News Ticker

Menu

சுவடுகள் - 3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான்

கப்டன் அன்பரசன் பற்றியும் அவன் வீரச்சாவடைந்த நிகழ்வு பற்றியும் கடந்த சுவட்டில் ‘தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன்’ என்ற தலைப்பில் பார்த்திருந்தோம்.

கப்டன் அன்பரசன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது 04/06/1998. அதுவொரு வியாழக்கிழமை. அதற்கு அடுத்துவந்த வியாழக்கிழமையும் அதேயிடத்தில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தது. அதன்பின் வந்த சில வியாழக்கிழமைகளை ஒருவித பீதியோடு கழிக்கும் வகையில் அந்த இரண்டாவது வெடிவிபத்து ஆழ்ந்த பாதிப்பை எமக்குள் ஏற்படுத்தியிருந்தது.

அன்பரசனின் சம்பவத்தின் பிறகு எமது கற்கைநெறி திட்டமிட்டபடியே நகர்ந்தது. அன்பரசனையும் காயமடைந்த இருவரையும் சேர்த்து மூன்றுபேர் குறைந்திருந்தார்கள். விபத்து நடந்து அடுத்தநாளே கட்டடத்தைத் துப்பரவாக்கி எல்லாம் பழையபடி ஒழுங்கமைத்து படிப்பைத் தொடங்கியிருந்தோம். எவரும் துவண்டுபோய்விட வானம்பாடி மாஸ்டர் விட்டுவிடவில்லை.

வானம்பாடி மாஸ்டர் எமக்குக் கற்பிப்பதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரியர். இயக்கத்தின் ‘வெடிபொருள் பொறியமைப்புக் கல்வி’ தொடர்பில் அந்நேரத்தில் அவரே பொறுப்பாக நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார். பொறியமைப்புக்கள் தொடர்பில் நீண்டகால அனுபவமும் மிகத் தேர்ச்சியும் கொண்டிருந்தார். பொறியமைப்புச் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவதொன்றும் இலகுவான செயலன்று. கணனிகள் உட்பட நவீன சாதனங்கள் எவையுமின்றி வெறும் கரும்பலகையில் கீறிமட்டுமே கற்பிக்க வேண்டிய நிலையிற்கூட மிக அழகாக எல்லோருக்கும் விளங்கும் வணக்கம் கற்பிக்க அவரால் முடிந்தது. மிக எளிய எடுத்துக்காட்டுக்களோடு பொறியமைப்புத் தொகுதிகளின் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவார்.



கற்சிலைமடுவில் தங்கியிருந்து நாம் படித்துக்கொண்டிருந்தபோது கிழமைக்கொரு நாள் வந்து தனது பாடத்தைக் கற்பித்துச் செல்வார். இவரின் பாடம் மிக உற்சாசமானதாக அமைந்திருக்கும். அப்போது பிறைசூடி எங்களோடு படித்துக்கொண்டிருந்தான். அவன் வெடிபொருள் உற்பத்திப் பிரிவிலிருந்துதான் வந்திருந்தான். ஏற்கனவே வெடிபொருட்கள் மட்டில் கொஞ்சம் அனுபவங்கள் இருந்தன அவனுக்கு. கொஞ்ச நாட்களின்பின் அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டார் வானம்பாடி மாஸ்டர். அவ்வளவுக்கு வெடிபொருட் பொறியமைப்புக்கள் மட்டில் மிகவும் ஆர்வமாகவும் திறமையான கற்கையாளனுமாய் இருந்தான் பிறைசூடி.

வானம்பாடி மாஸ்டர் கற்பிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர். தனக்குத் தெரிந்த அனைத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டுமென்ற துடிப்புள்ளவர். அதற்கு அவர் வளர்ந்த விதமும், அதாவது அவர் தனது வெடிவொருள் அறிவைப் பெருக்க முற்பட்டபோது ஏற்பட்ட தடங்கல்களும், சிரமங்களும் முக்கிய காரணம். தனது தனிமுயற்சியாலேயே ஏராளமான விடயங்களைக் கற்றுக்கொண்டவர் அவர். அது தொடர்பாக தனது அனுபவங்கள் பலதைச் சுவைபடச் சொல்லியிருக்கிறார். தனது நிலைமை மற்றவர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாதென்பது அவரது முக்கிய நோக்கம்.

குண்டுவெடிப்புகள், சிதறிய உடல்கள், இறப்புகள் என்பவை எமக்குப் புதியவையல்ல. பொதுமக்களுக்கே அவை இயல்பான விடயங்களாக இருந்தன. எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் என்று எத்தனையோ குண்டுவெடிப்புக்களையும் பலநூறு சாவுகளையும் உடல்களையும் கண்டுபழகியவர்கள் பொதுமக்கள்.

கற்பித்தல் திட்டத்தில் இல்லாத விடயங்களைக்கூட எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அவரது எண்ணம். வெடிக்காத கிபிர் குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதைக் காட்டித் தந்ததுட்பட அப்படி நிறையச் செய்திருக்கிறார். அவருக்கேற்றாற்போல் மாணவர்களும் நல்ல ஆர்வமானவர்களாயும் கெட்டிக்காரராயும் அமைந்தது அவருக்கு மிகவும் உற்சாகமாய் அமைந்தது.

1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம். கற்கை நெறியின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தோம். வெடித்தல் தொகுதிகளின் பொறிமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்காக இயக்கத்தின் பொறிமுறைக் களஞ்சியம் இருக்கும் இடத்திற்கு அனைவரும் போயிருந்தோம். ஒருகிழமை அங்கேயே தங்கியிருந்து அனைத்து வெடிபொருட்களையும் பார்த்துப் படிப்பதே நோக்கம். கற்சலைமடுவிலிருந்து கல்மடுவுக்கு எமது படிப்புத்தளம் மாறியது.



அக்களஞ்சியம் வானம்பாடி மாஸ்டரின் பொறுப்பிலேயே இருந்தது. அங்குத் தங்கியிருக்கும்மட்டும் கற்கைநெறியிலுள்ள போராளிகளுக்கு அவரே பொறுப்பாளர். எமக்கான உணவு விடயத்தில் அதிக அக்கறை காட்டினார். ஒருநாள் இரவு அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் இருவரோடு அவர் வேட்டைக்குப் போய் எமக்காகப் பன்றி சுட்டுக்கொண்டு வந்தார்.

அன்று ஜூன் மாதம் பத்தாம் நாள். திகதி ஞாபகமிருப்பதற்குக் காரணம் அன்றுதான் சுதந்திரபுரப் படுகொலை நடந்தநாள். பின்னேரம்தான் எமக்குச் செய்தி வந்தது. அன்று எவரும் குளிக்கப் போகவில்லை. அனைவரும் உடைந்து போயிருந்தோம். அன்று இரட்டிப்புத் துன்பம். ஒன்று பொதுமக்கள் படுகொலை, மற்றது அம்மா அண்ணையின் வீரச்சாவு.

அம்மா அண்ணைக்கு ஏன் அந்தப்பேர் வந்ததென்று சரியான ஞாபகமில்லை. ‘அன்பு’ என்பதுதான் அவருடைய பதிவுப்பெயர். காட்டுக்குள்ளேயே அவருக்கு அம்மா என்ற பெயர் வந்ததென்று கேள்விப்பட்டோம். பேருக்கேற்றாற்போல், இயக்கத்துக்கு அவர் அம்மாவாகவே இருந்தார். போராளிகள் அனைவருக்குமான வழங்கற் பொறுப்பாளர் அவர்தான். எந்த நெருக்கடிக்குள்ளும் அவர் சாப்பாடு தந்துகொண்டிருந்தார்.

ஆனால் வானம்பாடி மாஸ்டரின் வெற்றிடம் ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ‘கப்டன் வானம்பாடி’ என்ற பெரும் போரறிவியற் சொத்து ‘லெப். பிறைசூடி’ என்ற தனது உதவியாளனோடு சேர்ந்து அழிந்து போனது.

இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒருவரின் இழப்பின்போது ‘இனி என்ன செய்யிறது?’ என்ற கேள்வி எழுந்த சந்தர்ப்பங்கள் மிகச்சில தாம். அம்மா அண்ணையின் வீரச்சாவும் அவற்றிலொன்று. அன்று நாங்கள் மிகவும் நொடித்துப் போயிருந்தோம். வானம்பாடி மாஸ்டரும்தான். ஆனால் எம்மைச் சோரவிடாமலும் குழப்பமில்லாமலும் வைத்திருக்க வேண்டிய தேவை அவருக்கிருந்தது. அன்று இரவு நீண்டநேரம் எம்மோடிருந்து கதைத்தார். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் எமக்கான படிப்பு முடிந்துவிடுமென்ற நிலையில் அவர் நிறைய விடயங்களைக் கதைத்தார்.

மறுநாள், ஜூன் பதினோராம் நாள், வியாழக்கிழமை. அன்பரசன் வீரச்சாவடைந்து சரியாக ஒருகிழமை. அன்று மதியத்தோடே படிப்பை முடித்திருந்தார். எம்மைக் குளிக்க அனுப்பிவிட்டு பிறைசூடியும் வானம்பாடி மாஸ்டரும் நின்றுகொண்டார்கள். நாங்கள் வழமைபோல் குளத்துக்குப் போனோம், குளித்தோம், திரும்பி வந்துகொண்டிருந்தோம்.

அணைக்கட்டிலிருந்து இறங்கி சிறிதுதூரம்தான் வந்திருப்போம். திடீரென்று ஒரு வெடிச்சத்தம். எமது தளப்பக்கம்தான் கேட்டது. அடிக்கடி இச்சத்தங்களைக் கேட்டுப் பழகியிருந்ததால் வெடிச்சத்தங்கள் எமக்குள் உடனடித் தூண்டல்களைச் செய்வதில்லை. அதன் காரணத்தால் இச்சத்தத்தைக்கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் கதைத்துக்கொண்டு நடந்தோம். அப்போது பாதைக்கரையாக கச்சானுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்த பொதுமகன் ஒருவர்

‘ஐயோ! இண்டைக்கு ஆரோ தெரியேல…’

என்று தலையில் கைவைத்து எமது தளப்பக்கம் பார்த்துச் சொன்னபோதுதான் உறைத்தது. எமது தளத்திலிருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. விழுந்தடித்து ஓடினோம். அதற்குள் வீதியாற் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர் வளவுக்குள் நின்றிருந்தனர். வானம்பாடி மாஸ்டரும் பிறைசூடியும் நிலத்திற் கிடந்தனர். களஞ்சியக் கட்டடத்திலிருந்து சற்று எட்டவாகத்தான் ஏதோ செய்துகொண்டிருந்திருக்க வேண்டும். களஞ்சியத்துக்கு எந்த ஆபத்துமில்லை. வானம்பாடி மாஸ்டரிடம் அசைவே இல்லை. பிறைசூடி சுயநினைவோடு இருந்தான். வோக்கியில் உரிய இடத்துக்கு அறிவித்துவிட்டு இருவரையும் அப்புறப்படுத்தும் வேலையைத் தொடங்கினோம். அன்பரசனின் நிகழ்வோடு, மருத்துவமனையிருக்கும் இடம், அதை அடையும் பாதை என்பவற்றை அறிந்திருந்தோம். வாகனம் வந்து சேர்வதற்குள் குறிப்பிட்ட தூரமாவது பிறைசூடியைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவதுதான் திட்டம்.



சாரங்களைக் கொண்டு காவுதடி செய்து பிறைசூடியைத் தூக்கிப் போனோம். எல்லாப் போராளிகளும் வந்து சேரவில்லை. பொதுமக்களே உதவினார்கள். வானம்பாடி மாஸ்டரைக் காப்பாற்றுவது சாத்தியமில்லையென்பது உடனேயே தெரிந்திருந்தது. அவர் உடனடியாகவே இறந்திருக்க வேண்டும். அப்போது பிறைசூடி சுயநினைவோடுதான் இருந்தான். வேதனையில் கத்திக்கொண்டிருந்தான்.

நாம் தங்கியிருந்த தளத்தின் அருகில்தான் பிறைசூடியின் குடும்பத்தினர் இருந்தனர். அவனது அக்கா வந்துநிற்பதாகச் சொல்லி அன்று மதியம்தான் வீட்டுக்குப் போய் வந்திருந்தான். அவ்வீட்டின் வழியாகத்தான் இப்போது பிறைசூடியைக் காவிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம். அப்போது நெல் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஓர் உழவு இயந்திரத்தின் ஓட்டுனர் உடனடியாக நிறுத்தி பிறைசூடியை மூட்டைகளின்மேல் ஏற்றச் சொன்னார். ‘இல்லையண்ணை, நெல்மூட்டையள் வீணாப்போடும். எங்களுக்கு வாகனம் வந்துகொண்டிருக்கு, நீங்கள் போங்கோ’ என்றோம். அவரும் விடவில்லை. அதற்குள், எதையோ மூடிக்கட்டியிருந்த யு.என்.எச்.சி.ஆர் கூடாரமொன்றைப் பெண்மணியொருத்தி கொண்டுவந்து தர, அதை நெல்மூட்டைகள் மேல் போட்டு பிறைசூடியை ஏற்றத் தயாரானோம். அந்நேரம் எமக்குரிய மருத்துவ வாகனம் வந்துவிட்டதால் அதிலேயே பிறைசூடியை ஏற்றிக்கொண்டு போனோம்.

இவ்வளவும் நடந்தது பிறைசூடியின் வீட்டுப் படலையடியில்தான். அவனது வீட்டுக்காரர் வாசலில்தான் நின்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் பிறைசூடியை அடையாளங்காணவில்லை. அந்நேரம்பார்த்து பிறைசூடி வாய்திறக்கவில்லை.

மருத்துவமனையில் சேர்த்து அரைமணி நேரத்தில் அவன் சாவடைந்த செய்தியை எமக்குச் சொன்னார்கள். தளத்தில் என்ன நடந்ததென்று தன்னைக் கொண்டுபோகும் வழியில் பிறைசூடி சொல்லிக்கொண்டிருந்தான். நாமனைவரும் குளிக்கப் போனபின் பொறித்தொகுதியொன்றைச் செயலிழக்கச் செய்யும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அது மிக ஆபத்தான, பயன்படுத்த முடியாதவிடத்து வெடிக்கவைத்து அழிக்கும்படி உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு வெடிபொருள். அப்பொறியமைப்பைப் பற்றி அறியும் தேவை எமது கல்வித்திட்டத்தில் இருக்கவில்லை. ஆனால் கற்கை நெறியின் இறுதியாக அப்பொறியமைப்பை வெட்டிக்காட்டி அதன் உள்ளமைப்பையும் செயற்பாட்டையும் கற்பிக்க வேண்டுமென்று வானம்பாடி மாஸ்டர் நினைத்திருந்தார். ஆனால் அது அவரையும் பிறைசூடியையும் காவுகொண்டு விட்டது.

குண்டுவெடிப்புகள், சிதறிய உடல்கள், இறப்புகள் என்பவை எமக்குப் புதியவையல்ல. பொதுமக்களுக்கே அவை இயல்பான விடயங்களாக இருந்தன. எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் என்று எத்தனையோ குண்டுவெடிப்புக்களையும் பலநூறு சாவுகளையும் உடல்களையும் கண்டுபழகியவர்கள் பொதுமக்கள். போராளிகளுக்கு அவை இன்னும் பழக்கமானவையே.

ஆனால் வானம்பாடி மாஸ்டரின் இறப்பு எல்லோரையும் உலுக்கிப் போட்டது. ஓர் இறப்பென்ற வகையிலோ, சிதைந்த உடலைப் பார்த்தோமென்ற வகையிலோ அந்த அதிர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ‘வானம்பாடி மாஸ்டர்’ என்ற ஆளுமைக்கு இப்படி நடந்ததென்பதே முக்கிய விடயமாக இருந்தது. சரியாக ஒருகிழமை இடைவெளியில் நடந்த இரண்டாவது வெடிவிபத்தாக அது அமைந்ததும் ஒரு காரணம். மருத்துவமனையிலிருந்து தளம் திரும்பியபோது நிலைமை தலைகீழாக இருந்தது. ஒவ்வொருவனும் ஒவ்வொரு திக்காக ஒடுங்கிப்போய் இருந்தார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. எழுந்து நடக்கச் சக்தியற்றவர்கள் போல் சுருண்டிருந்தார்கள்.

அதுவரை தான் களவாகச் சேர்த்து வைத்திருந்த ஈரங்குல நீளமான திரி, வெடிப்பதிர்வு கடத்தி, வெடிப்பிகள் போன்ற ஆபத்தற்ற மாதிரிப் பொருட்களை எல்லாம் தூக்கிக் கொண்டு கோபி குளத்தைநோக்கி ஓடிப்போனான். கையிலிருந்தவற்றையெல்லாம் குளத்தில் எறிந்தான். அவ்வளவுக்கு ஒவ்வொருவரையும் அச்சம்பவம் பாதித்திருந்தது.

பொறியியற்றுறைப் போராளிகளையும் அச்சம்பவம் உலுக்கியிருந்தது. வானம்பாடி மாஸ்டருக்கு இப்படி நடந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. ‘தம்பிமார், நீங்கள் இந்தநிமிசமே வெளிக்கிட்டு உங்கட இடத்துக்குப் போங்கோ ராசா’ என்று சொல்லி அன்றிரவே எம்மை அனுப்பிவைத்தார்கள்.

நாங்கள் இயல்புக்கு வரச் சிலநாட்கள் எடுத்தன. போராளிகளை மீள்நிலைக்குக் கொண்டுவருவது இலகுவானதாக இருக்கவில்லை. தொடர்ந்தும் வெடிபொருட்களோடு செயற்பட வேண்டிய துணிவையும் விருப்பையும் அவர்களிடம் தக்கவைப்பது முக்கியமானதான இருந்தது. எல்லாவற்றையும் வென்று திட்டத்தில் மிச்சமிருந்தவற்றையும் கற்று வெற்றிகரமாக எமது கற்கைநெறியை முடித்தோம். அத்தொகுதியில் வெளிவந்த பலர் தத்தமது படையணிகளிலும் பிரிவுகளிலும் இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக முக்கிய பங்காற்றினர். இயக்கம் வளர்ந்தது, காலம் கடந்தது.

ஆனால் வானம்பாடி மாஸ்டரின் வெற்றிடம் ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ‘கப்டன் வானம்பாடி’ என்ற பெரும் போரறிவியற் சொத்து ‘லெப். பிறைசூடி’ என்ற தனது உதவியாளனோடு சேர்ந்து அழிந்து போனது.

=========================================

* கோபி கடற்புலிகள் பிரிவிலிருந்து படிக்க வந்திருந்தவன். பின்னாளில் வினியோகப் பணியில் சிறிலங்காக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் கப்டன் கோபியாக வீரச்சாவடைந்தான்.

** வானம்பாடி மாஸ்டருக்குப் பின்னர் நிருபன் மாஸ்டர் அவரின் பணியை ஏற்றுச் செயற்பட்டார். பின்னர் நடந்த இன்னொரு வெடிவிபத்தில் கப்டன் நிருபனும் வீரச்சாவடைந்தார்.

Share This:

No Comment to " சுவடுகள் - 3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM