Home > பொருண்மியம் > பங்குச்சந்தை – II

பங்குச்சந்தை – II

சென்ற கட்டுரையில் முதலீடுகளின் சில வகைகளைப் பற்றியும், பங்கு என்றால் என்ன என்றும் பார்த்தோம். பங்குச்சந்தையைப் பற்றி மேற்கொண்டு தொடருமுன், பங்குச்சந்தை எப்போது தோன்றியது என்ற விவரத்தை அறிந்துகொள்ளலாம்.

\r\n14ஆம் நூற்றாண்டில், வெனிஸ் நகர ஆட்சியர்கள், தாம் பிற நாடுகளில் வாங்கிய கடன்களைத்திருப்பித் தர வசதியில்லாததால், மக்களிடையே கடன் பத்திரங்களை வினியோகித்தனர். அப்பத்திரங்கள் வியாபாரிகளாலும், நில உரிமையாளர்களாலும் வாங்கி, விற்கப்பட்டன. \r\n


\r\nபின் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், இத்தகைய பத்திரங்களை அரசின் பற்றாக்குறைகளின் போது வெளியிடத்தொடங்கின. பின், 1693ம் ஆண்டு தொடங்கி, லண்டனில் இவ்வகைப் பத்திரங்களை அரசும், பிற பெரு நிறுவனங்களும் வெளியிட்டன. அதை வாங்கி, விற்க விரும்பியவர்கள், அதற்கான முகவர்கள் ஆகியோர், உணவகங்களில் கூடினர். நாள்பட, நாள்பட பரிவர்த்தனைகள் அதிகரித்தபின்னர், 1773ல் முதன்முதலில் முகவர்கள் அனைவரும் ‘விற்பனைக்கான கழகம் ஒன்றைத் துவங்கினர். 1801ல் லண்டனில் வசித்த முகவர்கள் 20000 பவுண்டுகளைத் திரட்டி ‘லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்’ ஐத் தொடங்கினர். இதே சமயத்தில் அமெரிக்காவிலும் இத்தனைய பங்குவர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தன. 1817ல் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் துவங்கப்பட்டது. இவையிரண்டுமே உலகின் மிகப் பழமையான பங்கு வர்த்தக சபைகளாகும்.

பங்குச்சந்தை பற்றி மேலும் தகவல்களை அறியுமுன், நாம் நிறுவனங்களின் வகைகள் குறித்துச் சில விவரங்களை இங்கு பார்க்கலாம்.

தனி நபர் நிறுவனம் (proprietorship concern)

ஒரே ஒருவர், தனது கைப்பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) போட்டு ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்று கொள்வோம், அந்நிறுவனத்தின் லாபமோ நட்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சாரும். இத்தகைய நிறுவனத்தை ‘ தனி நபர் நிறுவனம் ‘ (proprietorship concern) என்று அழைப்போம். அந்நிறுவனதாரர் ‘உரிமையாளர்’ (proprietor) என்று அழைக்கப்படுவார்.

கூட்டு நிறுவனம் (Partnership company)

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் கூட்டாளிகள்(partners) எனப்படுவர். லாபம், நட்டம் எதுவாயினும், சமமாகக் கூட்டாளிகளுக்குள் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கைகளுக்கு, அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு.

வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company)

மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப் பகுக்கலாம். அவையாவன:

தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company)

அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.

பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited Company)

தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்.

இத்தகைய பொதுப்பங்கு நிறுவனங்களே, பங்குச்சந்தையில் பங்குகளை விற்கமுடியும். அதாவது, முதன்மைப் பங்குச்சந்தை (primary market) மற்றும் இரண்டாம் நிலைப் பங்குச் சந்தை (secondary market) மூலம் நாம் வாங்குவதோ விற்பதோ இந்நிறுவனங்களின் பங்குகளையே.

அடுத்து வரும் கட்டுரைகளில், எல்லாப் பொதுப்பங்கு நிறுவனங்களும் பங்குகளை விற்பனை செய்ய முடியுமா? அப்பங்குகளை நாம் எப்படி வாங்குவது/விற்பது? போன்ற பல தகவல்களை அறிந்துகொள்வோம்.

——————————————————————————————————

கி.பாலகார்த்திகா

Check Also

செயற்பாட்டு முகாமைத்துவம் – i

மூன்றே கேள்விகளும் சில சுழற்சிகளும்\r\n\r\nவழமையாக, வேலையில் ஓர் அணியினுடையதோ தனிப்பட்ட ஒருவரதோ செயல்றிறன் எதிர்பார்த்த அளவில இல்லாமக் குறைஞ்சு போயிருந்தா, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *