Home > அரசியல் > உதயன்: உறுதியின் உறைவிடம்

உதயன்: உறுதியின் உறைவிடம்

யாழ். குடாநாட்டிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழுக்கு ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\r\n\r\nஇந்த விருது எந்த வகையிலும் உதயனுக்கு அங்கீகாரம் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், உதயன் நாளிதழின் சேவை என்பது அதற்கும் அப்பால் பல்லாயிரம் மடங்கு பெரியது. அதன் பணி பல்லாயிரம் மடங்கு துணிச்சல்மிக்கது. அதன் வளர்ச்சியும் பல்லாயிரம் மடங்கு விஸ்வரூபம் உடையது.\r\n\r\n


\r\n\r\nஇத்துணை பெரிய வளர்ச்சியை அடைந்துள்ள உதயனின் கடந்த காலத்தைச் சற்றுத் திரும்பிப் பார்த்தால் அது நிச்சயம் – அது அன்றுமுதல் தமிழ்த்தேசியத்துக்காக ஓயாது குரல் கொடுத்த பெருமையைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கும். அதற்காக எத்தனையோ இடர்களைச் சந்தித்ததாக இருக்கும்.\r\n\r\n- காலம் காலமாக தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்காப் படையினர், இந்தியப் படையினர், ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களைச் சந்தித்ததாக இருக்கும்.\r\n\r\n- இந்த ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, தமிழ்த்தேசியத்துக்கு விடாப்பிடியாக தனது குரலைக் கொடுத்துவந்ததால் ஆசிரியர் பீட உறுப்பினர்கள், ஊழியர்கள் என பலரை இழந்த கொடுமை நிறைந்ததாக இருக்கும்.\r\n\r\n- அச்சேறிய நாளிதழை அதிகாலை விநியோகிக்கக் கொண்டு செல்லும்போது அவற்றைப் பறித்தும் எரித்தும், கொண்டு சென்றவர்கள் தாக்கப்பட்டும், ஒரு தடவை சுட்டுக்கொலை செய்யப்பட்ட பயங்கர சூழ்நிலையை எதிர்நோக்கியதாகக்கூட இருக்கும்.\r\n\r\n- எதற்குமே அஞ்சாது தன் கடமையைச் செய்த உதயன் தடைசெய்யப்பட்டு அரசினால் இழுத்து மூடப்பட்டதாகவும் இருந்திருக்கிறது. இந்தளவு கடின, கொடிய பாதையினால் பயணம் செய்துகொண்டிருக்கும் உதயனின் ஆரம்பகாலம் முதலான அனபவங்களைச் சற்று அலசினால்….\r\n\r\n1980 களில் பிரசுரமாகிக்கொண்டிருந்த தினபதி நாளிதழிலிருந்து வெளிவந்த மூத்த ஊடகவியலாளர்கள் சிலர் இணைந்து 1985 ஆம் ஆண்டு உதயனை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.\r\n\r\nதமிழீழத்தேசியத்தின் குரலாக – தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் ஒரு ஜனநாயக ஒலியாக – தமிழ்மக்களின் அபிலாஷைகளுக்கான போராட்டத்தின் முதுகெலும்பாக – தமிழர்களின் விடிவை நோக்கிய இலட்சியக்கனவில் தானும் ஒரு அங்கமாக – அடியெடுத்து வைத்த உதயன் -\r\n\r\nகொள்கையில் பிசகாத உறுதி மிக்க பயணத்தைத் தொடங்கியது.\r\n\r\nஎத்தனையோ நாளிதழ்கள் அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த போதிலும் அவற்றுக்குப் போட்டியாக, செய்திகளில் தரத்தையும் உண்மையையும் பேணி ஊடக தர்மத்துக்கு அமைவான பாதையில் தொடர்ச்சியாகப் பயணித்தது.\r\n\r\nஉதயன் தொடங்கிய காலப்பகுதியில் வெளிவந்த பல நாளிதழ்கள் ஆக்கிரமிப்புச் சக்திகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி தமது ஊடகங்களை இழுத்து மூடிவிட்டனர். இன்னும் பல ஊடகங்கள் தமது இடங்களை மாற்றிப் பணிபுரிந்தன.\r\n\r\nஆனால், தனது இருப்பிலும் தமிழ்மக்களுக்கு தான் வழங்கவேண்டிய பொறுப்பிலும் சற்றும் தளம்பாத உதயன் தனது பணியைத் தொடர்ந்து செவ்வனே மேற்கொண்டது.\r\n\r\nசந்தித்த சவால்கள்\r\n\r\nஉதயன் தனது பாதையில் சந்தித்த சவாலான சம்பவங்களை நோக்கினால் -\r\n\r\nஈ.பி.டி.பி. குடாநாட்டினுள் தனது ஆக்கிரமிப்பு கால்களை ஆழப்பதித்த காலம் முதல் – 1999 முதல் – உதயன் பத்திரிகை மீது தொடர்ச்சியாக கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. தொலைபேசி மூலம் ஆசிரியர் பீடத்துக்கு அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வந்தன.\r\n\r\nயாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது கொழும்பில் அப்போதிருந்த உதயன் அலுவலகத்தின் மீதும் கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. உதயனின் சகோதரப் பத்திரிகையான சுடரொளி மீதும் சரமாரியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\r\n\r\nதேசியத்தின் வழியில் மக்களுக்காக வெளிவந்த உதயன், தேசவிரோதக் குழுக்களுக்கும் அவர்களது நடவடிக்கைகளுக்கும் மிகுந்த தடையாக அமைந்ததால், உதயன் தொடர்ச்சியாக இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கியது.\r\n\r\n2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி அப்போதைய சந்திரிகா அரசாங்கத்தால் ஊடக அமைச்சர் ஆரிய ரூபசிங்கவின் பணிப்பின் பேரில் தடைசெய்யப்பட்டு இழுத்து மூடப்பட்டது. இரவோடு இரவாக உதயன் அலுவலகத்துக்கு வந்த சிறிலங்கா காவல்துறையினர், அலுவலகத்தை 22 இடங்களில் சீல் வைத்து இழுத்துமூடி, ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றினர். சில மாதங்களின் பின்னர் தடை நீக்கப்பட்டு – பல நிபந்தனைகளுடன் – மீள இயங்க அனுமதிக்கப்பட்டது.\r\n\r\n2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி உதயன் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் மோட்டார்சைக்கிளில் – நாவலர் வீதியிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சமயம் – அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றில் வந்தவர்கள், உதயன் பிரதம ஆசிரியரைக் கொலை செய்யும் முயற்சியுடன், அவர் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டுச் சென்றனர்.\r\n\r\nசம்பவத்தில் ஆசிரியர் தெய்வாதீனமாக உயிர்தப்பினார். அவரது ஓரு கால் முறிந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சையளிக்கப்பட்டு பின்பு குணமானார்.\r\n\r\n2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி – உலக ஊடக சுதந்திர தினத்தன்று – உதயன் அலுவலகத்துள் புகுந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் விளம்பரப் பகுதியில் இருந்த ஊழியர்கள் இருவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு அப்பகுதியிலிருந்த கணனிகளை அடித்து உடைத்துச் சேதமாக்கி, ஆசிரியர் பீடத்திலிருந்தவர்களைத் தேடி உள்ளே நுழைந்தனர்.\r\n\r\n“குகநாதன் எங்கே?குகநாதன் எங்கே?” என்று உதயனின் செய்தி ஆசிரியர் குகநாதனின் பெயரைக் கூறிக் கத்தியபடி அலுவலகங்களுக்குள் புகுந்தனர். அங்கிருந்தவர்கள் அனைவரும் அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்ற வேட்டொலிகளைக் கேட்டு ஓடிச்சென்று ஒளித்துவிடவே, வந்த ஆயுததாரிகள் திரும்பிச்சென்றனர். தெய்வாதீனமாக ஆசிரியர் பீடத்திலிருந்த எவருக்கும் எதுவும் நடைபெறவில்லை ஆயினும் – இந்தச் சம்பவத்தில் விளம்பரப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார், ரஞ்சித் குமார் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அலுவலக ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.\r\n\r\n2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி அதிகாலை உதயன் நாளிதழைக் கடைகளுக்குச் சென்று விநியோகித்துவிட்டு, அலுவலகம் நோக்கி வந்துகொண்டிருந்த, உதயன் விநியோக ஊழியர் பாஸ்கரன் அடையாளம் தெரியாதவர்களால், இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.\r\n\r\n2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 10 ஆம் திகதியும் – நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது போன்று – உதயன் அலுவலகத்துக்குள் இரவு திடீரென மதில்களுக்கு மேலால் பாயந்து உள்நுழைந்த ஆயுததாரிகள், ஆசிரியர் பீடத்தினுள் நுழையமுற்பட்டனர். ஆனால், முன்னர் இடம்பெற்ற சம்பவத்துக்குப் பின்னர் உசார்நிலையிலிருந்து அலுவலக பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், ஆயுததாரிகளைக் கைதுசெய்து சென்று விசாரித்துவிட்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது விடுதலைசெய்தனர்.\r\n\r\n2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி காலை உதயன் நிருபர் ரஜிவர்மன் வேலைக்காக அலுவலகம் சென்றுகொண்டிருந்த சமயம் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\r\n\r\n2007 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் திகதி உதயன் அலுவலகத்துக்கு வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகள் ஆசிரியர் வித்தியாதரனைக் கடத்துவதற்காக அவரது அறையினுள் சென்று தேடிவிட்டு, அங்கு அவர் இல்லை என்ற அறிந்ததை அடுத்து திரும்பிச் சென்றுவிட்டனர்.\r\n\r\n2007 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதியன்று ஆசிரியர் பீட உதவியாளர் நிமலராஜா வேலை முடிந்து வீடு சென்றுகொண்டிருந்த சமயம் நாவலர் வீதியில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார். அவரது கதி குறித்து இன்று வரை எந்தத் தகவலும் இல்லை.\r\n\r\nகடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்ட வில்ஸன், சார்ள்ஸ் ஆகிய இருவர் உதயன் நிர்வாக இயக்குநர் சரவணபவனை தொலைபேசியில் கடுமையாக மிரட்டினார். அவர்களைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமது கட்சியின் செய்திகளை வெளியிடாத உதயன் வெகுவிரைவில் அதன் பலனை அனுபவிக்கும் என்று மிரட்டிவிட்டு தொலைபேசியை வைத்தார்.\r\n\r\nகடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி உதயன் ஆசிரியர் வித்தியாதரன் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டார். அவர் ஒரு பயங்கரவாதி என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபாயவினால் குற்றஞ்சாட்டப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கும் அவருக்கும் தொடர்பிருப்பதாகவெல்லாம் கொத்தாபாய ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார். இரண்டு மாதகாலமாக சிறிலங்காவிலுள்ள அனைத்துப் புலனாய்வுத் துறையினராலும் விசாரிக்கப்பட்டார். நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். ஈற்றில் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார்.\r\n\r\nதற்போது குடாநாட்டில் மாநகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிட களத்தில் குதித்துள்ள தமிழ்த்தேச விரோத குழுக்களுக்கு உதயன் தனது எழுத்துக்களால் சாட்டையடி கொடுத்தது. அக்கட்சிகளின் தமிழ்த்தேசிய விரோதக் கொள்கைகளை விமர்சித்தது. இதனைப் பொறுக்காத தமிழ்த்தேச விரோதக் குழுக்கள் கடந்த மாதம் உதயன் நாளிதழ்களைப் பறித்து வீதியில் கும்பல் கும்பலாக போட்டு எரித்தன.\r\n\r\nஇதன்பின்னர், கடந்த மாதம் உதயன் பத்திரிகையின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதியுடன் உதயன் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று கடிதம் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.\r\n\r\nஇந்த அச்சுறுத்தல்கள் எவற்றுக்கும் அடிபணியாது, கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி முதல் – சுமார் மூன்று வருடங்களாக – உதயன் அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன், முதன்மைச் செய்தியாளர் குகநாதன் ஆகியோர் உட்பட உதயனின் நிர்வாக குழுவினர் தமிழ்த்தேசியத்தின் குரலாம் உதயனுக்கு தொடர்ந்தும் உயிர்கொடுத்த வண்ணமுள்ளனர். இன்று உதயனுக்கு விருது கிடைத்தபோதும் அதனை வாங்குவதற்குகூட வெளியே வரமுடியாத சூழ்நிலையில் கானமயில்நாதன் மற்றும் குகநாதன் ஆகியோர் அலுவலகத்துக்குள்ளேயே உள்ளார்கள்.\r\n\r\nஉதயனுக்கு விருது கிடைப்பது இது முதல் தடவையன்று.\r\n\r\n1998 ஆம் ஆண்டுக்குரிய துணிச்சலான இதழியலுக்கான விருதை உதயன் பெற்றுக்கொண்டது. 2008 ஆம் ஆண்டு ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து வழங்கிய துணிச்சலான சேவைக்கான விருதையும் பெற்றுக்கொண்டது.\r\n\r\nதற்போது ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான இதழியல் துறையின் உயரிய விருதினை உதயன் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவாக இயங்கும் தமிழ் ஊடகவியலுக்கு சிகரம் வைத்தாற்போல் உதயன் மேற்கொண்டுவரும் ஒப்பற்ற இதழியல் பணி உலக ஊடகவியலுக்கே ஓர் எடுத்துக்காட்டு. சர்வதேச ஊடகவியலுக்கே ஒரு முன்மாதிரி.\r\n\r\nதனது இனத்துக்காக, அந்த இனத்தின் விடிவுக்காக, அவர்களின் உரிமைக்காக, அவர்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் குரல்தரும் உதயன் நாளிதழும் அதன் ஆசிரியர் பீட மற்றும் அனைத்துத் துறை ஊழியர்களதும் சேவை தொடரவேண்டும். அதற்கு புலம்பெயர்வாழ் ஊடக உலகம் என்றுமே உறுதுணையாக நிற்க வேண்டும்.\r\n\r\n \r\n\r\n<p>\r\n\r\n- தெய்வீகன்</p>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *