Home > பொழுதுபோக்கு > நாடோடிகள் – விமர்சனம்

நாடோடிகள் – விமர்சனம்

இயல்பான கதைகளை மீண்டும் திரைக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கும் வெகுசிலரில் தற்போது முன் நிற்பவர் சுப்ரமணியபுரம் சசிக்குமார். சுப்ரமணியபுரம் வெற்றிக்குப் பிறகு ”பசங்க” திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட சசிக்குமாருக்கு இப்படம் நடிப்புக்கான களத்திலும் தான் சளைத்தவர் இல்லை என்று நிரூபிக்க வாய்ப்பாகி இருக்கிறது. படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி கதை , திரைக்கதை , வசனம் , இயக்கம் என அனைத்தையும் மிக நன்றாகச் செய்திருக்கிறார். மிகக்கவனமாக கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார்.\r\n\r\n


\r\n\r\nசின்னச்சின்ன கதபாத்திரங்களும் அவற்றின் குணநலனை வருகின்ற ஓரிரண்டு காட்சிகளிலேயே முழுமையாக தெரியப்படுத்தும் படியாக ‘நச்’ படைப்புக்கள்.\r\n\r\nநட்பின் இலக்கணத்தைக் கருவாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதை.’ காதலிப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் இருக்கின்ற தைரியத்தில் தானே காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்றபடி தன் நண்பனுக்கு உதவ முனைகிறார் கருணாகரன் என்கிற சசிக்குமார். அவருக்கு நெருங்கிய நண்பர்களான பாண்டி ( பரணி) சந்திரன் ( விஜய்) அதற்கு உறுதுணையாக வருகிறார்கள் . காதலுக்கு உதவி செய்யப்போனதால் அவர்கள் அடையும் கஷ்டங்களை மையமாக வைத்தே கதை நகர்கிறது. உண்மையில் பல படங்களில் துணை நடிகர்களாக வரும் காதலுக்கு உதவுகின்ற நண்பர்கள்தாம் இப்படத்தின் கதாநாயகர்கள். அக்கருத்தே படத்தினைத் தனியாக் காட்டுகிறது.\r\n\r\nதங்கையை தன் இன்னோரு நண்பன் காதலிப்பது அறிந்தும் அமைதியாக அறியாதவனாகக் காட்டிக்கொண்டு நட்புக்கு மரியாதை செய்கிறார் சசிக்குமார். அவருடைய மாமன் மகளுக்காக தொடர்ந்து அரசாங்க வேலைக்கு முயற்சிப்பதில் அவருடைய பாசம் தெரிகிறது. அரசாங்க வேலை கிடைத்தால் தான் மகளைத்தருவேன் என்று வெற்றுப் பிடிவாதம் செய்கிற மாமனிடம் கோவம் கொள்ளாமல் ”ஒரு கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் குடுத்தா மறுகையில் உன்னைக் கொடுக்கப்போகிறார் அவர் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு” என்று அடிக்கடி சொல்லி நாயகியை சமாதானப்படுத்துகிறார் . மாமன் மகளாக வரும் அனன்யா நடிப்பில் அசத்துகிறார் . சோகமாகட்டும் ,குறும்பாகட்டும் , கொஞ்சலாகட்டும் , கெஞ்சலாகட்டும் எல்லாவற்றிலும் முன்நிற்கிறார் . கதாநாயகிகள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடுகளைக் களைந்து நாம் தினம் பார்க்கும் இயல்பான பெண்ணாக கதாநாயகிகளைக் காட்டுவதற்காகவே இவர்களைப் பாராட்டவேண்டும். இரு நாயகிகளுமே எளிமையான அழகு. மற்றொரு நாயகியாக அபிநயா நடித்திருக்கிறார் அவருக்கு வாய் பேசமுடியாது என்பது ஓர் ஆச்சரியமான விடயம். மிக அழகாக அவர் வசனங்களை உதடசைத்து நடித்திருப்பது படத்தில் இயல்பாகவே இருக்கிறது.\r\n\r\nசசிக்குமாரின் மற்றொரு நண்பர் வரும் வரை நண்பர்கள் மூவரும் இணைந்தே இருப்பதும் அவர்களின் இலட்சியங்களும் ,அவர்கள் குடும்பங்கள் அவர்கள் மேல்கொண்ட அதிருப்தியும் என மெதுவாக நகரும் களம், அமைதியான் அவர்கள் வாழ்வில் நண்பன் வந்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல்வதிலிருந்து வேகமெடுக்கிறது . காதலிக்காக கடலிலும் கிணற்றிலும் குதித்ததைக் கேட்டு நண்பனின் காதல் தீவிரத்தை உணர்ந்து அவனுக்கு உதவ முடிவெடுக்கிறார்கள் ..\r\n\r\nபரணி கல்லூரிப் படத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் இப்படத்தில் மிக நல்ல வாய்ப்பு. எல்லார் மனதிலும் அவர் நிற்பது நிச்சயம். திருடனாக வில்லன் வீட்டில் தன்னை மட்டும் காட்டிக்கொண்டு நண்பர்களை தப்புவிப்பதும், காது கேக்காமல் இருந்தபோதும் , பின் திரும்ப கருவியின் உதவியோடு ”டேய் கேக்குதுடா” என்று விழிவிரிய குதூகலிப்பதுமாக பரணிக்கு நல்ல காட்சி அமைப்புகள் .”அப்பா நீ பேசுனது கேக்கலப்பா ..என்ன சொல்லி இருப்ப? இவன் என் பையன் இல்லைன்னு தானே! “ என்று அப்பாவைக் கேட்கும் போது உருக்கம் .\r\n\r\nசசியின் மாமாவாக வருபவர் , வில்லன், வில்லனின் “ நீங்க சொன்னா சரிதான் மாமா” மருமகன் , அரசியல்வாதி என எல்லாருமே இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்கள். காதலுக்கு உதவி பெறும் நண்பர் பல இடங்களில் தான் ஒரு சுயநலவாதி , சந்தர்ப்பவாதி என்பதைக் காட்டிக்கொண்டே வருகிறார். தன்னைக்காப்பாற்ற வந்து கால் உடைந்த நண்பரை விட்டுவிட்டு ஓடுகிறார். தலைமறைவு வாழ்க்கையில் உதவியாக இருக்கும் நண்பன் ஏற்பாடு செய்தவரை எடுத்தெறிந்து பேசுகிறார். பாத்திரப்படைப்பில் முதலிலிருந்தே அவரின் குணநலனைக் கோடுகாட்டி விடுகிறார் இயக்குனர். அவரின் காதலியாக வருபவருக்கு குணநலனை முன்கூட்டியே சொல்லும்படி அப்படி எதும் காட்சி அமைப்பு இல்லை.\r\n\r\nகஞ்சாக்கருப்பும் பரணியும் செய்கிற ஒவ்வொன்றும் நல்ல கலகலப்பு. சசிக்குமாருக்கு போகும் இடமெல்லாம் இருக்கும் நட்பும் அவர்கள் இவருக்காக செய்யத்துணியும் ஒவ்வொன்றும் என நட்பின் கிளைகள் பரந்து விரிகிறது. கழுத்துச் சங்கிலியைக் கழட்டிக்கொடுத்து கையிலிருக்கும் காசெல்லாம் அள்ளிக் கொடுத்தனுப்பும் வரை தன் காயம் கூட தெரியாதவராக இருக்கும் நாயகன் நண்பர்களின் இழப்புகளைக் காணநேரும் போது உடைந்து அழும் காட்சி சிறப்பாக வந்திருக்கிறது.\r\n\r\nnadodigal-movie-stills-காவல்நிலையத்தில் ஜோடிகள் எங்கே எங்கே என்று விசாரிக்கப்படும்போது அடி உதையை வாங்கிக்கொண்டு இடத்தைச் சொல்ல மறுக்கும் கருணாவின் மற்ற நண்பர்கள் அவனை எங்களுக்குத் தெரியாது என் நண்பனின் நண்பன் என்பதால் உதவி செய்தோம் எனும் காட்சி அவர்கள் நட்பின் வீரியத்தைச் சொல்கிறது. உதவி செய்ததால் கண் , காது , கால் என ஒவ்வொருவருக்கும் ஏதோ உடல் இழப்புக்களோடு தங்கள் வாழ்க்கை இலட்சியங்களிலிருந்து பின்வாங்க நேரிட்டப்போதும் கூட கலங்காத அந்த நண்பர்கள், தாங்கள் சேர்த்து வைத்தவர்கள் சுயநலமாக பிரிந்துவிட்டதைக் கேள்வியுறும்போதுதான் கலங்கி நிற்கிறார்கள். அவர்களைக் கேள்வி கேட்கத் தங்களுக்கு உரிமை இருப்பதாக நினைக்கிறார்கள். கடைசிக் காட்சிகள் சற்றே இயல்பை மீறியதாகத் தோன்றினாலும் நண்பனின் வாழ்வுக்காக தம் வாழ்வையே அழித்துக்கொண்டவர்கள் அப்படிச் செய்யவும் கூடும் என்றே தோன்றுகிறது.\r\n\r\nநண்பனின் காதலியைத் தேடிக்கொண்டு செல்கையில் குடிப்பதும் குத்தாட்டம் போடுவதுமென தீவிரமின்றியமைத்த காட்சிகள் தேவையில்லாத ஒட்டுப் போல இருக்கின்றன. இயல்பான கதையில் இவையெல்லாம் இன்னும் தேவைதானா?\r\n\r\nஇசை சுந்தர் .சி. பாபு. பிண்ணனி இசை மிகச்சிறப்பாக இருந்தாலும் பாடல்கள் அத்தனை பிரபலமாகவில்லை. ஆடுங்கடா பாடல் காட்சி அமைப்பும் பாடலின் எளிமையான இசையும் மனதில் நிற்கிறது. கடத்தல் காட்சிகளின் விறுவிறுப்புக்கு சம்போ சிவ சம்போ பாடல் மிகப்பொருத்தமானதாக அமைந்திருந்தது. வீடுகளும் கிராமமும் இயற்கையழகும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் அழகாகக் காட்சி தருகின்றன.\r\n\r\nநாடோடிகளின் நேர்மை எங்களுக்குப் பிடிச்சிருக்கு ! .\r\n\r\n-கயல் லஷ்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *