கடமைகளாக ஒவ்வொருவரும் வரித்துக்கொள்வோம்.




- கொக்கூரான்

Share This:

No Comment to " புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM