Home > பொருண்மியம் > பங்குச்சந்தை – I

பங்குச்சந்தை – I

பங்குச்சந்தை என்றால் என்ன?\r\n\r\nபொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம்(Physical presence) தேவையில்லை. கணிணி மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே பங்குச் சந்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது.\r\n\r\n


\r\n\r\nபங்குச்சந்தையைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் வேறு சிலவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.அவற்றைப் பார்ப்போமா?\r\n\r\nசேமிப்பும் முதலீடும்:\r\n\r\nசேமிப்பும்(savings) முதலீடும்(investment) ஒன்றல்ல. சேமிப்பெல்லாம் முதலீடில்லை,சேமிப்பின்றியும் முதலீடில்லை. சேமிப்பு என்பது, ஒருவர் தனது வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்திற்காக ஒதுக்கி வைப்பது. முன் காலத்தில் பெண்கள் புளிப் பானையில், அல்லது ஐந்தரைப் பெட்டியில், தம்மிடம் உள்ள பணத்தைப் போட்டு வைப்பார்களாம். அப்படி வீட்டிலேயே பணத்தை வைத்திருந்தாலும் சரி, அஞ்சலகத்திலோ, வங்கிகளிலோ போட்டுவைத்தாலும் சரி, அல்லது ஏதேனும் சொத்து வாங்கினாலும் சரி, அது சேமிப்புதான்.\r\n\r\nசேமிப்பை எப்போது முதலீடு என்று அழைக்கலாம்? சேமித்த பணத்தைப் பயன்படுத்தி, நீங்கள் அதன் மூலம் வருமானம்(income) பெற்றால்மட்டுமே அது முதலீடாகக் கருதப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் பணத்தை வங்கியில் சேமித்து, வட்டி பெறலாம்.வியாபாரத்தில் போட்டு, பல மடங்காக்க முயலலாம். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கலாம். நிலமோ, வீடோ வாங்கலாம். சிலவகை முதலீடுகள், சிறிய தொடர்ச்சியான வருமானத்தைத் தரக்கூடியவை (வங்கியில் மாதாந்திர வட்டி). சிலவோ, விற்கும்பொழுது, பலமடங்கு லாபம் தரக்கூடும் (நிலம், வீடு, பங்குகள்).\r\n\r\nமுதலீடு செய்யும் வழிகள்.\r\n\r\nமிகவும் கடினமாக உழைத்து நாம் சேமித்த பணத்தை, சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் சாதக பாதகங்களைப்\r\nபார்க்கலாமா?\r\n\r\nஅசையாச் சொத்துகள்:\r\n\r\nநிலம், வீடு முதலியவற்றில் செய்யப்படும் முதலீடு மிகவும் லாபகரமானது. இவற்றின் மதிப்பு பொதுவாக உயருமே அன்றிக் குறைவதில்லை. ஆனால், இது, சிறு முதலீட்டிற்கு ஏற்றதில்லை. நிலமோ, வீடோ வாங்கவேண்டுமானால், பொதுவாகப் பெருந்தொகை தேவைப்படக்கூடும். மேலும், இவற்றை, இலகுவாக அவசரத் தேவையின்போது விற்க இயலாது, மொத்தமாக, ஏதேனும் உபரிப்பணம் வரும்போது, நீண்ட காலத்தேவையை மனதில் கொண்டு, செய்யக்கூடிய சிறந்த முதலீடு இது எனினும், சிறு வருமானம் உடையவர்களோ, குறுகிய காலத்தில் தமது முதலீட்டைப் பணமாக மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்களோ இவ்வகை முதலீட்டினை மேற்கொள்ளுவது கடினம்.\r\n\r\nஅசையும் சொத்துகள்\r\n\r\nநகை, வங்கிச்சேமிப்புகள், கடன் பத்திரங்கள், பங்குகள் முதலியவை இவ்வகைச் சாரும். தங்கம் ஒரு எளிமையான முதலீடாகக் கருதப் படுகிறது. ஆயினும், இதனைப் பாதுகாத்துவைப்பது சற்றே கடினமென்பது பொதுவான அபிப்பிராயம். அது மட்டுமல்ல, விற்றால் மட்டுமே இதன் இலாபத்தின் பயனை அனுபவிக்க முடியும். ஆனால் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையும், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தொய்வு நிலையும், இன்றைய நிலையில், தங்கமே சிறந்த முதலீடு எனப்பலரையும் எண்ண வைக்கிறது.\r\n\r\nவங்கிச் சேமிப்புகள்(Bank Deposits) நடுத்தர வர்க்கத்தினராலும், முதியவர்களாலும் மிகவும் விரும்பப் படுவது. அபாயமில்லாதது(Risk free). பரிவர்த்தனைகள் (Transactions) எளிமையானவை. ஆனால், இதில் வரவு, சற்றே குறைவுதான். கடன் பத்திரங்கள் (Bonds) பொதுவாக வங்கிச்சேமிப்புகளை விட அதிகமாகவும், பங்குகளை விடக் குறைவாகவும் லாபம் ஈட்டித்தரும் முதலீடுகள்.\r\n\r\nபங்குகளைத் துணிகரமான முதலீடுகள்(Risky investments) என வகைப்படுத்தலாம். இவ்வகை முதலீடுகளில், லாபம் வர எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ, அதே அளவு போட்ட முதல்(capital) பறிபோகவும் வாய்ப்பு உள்ளது என்பதால், முன்பெல்லாம், நடுத்தர மக்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு காட்டியதில்லை. ஆனால், நிலைமை மாறிவருகிறது. . மக்கள் இன்று விரைவாக பணத்தைப் பெருக்க விரும்புகிறார்கள். எனவே, பங்குச்சந்தை முதலியவற்றில் துணிந்து இறங்குகின்றனர்.எனவே, பங்குச் சந்தை பற்றிய அறிவு இன்று அவசியமாகிறது.\r\n\r\nசரி. பங்கு என்றால் என்ன? அதற்கு முதலில் விடை வேண்டுமல்லவா?\r\n\r\nபங்குகள்:\r\n\r\nநீங்கள் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறீர்கள். அதற்கு, மூலதனம்(capital) தேவையல்லவா? தொழில், சிறிய அளவில் இருக்குமானால், உங்கள் கைப்பணத்தைப் போட்டால் போதுமானது. அதுவே சற்றுப் பெரிய அளவில் இருக்குமானால், உங்கள் கைப்பணம் போதாமல், கொஞ்சம் வெளியில் கடன் வாங்குவீர்கள். மிகப் பெரிய அளவில் நடைபெறும் தொழில் அல்லது வியாபாரமானால், தேவைப்படும் மூலதனத்தைத் திரட்ட நீங்கள் பங்குகளை வெளியிடலாம். அதாவது, இதன் மூலம், பொதுமக்கள் பலரும் உங்கள் நிறுவனத்தில் முதலீட்டாளர்களாகின்றனர்.\r\nஉதாரணமாக, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டால், அதைப் பத்து ரூபாய் முக மதிப்புள்ள(Face value) 10 லட்சம் பங்குகளாக்கி, பொது மக்களிடம் விற்கலாம். பொதுமக்கள் தமது வசதிக்கேற்ப, அப்பங்குகளில் முதலீடு செய்வர்.\r\n\r\nஇதனால் என்ன பயன்?\r\n\r\nநிறுவனதாரர், தமது கைப்பணத்தையோ, கடன் வாங்கிய பணத்தையோ முதலீடு செய்தால், நட்டமோ லாபமோ அவரை மட்டுமே சார்ந்தது. ஆனால், பங்குகளை வெளியிடுவதன் மூலம், நட்டம் லாபம் இரண்டுமே பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வாங்கிய தொகைக்கு வட்டி எதுவும் கிடையாது. லாபம் வந்தால், பங்காதாயம் ( dividend) கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். என்ன? பங்குகளை வெளியிட்டபின், அந்நிறுவனம், தனி நபருக்குச் சொந்தமானது என்ற நிலையில் இருந்து மாறி, பங்கு நிறுவனம் ஆகிவிடுகிறது.\r\n\r\nஇத்தகைய எல்லாப் பங்குகளுமே, பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்படுமா? நாம் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய வேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பன குறித்து நமது அடுத்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.\r\n\r\n- கி. பாலகார்த்திகா

Check Also

செயற்பாட்டு முகாமைத்துவம் – i

மூன்றே கேள்விகளும் சில சுழற்சிகளும்\r\n\r\nவழமையாக, வேலையில் ஓர் அணியினுடையதோ தனிப்பட்ட ஒருவரதோ செயல்றிறன் எதிர்பார்த்த அளவில இல்லாமக் குறைஞ்சு போயிருந்தா, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *